நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.dissapear tamil நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்’ என்று இலங்கையின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 –1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

‘மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும். அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுதந்திரமாகச் செயற்படுகின்ற விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்கான நீதி விசாரணைகள் 1983ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட நீதிமன்றம் அமைத்தல் வேண்டும்’ என ஐநா மன்றத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த உறுதி இன்னுமே நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தையே காணாமல் ஆக்குவதற்கான முயற்சிகளிலேயே ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையாகிய சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறைகளில்; ஒன்றாக காணாமல் போனோருக்கான அலுவலகமும் காலம் கடந்த நிலையிலே உருவாக்கப்பட்டது. அந்தப் பொறிமுறை வடிவமைக்கப்பட்ட போதிலும், அந்த அலுவலகம் இடம் குறித்து உடனடியாக அமைக்கப்படவில்லை. அத்துடன் அந்த அலுவலகத்திற்கான ஆளணிகளை நியமிப்பதையும் ஆட்சியாளர்கள் இழுத்தடித்திருந்தார்கள்.

காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனாhல் அந்த நிபந்தனையை அரசாங்கம் முறையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்டவில்லை.

அது மட்டுமல்லாமல் அந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள், அதன் மூலம் திரட்டப்படுகின்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்கள் நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படவும் மாட்டாது. அத்துடன் அந்த விடயங்களை முன்னிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவும் மாட்டாது என்றவாறான விடயங்களை உள்ளடக்கி காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை யார் கொண்டு சென்றார்கள், எங்கு, ஏன் அவர்களை மறைத்து வைத்திருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகளை சட்டடத்தின் முன் நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்;டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு வழங்கி, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனிமேலும் இடம்பெறாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கருத்து. உறுதியான நிலைப்பாடு. ஆனால் இதற்கு நேர்மாறாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு உருவாக்கியது.

மக்களுடைய எதிர்பார்ப்பும், ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மான வரையறைகளும் காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் அரசாங்கத்தினால் உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அத்துடன் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதற்கும், அந்த விடயத்தில் நீதியை நிலைநிறுத்துவதற்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம்; ஒருபோதும் உதவமாட்டாது என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அலுவலக உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கத்திலும், அதனைச் செயற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கொழும்பிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரகசியமாகவும், நேரம் கெட்ட வேளையாகிய அதிகாலையிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை நாடிச் செல்லவில்லை. இதனால் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கம் அமைந்துவிட்டது,

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதென்பது மிக மோசமானதொரு குற்றச் செயலாகும். இது கொலைக்குற்றத்தைவிட மோசமானது. கொலை செய்யப்படும்போது இறந்தவருடைய சடலம் கிடைக்கின்றது. ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் முழுமையாகத் தெரியவராத போதிலும் அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. குற்றச் செயல் நடைபெற்றிருக்கினற்து என்பதும் வெளிப்படையாகின்றது.

ஆனால் காணாமல் ஆக்கப்படுவதில் காணாமல் போயிருப்பவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாமல் போகின்றது. யார் அவரைக் காணாமல் ஆக்கியது என்பதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மேலும் காணாமல் போனவருடைய குடும்பத்தினர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கும் மன ஏக்கங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகின்றார்கள். இது ஒருவகையில் அவர்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்கு ஒப்பானதாகும்.

இதனாற்தான் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐநா மன்றமும் அதனை ஒரு குற்றச் செயலாக வரையறை செய்திருக்கின்றது. அத்துடன் அதுவொரு மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. உண்மையில் இது ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. உலகில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை அது குறித்து இன்னுமே அலட்டிக் கொள்ளாத கல்லுளி மங்கன் போக்கிலேயே சென்று கொண்ருக்கின்றது.

இந்த நிலையில்தான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்குதல்களுக்கு மத்தியில் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான போராட்டம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 2000 நாட்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீதியைத் தேடும் அந்தப் போராட்டம் இன்னும் எத்தனை ஆயிரம் நாட்களைக் கடக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை; 49 % பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு!

இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது ஏறக்குறைய 401 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் – மனு கையளிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதத்தை ஐநா கண்காணிக்கவேண்டும் என அரகலய பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான இரண்டு கடிதங்களை அரகலய பிரஜைகள் அமைப்பு கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் கையளித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்;டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என கோரிஅரகலய பிரஜைகள் அமைப்பினர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்தனர்.

கடந்த மாதம் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகச்செய்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தமைக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.

SLPP தலைவர்கள் அனைவரும் கொழும்பிற்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் இன்று (29) கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களையும் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை ; வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர்

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இன்று மாவின் விலை அதிகரித்துவிட்டது அதற்கான காரணம் மாவுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லை விலைநிர்ணயம் இல்லாத காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை ஏற்றப்படுகின்றது

பாணிண் விலையும்அதிகரித்து கொண்டிருக்கின்றது இன்று வரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெதுப்பகங்கள் கொழும்பில் மூடப்பட்டுள்ளன ஏனென்றால் கொழும்பில் மா இல்லை விலையேற்றம் ஆனால் யாழ்ப்பாணத்தில் மா இல்லை தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெறுவது தொடர்பில் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்

மா விலை பற்றி நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினர் அமைச்சுகளில் இருந்து கதைக்கவில்லை ஆனால் முட்டைவிலை பற்றி மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஒரு கிலோமா 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது இனி எதிர்வரும் நாட்களில் பாணின் விலை மாவின் விலை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாதநிலை யேற்படும்

எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும் சில வெதுப்பகு உரிமையாளர்கள் பாணின் விலை அதிகரிக்காவிட்டாலும் நிறையினை குறைப்பார்கள்

இதன் காரணமாக முரண்பாடான நிலை ஏற்படும் எனவே பாணிண் உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அரிசிமாவினை பானுவுடன் கலந்து செய்வதற்கான உக்தியை கையாண்டு கொண்டிருக்கின்றோம். அது வெற்றி அளிக்கும் பட்சத்தில் 50 க்கு 20என்றஅடிப்படையில் அரிசிமாவினை கலந்து பாண் உற்பத்திசெய்வதன் மூலம் தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு பாண் வழங்க முடியும்

தற்பொழுது முட்டை விலை பற்றி அனைவரும் கதைக்கின்றார்கள். ஆனால் பாண் மற்றும் மாவிலை பற்றி யாரும் கவலைப்பதில்லை.

பேக்கரி உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலேயேறியுள்ளன அதன் காரணமாகத்தான் பாண் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

எந்த கடையிலும் கோதுமை மா இல்லை பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது.

பொதுமக்களின் முக்கியமான உணவு பாண் தான் அதற்கு முதலில் விலை நிர்ணயப் செய்யுங்கள் அதைவிடுத்து விட்டு முட்டையை பற்றி கதைத்துக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இன்னும் 15 நாட்களில் சகல வெதுப்பகங்களினையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது இந்தியாவில் வழங்கப்பட்ட மா மூலம் யாழ்ப்பாணத்தில் பேக்கரி உற்பத்தி தக்க வைக்கப்பட்டது ஆனால் இந்த நிலை தொடருமாக இருந்தால் வரும் நாட்களில் பேக்கரியினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Posted in Uncategorized

கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு. (பிரதமர் பா.உ.களான ஜனா, கலையரசனிடம் உறுதி)

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார்.

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பில், கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகம் தொடர்பான குழப்பநிலை மற்றும் அண்மைய பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து கல்முனை தமிழ்ப்பிரிவு அகற்றப்பட்டமை, நீண்டகாலமாக இருந்து வருகின்ற கணக்காளர் நியமிக்கப்படாத பிரச்சினை, காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இக் கலந்துயாடலின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் கல்முனை வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகக் குழப்பங்களுக்குச் சரியானதொரு தீர்க்கமான தீர்வை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை அழையுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

போரதீவு உதயதாரகை பொரு விளையாட்டரங்கைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

இலங்கையின் அரசியல் வராலாறு தற்போது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்;கா அவர்களினால் கல்லோயத் திட்டத்தின் மூலமாக குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தார். 1921ம் ஆண்டு சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலே வெறும் நூற்றுக்கணக்கான சிங்களவர்களெ 0.3 வீதமானவர்களே வாழ்ந்தார்கள். இன்று அது 24 வீதமாக மாற்றப்பட்டிருக்கின்றதென்றால் இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசுகள் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றியுள்ளார்கள்.

