ராஐபக்ச அரசின் உள்ளக பொறிமுறையை தமிழர்கள் நம்பத் தயார் இல்லை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான  சபா குகதாஸ் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச சந்தித்த போது குறிப்பிட்ட உள்ளகப் பொறிமுறை குறித்து கருத்து வெளியிடும் போதே ரெலோவின் இளைஞர் அணித்த தலைவர் இக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டபாய ராஐபக்ச ராஐபக்ச ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை 20/09/2021 சந்தித்த போது பல விடையங்களை வாய்மூல வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. காரணம் போர்க் குற்றங்கள் மனிதப் படுகொலைகள் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. அத்துடன் உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலே பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அனைவருமாக சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியான விசாரணை வேண்டுமேன கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கோட்டபாய ராஐபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த போது உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தார்கள் தற்போது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது எவ்வளவு மோசமான செயல் பொறுப்புக் கூறல் இன்றி உண்மைகளை மூடி மறைக்க முயல்கிறார்கள். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவத்தினர் சிவில் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை நீதியை பெற்றுக் கொடுக்குமா? அத்துடன் உள் நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடன் பேச முடியாது காலத்தைக் கடத்தும் கோட்டாபய வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தடை விதித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையாக இல்லையா?

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுக்கான முடிவாக அமையும்.

 

Posted in Uncategorized

ஐ.நா கூட்டம் நடப்பதாலேயே இராஜினாமா: லொஹான் விளக்கம்!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் இடம்பெறும் வேளையில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கடி ஏதும் ஏற்படாதிருக்கும் வண்ணமே தாம் இராஜினாமா அறிவிப்பை செய்ததாக விளக்கமளித்துள்ளார் லொஹான் ரத்வத்த.

எனினும், தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையெனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்கிற வகையில் தமது கடமையைச் செய்யவும் சிறைக்கைதிகளின் நலன் விசாரிக்கவுமே தாம் அங்கு சென்றதாக லொஹான் கூறுகின்ற போதிலும், வெலிகடை சிறைச்சாலையில் லொஹானால் ஏற்பட்ட பதற்றம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் ஜனாதிபதி- கூட்டமைப்பு கருத்து – சுரேந்திரன்

புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டு முதலீடு செய்ய வரும்படி அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்,

புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டு முதலீடு செய்ய வரும்படி அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்க நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்கள் சில வேடிக்கையான கருத்துக்களை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் வரவேற்பதாக கூறியிருப்பது வீட்டு கதவை இறுக்கி பூட்டி வைத்துவிட்டு விருந்தாளிகளை உணவருந்த உள்ளிருந்து அழைப்பது போன்ற ஒரு செயல்பாடு. புலம் பெயர் அமைப்புகள் பலவற்றை தடை செய்ததோடு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உறவுகள் அச்சம் அடைய கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு இங்கு வந்து முதலீடு செய்யலாம் என்று ஐநா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

முதலாவதாக முதலீட்டாளர்கள் ஒரு நாட்டை நோக்கி வருவதற்கான அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல் மிக அவசியம் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள தவறி இருக்கிறார். முதலீட்டாளர்கள் வழமையாக இவற்றையே முதலில் பிரதானமாக கருத்தில் எடுத்து முதலீடுகளை தீர்மானிப்பார்கள்.

அரச நிர்வாகத்தில் இராணுவமயமாக்கல் தொடர்கிறது. அரசியல் பிரச்சனைகள் , மனித உரிமை விடயங்கள் அரசால் தீர்வு காணப் படாமல் தொடர்கிறது. உள்ளகப் பொறிமுறை ஊடாக நியாமான தீர்வுகள் எந்த இனத்தவருக்கும் கிட்டாது என முழு நாடுமே உணர்ந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தால் போல அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க, நீதி வழங்க உள்ளக பொறிமுறை தவறியுள்ளது மாத்திரமல்ல அவற்றிற்கு அரசு துணை போவதை எடுத்து காட்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வேடிக்கையானது.
அரசு இனியும் அரசியல் தீர்வு, மனித உரிமை, நீதிப் பொறிமுறை, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை நிலைநாட்ட சர்வதேச சமூகத்தோடு ஒத்திசைந்து இதய சுத்தியோடு செயல்படத் தவறினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதள பாதாளத்துக்குள் தள்ளுவதாகவே முடியும்.

Posted in Uncategorized

அரசாங்கத்துக்குள் பனிப்போர் ; 10 பங்காளிகள் எதிர்ப்பு

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 

Posted in Uncategorized

எமக்கான திறவுகோல் ரோம் சாசனத்திலேயே உள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர, ஓம்பி-இடத்தில் அல்ல என்று, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், வவுனியாவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், முதலில், சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக வேண்டும் என்றும் பின்னர் போர்க்குற்றம் செய்ததாக நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறினர்.

ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பிறகு, எங்கள் 146,000 தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம் என்றும், அவர்கள் கூறினர்.

