ராஐபக்ச அரசின் உள்ளக பொறிமுறையை தமிழர்கள் நம்பத் தயார் இல்லை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான  சபா குகதாஸ் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச சந்தித்த போது குறிப்பிட்ட உள்ளகப் பொறிமுறை குறித்து கருத்து வெளியிடும் போதே ரெலோவின் இளைஞர் அணித்த தலைவர் இக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டபாய ராஐபக்ச ராஐபக்ச ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை 20/09/2021 சந்தித்த போது பல விடையங்களை வாய்மூல வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. காரணம் போர்க் குற்றங்கள் மனிதப் படுகொலைகள் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. அத்துடன் உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலே பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அனைவருமாக சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியான விசாரணை வேண்டுமேன கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கோட்டபாய ராஐபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த போது உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தார்கள் தற்போது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது எவ்வளவு மோசமான செயல் பொறுப்புக் கூறல் இன்றி உண்மைகளை மூடி மறைக்க முயல்கிறார்கள். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவத்தினர் சிவில் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை நீதியை பெற்றுக் கொடுக்குமா? அத்துடன் உள் நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடன் பேச முடியாது காலத்தைக் கடத்தும் கோட்டாபய வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தடை விதித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையாக இல்லையா?

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுக்கான முடிவாக அமையும்.