இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவாருங்கள் – இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்து

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

சீனாவிடம் இருந்து நிதி உத்தரவாதம் : இலங்கையின் முயற்சிக்கு IMF வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி, நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும், தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அவர் பாரும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய தரப்பினரிடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

இதற்கிடையில், நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குபவர்களிடம் இருந்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை சலுகையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 2 வருட காலநீடிப்பே வழங்கப்பட்டது.

இதேவேளை இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் எழுத்துமூல உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பு திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தபால் மூல வாக்களிப்பை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்து தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றய கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்த்க்கது.

வாக்குச்சீட்டு அச்சடிக்கும் வாய்ப்புள்ளது: அரச அச்சகர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (7) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாகவும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ள திறைசேரிக்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக, அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.

மேலும் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை மீள்பரிசீலனை செய்து அவற்றை வழங்குமாறும், பொலிஸ் பாதுகாப்புக்காக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்குமாறும் ஆணைக்குழு குறிப்பிட்டதாக கங்கானி லியனகே தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு; 2.9 பில்லியன் டொலர் கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ள சீனா, எக்ஸிம் வங்கி ஊடாக கடன் மறுசீரமைப்பிற்கான எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.

2.9 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான இந்த உத்தரவாத இந்த கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார்.

பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு,பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.

அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்,இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

மின்சாரசபை ஊழியர் எண்ணிக்கையை 40% குறைக்க யோசனை

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.

மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க மின்சாரத்துறை அமைச்சு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காவே மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரசபையின் நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைக்க நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையை எதிர்வரும் மாதம் முதல் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 14 ஆயிரமாக காணப்பட்ட மின்சார சபை சேவையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 22400 ஆக அதிகரித்துள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையில் ஊழியர் குறைப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி,விநியோகம்,மற்றும் இதர சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் செலவுகளை மட்டுப்படுத்தும் போது ஒரு முன்னேற்றகரமான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி – தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

இதன்போது திறைசேரி செயலாளர், அரச அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் திறைசேரி செயலாளர் அதில் கலந்துகொள்ளவில்லை.

இம்மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும் நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.