மனித உரிமைகள் ஆணைக்குழு மின் கட்டணம் அதிகரிக்கப்படின் விசாரணை மேற்கொள்ளும்

ஜனவரியில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாக கருதப்படும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் மின்சார கட்டணம்  அதிகரிக்கப்பட்டால் முறைப்பாடுகள் இல்லாமலேயே இந்த விவகாரத்தில் தலையிட தயார் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதை பொருளாதார நெருக்கடி காரணமாக  ஏற்கனவே பெரும் சுமைகளை சுமக்கும் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும்  உரிமை அரசாங்கத்திற்கோ அதன் பங்குதாரர்களிற்கோ கிடையாது என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் அமைச்சோ அல்லது இலங்கை மின்சார சபையோ மின்சார கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்தால் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் என அதன் இயக்குநர் நிகால் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில், தேவாலயங்களுக்கு பொறுப்பான பாதிரிமார்கள் மற்றும் போதகர்களை சந்தித்து, கலந்துரையாடி, அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தேவாலயங்களுக்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அந்நியர்களை அடையாளம் காண்பதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துறைமுக நகருக்கு தனியான நீதிமன்றம்

கொழும்பு துறைமுக நகர அதிகார வரம்புக்குள் புதிதாக வர்த்தக மேல் நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பாக சட்டத்துறை உயர் அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் துறைமுக நகரப் பகுதியில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

உள்ளுராட்சி வட்டாரங்களை குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிராகரித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மகிந்த தேசபிரியவின் தலைமையில்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கட்சித் தலைவர்கள்  மேற்படி நடவடிக்கையினை கூட்டாக நிராகரித்துள்ளனர்.

அத்தோடு புதிய எல்லை நிர்ணயம் தொடர்பில்  தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் பல்வேறு குறைபாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாது செய்யும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படக் கூடாது.

ஆதாவது அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு தவிர்க்கும் வகையில் வட்டார எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொது அமைப்புகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளினதும் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் எனவும் தனியே அதிகாரிகளால் மட்டும் இவற்றை தீர்மானிக்க விட முடியாது என்றும்  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரோஹாங்கிய அகதிகள் யாழ். சிறையிலிருந்து மீரிகான தடுப்பு முகாமிற்கு மாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை (டிச.22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ஆம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே டிசம்பர் 19ஆம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகானவுக்கு அனுப்ப இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது

பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு

கிளிநொச்சி பரந்தன் பிரதேசத்திற்குட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இரசாயன கூட்டுத்தாபனத்துக்குக்கான காணிகள் எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் இன்று (21) பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாகவும் தமது காணிகளையும் சேர்த்து இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிட்டதுடன் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியாக கல்வி கற்கக்கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை – சுசில்

2023ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பாடசாலைக் கல்வியாண்டில் ஆரம்பப் பிரிவில் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடத்தாமல் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு மதிப்பெண்  அடிப்படையில் மாணவர்  மதிப்பீட்டு செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்க கூடிய பாடசாலை சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எதிர்காலத்தில் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவு அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக மேலதிக பயிற்சி,கல்வி  வாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான மாற்றங்கள் செய்து வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். விடுமுறை நாட்களை குறைத்து அதிகளவில் வேலை செய்வதன் மூலம் அனைத்துப் பாடத்திட்டங்களும் உள்ளடக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீளமைக்கப்படும்.

தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்குவது சிரமமானதாக இருந்தாலும்  குறித்த நேரத்தில் அவை மாணவர்களுக்கு  வழங்கப்படும். மேலும் மாணவர்கள் மத்தியில்  ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அபிவிருத்திக்கு இந்திய ஆதரவு – உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (டிச. 21) சீதாவக்க தாவரவியல் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சீதாவக்க தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றினை இந்திய உயர்ஸ்தானிகர் நாட்டினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டதாவது,

இலங்கை இந்திய நட்புறவு சில ஆண்டுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு காலம் காலமாக வலுப்பெற்றுள்ளது.

ஜி 20 நாடுகளின் தலைவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் அயல்நாடுகள் பல்வேறு நலன்களை பெற்றுள்ளன.

உலகில் பலம் வாய்ந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

உயிர் பல்வகைமைத்தன்மை நிறைந்த இத்தகைய தாவரவியல் பூங்காக்களை பாதுகாப்பது அனைவரது பொறுப்பாகும்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சீதாவக்க இராசதானி முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு இந்த தனித்துவமான சூழலின் இயற்கையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறுகையில்,

இலங்கையின் பசுமை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பொருளாதார ஒத்துழைப்புடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் இந்தியாவின் முழு ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என்றார்.

இயற்கை வளங்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகும். இந்தியாவின் மகத்தான உறவுகளையும் வரலாற்றையும் நினைவுகூருவதற்கும் அந்த உறவுகளை வலுப்படுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை பிலிப் குணவர்தன போன்றவர்கள் நினைவுகூர வேண்டும்.

எமது பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் சூழல், நட்பு, கொள்கைகளை இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது குறிப்பிடப்பட்டது.

10 மணித்தியால மின்வெட்டு உண்மைக்குப் புறம்பானது

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் 10 மணித்தியால மின்வெட்டு ஏற்படும் என பொறியியலாளர்கள் சங்கத்தின் அறிவிப்பையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.