‘மேலும், 90,000 விதவைகளையும்  50,000 ஆதரவற்றோர் மற்றும்  25,000க்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கை நாங்கள் தாக்கல் செய்வோம்.

‘தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம், சுமந்திரன் தனது  வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

‘அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம் சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலைமையே உள்ளது.

‘எனவே, நாங்கள் இந்தவிடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம், சில செயல்களைக் செய்து காட்டுங்கள்,  ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர.உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள்.

‘நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள். இது தமிழர்களுக்கான  நியாயம் இல்லை. சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் தங்கள் துன்பங்களுக்கு நீதியையும் பொறுப்பு கூறலையும்  விரும்புகிறார்கள்.

‘நீங்கள் தமிழர்களின் எதிரிகள் போல் செயல்படுகிறீர்கள், எனவே உங்கள் நிலுவையில் உள்ள இராஜினாமா கடிதத்தை முடித்து எங்களை தனியாக விட்டுவிடுமாறு நாங்கள் கேட்கிறோம். நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு  செய்த தீங்குகளை  கடவுள் மன்னிப்பார்’ என்றனர்.

Posted in Uncategorized

விரைவில் கொவிட் தடுப்பூசி அடடை கட்டாயமாக்கப்படும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கையில், கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டிய அனைவரும் பூரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கையில் இன்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று இதுவரையில் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது.

இதே வேளை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 93 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

சந்திரிகா வெளியிட்ட மங்கள சமரவீரவின் இரகசிய கடிதத்தால் பரபரப்பு

சிறிலங்காவின் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவுக்கு, மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எழுதிய இரகசிய கடிதமொன்றை 15 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்டு சிறிலங்காவின் முன்னாள் அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ அரசதலைவராக நியமிக்கப்பட்ட போது, மங்கள சமரவீர தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையே சந்திரிகா குமாரதுங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அண்மையில் மரணித்த சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதியிட்டு, தனது கைப்பட மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதியிருந்ததாக கூறப்படும் கடிதத்தை சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

மங்கள சமரவீர, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த போது அந்தப் பதவில் இருந்து அவரை நீக்குவதற்காக நடத்தப்பட்ட, கட்சி நிறைவேற்றுச் சபை மற்றும் மத்திய குழுக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவிக்கும் வகையில் குறித்த கடிதத்தை அவர் அனுப்பியதாக சந்திரிகா குமாரதுங்க தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கௌரவமான முறையில் விலகுவதாக மங்கள அறிவித்திருந்தாலும், அவரின் பிறந்தநாள் அன்று அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஸ விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனுர பண்டாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஆகியோருக்கே அதனை எதிர்க்கும் திறன் அப்போது இருந்தது எனவும், தனது மனச்சாட்சியின் பிரகாரம் உடன்படாத போதிலும் மஹிந்தவின் தலைமையை எதிர்க்க மாட்டேன் என்று பல சந்தர்ப்பங்களில் வாய் மொழியாகவும் எழுத்து மூலமாகவும் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடயத்தின் இரகசிய தன்மையை பேணும் வகையில் தனது சொந்தக் கையெழுத்தில் மங்கள சமரவீர குறித்த கடிதத்தை எழுதினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த கடிதத்தை எழுதி, சரியாக பத்து மாதங்கள் கழித்த பின்னர் எந்தக் காரணமும் இன்றி மங்கள சமரவீர அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மங்கள சமரவீர தனது கொள்கையைக் கைவிடவில்லை என சந்திரிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மங்கள சமரவீரவினுடையது எனக் கூறப்படும் இந்தக் கடிதம் தற்போது தென்னிலங்கை அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானசாலைகள் திறப்பு குறித்து கருத்து வெளியிட முடியாது – சுகாதார அமைச்சின் பேச்சாளர்

மக்கள் மத்தியில் சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்ட விடயம் குறித்து, எந்தவொரு கருத்தையும் ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை பற்றி சரமாரியான கேள்விகளை ஊடகவியலாளர்கள் முன்வைத்தபோது அவற்றிற்கு பதில் அளிப்பதை தவிர்த்த ஹேமந்த ஹேரத், குறித்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி தம்மை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

“மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே அது குறித்து தற்போது கருத்து வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது.

எனவே இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பத்திலிருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இது குறித்த கேள்விகளை தொடர்ந்தும் கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டாம்

. காரணம் என்னால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்பட்டால் நான் தனித்து தான் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். எனவே என்னால் இதுபற்றி எதனையும் கூற முடியாது” என்றார்.

வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசுக்கும் துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுஷோலுவுக்குமிடையில் சந்திப்பு

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிசுக்கும் துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுஷோலுவுக்குமிடையில் செப்டம்பர் 17ஆந் திகதி சந்திப்பொன்று நியூயோர்க்கில் நடைபெற்றதாக இலங்கை வெளியாட்டமைச்சு இன்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக, நியூயோர்க்கில் உள்ள துருக்கிய நிரந்தரத் தூதரகத்தின் சான்சரிக் கட்டிடத்திலுள்ள துருக்கி இல்லத்தில் வைத்து 2021 செப்டம்பர் 17ஆந் திகதி, வெள்ளிக்கிழமை இருதரப்பு சந்திப்புக்காக துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மெவ்லட் சவுஷோலு இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வரவேற்றார்.

2016ஆம் ஆண்டு தான் இலங்கை மேற்கொண்ட இரண்டு நாள் விஜயத்தை பயணத்தை வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். விஜயத்தின் போது அவருக்கு வழங்கப்பட்ட ஏற்பாடுகளை அமைச்சர் பாராட்டினார். துருக்கிக்கான தனது பல விஜயங்களை அன்போடு நினைவு கூர்ந்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தனக்குக் கிடைத்த உயரிய அனுபவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார். தனது நாட்டில் இலங்கையின் கௌரவ துணைத்தூதுவர் ஒருவர் விரைவில் பதவயேற்கவிருப்பது குறித்து துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

தமது பரஸ்பர விஜயங்களை மதிப்பீடு செய்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் சிறந்த உறவுகளை, குறிப்பாக பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஏனைய மட்டங்களிலான விஜயங்கள் மற்றும் தொடர்புகளின் மூலம் பிணைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த தருணமாகும் என இரு வெளிநாட்டு அமைச்சர்களும் குறிப்பிட்டனர். இரு நாடுகளும் புவியியல் ரீதியாக வெகு தொலைவில் இருந்தாலும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மிக நெருக்கமாக இருந்ததாக வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு குறிப்பிட்டார். வென்டிலேட்டர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை வழங்கி கோவிட்-19 தொற்றுநோயின் போது துருக்கி இலங்கைக்கு தாராளமாக நல்கிய ஆதரவுகள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், சுனாமியின் பின்னர் வீட்டுவசதிகளை வழங்கி நல்கிய ஆதரவுகளைப் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தகம் 100 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலையை 80% இலிருந்து பல்வகைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், கட்டுமானம் மற்றும் மருந்து போன்ற அபிவிருத்திப் பகுதிகளில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான மிகப்பெரிய ஊக்குவிப்பு இரு நாடுகளுக்கும் இடையே இருப்பதாகக் குறிப்பிட்டார். துருக்கி நிபுணத்துவம் பெற்றுள்ள தொழில்கள் மற்றும் உள்ளூர் சந்தை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மருந்துகளைத் தயாரிப்பதற்காக குறிப்பிட்ட பொருளாதார சுதந்திர வலயங்களைக் கொண்டு இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை விரும்புகின்றது. துருக்கிய கட்டுமானத் துறை உலகின் இரண்டாவது பெரியதாகும் என்றும், தாம் தமது பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பல திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் துருக்கிய வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுத் திட்டங்கள், முதலீடுகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு வாய்ப்பு;களை வழங்க உதவும் விலக்களித்தல், இரட்டை வரிவிதிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக இரு அமைச்சர்களும் ஆர்வம் தெரிவித்தனர். முக்கியமான உலகளாவிய சர்வதேச மையமாக தமது வகிபாகத்தை அதிகரிக்கும் துருக்கியின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் போன்ற உட்கட்டமைப்புக்கான வெற்றிகரமான தனியார் திட்டங்களுக்கான அனுபவத்தை துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்காரா மற்றும் கொழும்புக்கு இடையேயான விமான இணைப்பை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்தியத்திற்கான குறியீட்டுப் பங்கு விமானங்கள், புதிய நிலைகளுக்கான இணைப்புக்கள் மற்றும் உறவுகளை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உட்பட, மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். இறுதி செய்யப்பட்ட மற்றும் இறுதிக் கட்டங்களில் உள்ள ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் போது இலங்கையில் இரண்டு துருக்கி நாட்டவர்கள் மரணித்தமைக்காக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறத்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கினார். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் தொடர்புகளிலும் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வெளிப்படுத்தியதுடன், மனித உரிமைகள் அரசியல்மயமாக்கப்படுவதையும், சில தரப்பினர்கள் மனித உரிமைகளை கருவிகளாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதையும் எதிர்த்த அதே வேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அரங்குகளில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக உறுதியளித்தனர்.

தான் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும், எனினும் கோவிட் தொற்றுநோயின் காரணமாக விஜயத்தை ஒத்திவைக்க நேர்ந்ததாகவும் வெளிநாட்டு அமைச்சர் சவுஷோலு குறிப்பிட்டார். எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் துருக்கிய வெளிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

நட்புறவு மற்றும் நெருக்கமான உறவை விரிவாக்குவதற்கு இரு அமைச்சர்களும் எதிர்பார்த்ததுடன், கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்புகளை மேலும் ஆரம்பிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தனர்.