தற்போயை நிலையில் இலங்கையின் அனைத்து மக்களுமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கின்றார்கள். நாங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குள் சிக்குண்டு கடந்த 43  வருடங்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை அடக்குவதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த காலங்களிலே அந்தச் சட்டத்தினுடாக தமிழர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், கேள்வியற்று அவர்கள் சிறைகளிலே அடைக்கப்படும் போதும் எவருமே கவலைப்படவில்லை. எந்த இனமும் கவலைப்படவில்லை. அவர்களுக்கென்று வரும்போது தான் அவர்கள் இந்தச் சட்டம் பற்றிக் கவலையுறுகின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் முஸ்லீம் மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அறிந்து கொண்டார்கள். கோட்டா கோ கோம் போராட்டத்தின் பின்பு தற்போது சிங்களவர்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் சிக்கியிருக்கின்றார்கள். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றால் என்ன என்பது தொடர்பில் தற்போது தான் இந்த நாடு வழித்திருக்கின்றது. 20, 30 வருடங்களுக்கு மேலாகவும் தற்போதும் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், வெறுமனே இரண்டு கிழமைகள் சிங்களவர்கள் அந்தத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளாக்கப்படும் போது கொதித்தெழுகின்றார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளும் கூட அந்தச் சிங்கள இளைஞர்களுக்காகப் போராடுகின்றார்கள்.

தற்போது இந்த நாட்டின் பொருளாதார நிலைமையில் மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. மக்கள் மிகவும் கஸ்டமான பொருளாதாரச் சூழலிலே வாழ்ந்து கொண்;டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் இப்படியானதொரு ஆட்சியைச் செய்ய வேண்டுமா? இது போதாதென்று கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தினால் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு ஒரு சட்டம கொண்டு வரப்படுகின்றது. ஒழுங்காக மின்சாரமே வழங்கப்படாத இந்த நாட்டில் 75 வீதம் தொடக்கம் 275 வீதம் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள். நேற்றை தினம் தொடக்கம் 75 வீதத்தால் நீர்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு அரசு அந்த நாட்டுக்குத் தேவையா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் ஜனாதிபதியாக வந்த காலத்தில் இருந்தே எடுத்த முட்டாள்தனமான முடிவுகள் இன்று இந்த நாட்டு மக்கள் அனைவரையுமே படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது. கோட்டபாய இன்று நாட்டை விட்டு ஓடி, இருப்பதற்கும் இடமில்லாமல் அலைகின்றார். அவருக்குப் பதிலாக தற்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகியிருக்கின்றார். நாட்டின் விலை வாசி அதிகரிப்புக்கு ஏற்றவாறு மக்களின் வருமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாது விட்டால் இந்த மக்கள் எங்கு செல்வார்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் இந்த நாட்டில் தமிழ் மக்களைக் கொன்றொழித்தார்கள். 2009 மே மாதம் ஒரு லெட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றொழித்தார்கள். அந்தப் பாவமே அந்தக் குடும்பத்தை வதைக்கின்றது. அந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நமது புலம்பெயர் தமிழ் உறவுகளை முதலீடுகளைக் கொண்டு வருமாறும், அவர்கள் உழைத்த டொலர்களைக் கொண்டு வருமாறும் அழைக்கின்றார்கள்.

இவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதற்காகப் புலம் பெயர்ந்து சென்றார்கள். இந்த நாட்டிலே உங்களது அடக்குமுறை தாங்க முடியாமல், உங்களது கொலைப்பட்டியலில் இருந்து தப்பிச் சென்ற எம் உறவுகளை நீங்கள் அழைக்கின்றீர்கள். அவர்கள் இந்த நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டோம் புலம்பெயர் உறவுகளின் எதிர்காலச் சந்ததியினர் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழலாம் நீங்கள் இங்கு வந்து முதலிடுங்கள் என்று அவர்களிடம் அழைப்பு விடலம். ஆனால், நீங்கள் அதனைச் சிந்திப்பதாக இல்லை. உங்களுக்குப் பொருளாதாரத்திற்கு மாத்திரமே அவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்குச் சென்றமைக்கு இந்த நாட்டின் இடம்பெற்ற யுத்தமே காரணம். இதன் காரணமாக ஆயதங்கள் உட்பட பலவும் வாங்குவதற்காகப் பல பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்தீர்கள். எதிர்காலத்திலே இந்த நாடு சுபீட்சமாக இருக்க வேண்டுமாக இருந்தால் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திவிட்டு புலம்பெயர் தமிழர்களை அழையுங்கள். அவர்கள் நிச்சயமாக இங்கு வந்து முதலிடுவார்கள். இந்த நாட்டின் கடனை அடைப்பதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – சுரேந்திரன் ரெலொ

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைய மத்திய வங்கியின் நாணய சபை இதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இனிமேல் இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகளில் இந்திய ரூபாயை பயன்படுத்தி தங்களுடைய அந்நியச்செலாவணி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

டொலர், பவுண்ஸ் மற்றும் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு நாணயங்களுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாலும், வங்கிகளில் இந் நாணயங்களின் இருப்புக்கள் இல்லாமையினால் ஏற்றுமதி இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் உடனான வர்த்தகங்களும் இதனால் பாதிப்படைந்து இருக்கிறது. இதை சீர் செய்யு முகமாக மத்திய வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கிறத.

ஆகவே தமிழர் தரப்பு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வர்த்தக நடவடிக்கைகளில் சுலபமாக ஈடுபடுவதற்கு இது வழி அமைக்கின்றது. நமக்குத் தேவையான மருத்துவ பொருட்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகள், உணவு, உடை என சகல விடயங்களையும் தருவித்துக் கொள்வதற்கும் ஏற்றுமதி செய்து கொள்வதற்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு வரப்பிரசாதமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பூகோள ரீதியாக எமக்கு அண்மையில் உள்ள பாரிய சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த சந்தை வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.
நாம் இதை முழுதாகத் பயன்படுத்த முயல வேண்டும்.
வர்த்தக முதலீடுகள் மற்றும் நடவடிக்கைகளை விஸ்தரித்து எமது பொருளாதார நிலையை வளப்படுத்தும் சந்தர்ப்பமாக இதை வர்த்தக, முதலீட்டு, உற்பத்தி, ஏற்றுமதி , இறக்குமதிக்கான பாதையாக எமது சமூகம் கையாள வேண்டும்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

இலங்கைக்கு ஆதரவே தேவை; அழுத்தங்கள் அல்ல: சீன தூதுவருக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம்

இலங்கைக்கான சீன தூதுவரின் கருத்துகளை தாம் கவனத்திற்கொண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சீன தூதுவரின் கருத்துகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடுமையான தொனியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சீன தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம். இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம். விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதென கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும். தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சிநிரல்களே, குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன. அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல.

என இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே, தாய்வான் நீரிணையின் இராணுவமயமாக்கல் மற்றும் சீனாவின் Yuan Wang 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி இலங்கைக்கான சீன தூதுவர் எழுதிய கட்டுரை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் மற்றுமொரு ட்விட்டர் பதிவினையும் வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இராஜாங்க அமைச்சர்களை கூடிய விரைவில் நியமிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை

சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு மேலும் தாமதமாகும் பட்சத்தில், கூடிய விரைவில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனுமதியின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம், ஜனாதிபதி தலைமையில் நிதி அமைச்சில் நடைபெறவுள்ளது.