தேர்தல் சட்டங்கள், தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண விசேட குழு

தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்காக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பிரேரணையை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன்போது சபை ஒத்திவைப்பு வேளையின்போது, சபை முதல்வரும அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பிரேரணையை சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையின் பிரகாரம், தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் காண்பதும் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை செயற்படுத்த அவசியமான திருத்தங்களை முன்மொழிவதும் இந்த குழுவின் கடைமையாகும்.

அத்துடன் இந்த குழுவின் தவிசாளரும் 15 பேர்களைக் கொண்ட குழு உறுப்பினர்களும் சபாநாயகரினால் நியமிக்கப்படுதல் வேண்டும். குறித்த குழு அதன் முதலாவது அறிக்கையை முதலாவது அமர்விற்கு பின்னர் ஆறுமாத காலங்களினுள் அல்லது பாராளுமன்றத்தினால் நீடிக்கப்படும் காலப்பகுதியினுள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டாலும் காலத்துக்கு காலம் இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் கூடுவதற்கும் இந்த குழுவுக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும் என பிரேரணையில் தெரிவிக்கப்படுள்ளது.

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1000 பயணிகளைக் கையாளும் அளவிற்கு முனையம் உருவாக்கப்படும் என்றும் பெரிய விமானங்களும் தரையிறங்கும் வகையில் ஓடுபாதை மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் சர்வதேச விமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும் கொரோனா தொற்றுநோய் காரணமாக அதைத் தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரி மாணவிகளுக்கு கலாச்சாரச் சீருடைகள் ரெலோ அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது

இன்று பிற்பகல் (05-04-2021) திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் அணிந்து வருவதற்காக கலாச்சாரச் சீருடைகள்
திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவி 22 000 ரூபாய் தமிழ் ஈழ விடுதலை இயக்க பிரித்தானிய கிளையின் உறுப்பினர்,ரெலோ ஆரம்பகால உறுப்பினர் கந்தளாயைச் சேர்ந்த குட்டி அண்ணன் அவர்களின் பிள்ளைகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இதற்காக திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அவர்களிடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் ரெலோ நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர், மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்க மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.

யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை நீடிப்பு

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் (05) மீள ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதை கருத்திற்கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக யாழ். கல்வி வலய பாடசலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் (03) 07 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னாரில் துக்க தினம் அனுஸ்ரிப்பு

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் (5) மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு துக்க தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகள் பறக்க விடப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய தினம் இறந்த ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நேற்று (4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இறுதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆயரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணி வரை மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு ஊர்தி பவனியூடாக கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மாலை 5 மணி முதல் பல ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized

தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவர் – சரத் வீரசேகர எச்சரிக்கை

அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது,

“அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பதிலளித்துள்ளார்.

Posted in Uncategorized

வலி கிழக்கில் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டது பிரதேசசபை

மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் தமிழ்த் தேசிய மனித நேயப்பணியை நினைவுகூர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆலுவலகங்களிலும் பொது இடங்களிலும் கறுப்புக்கொடிகள் பிரதேச சபையினால் பறக்கவிடப்பட்டுள்ளன.

ஆயரின் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ள இன்றைய தினத்தினை (திங்கட்கிழமை) துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு சமயங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த மறைந்த ஆயரை அஞ்சலிக்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பெருந் தலைமைகள் வியூகம் ! நாட்டில் இடம்பெறவுள்ள பெரிய மாற்றம் ?

அரசாங்கதத்திற்கு எதிராக மாற்று அணியொன்றை உருவாக்குவது குறித்து தேசிய அரசியலில் திரைக்கு பின்னால் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

சிரேஷ்ட அரசியல்தலைவர்களை பின்னணியாக கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவது குறித்து பல தரப்புகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிக் விக்கிரமசிங்க, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை கடந்த பல வாரங்களாக முன்னெடுத்திருந்ததுடன் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன் ஆகிய நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தண முன்னெடுத்திருந்தார்.

மாற்று அரசியல் சக்தியை உருவாக்கும் செயற்பாட்டில் பல சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த கூட்டணியானது ரணில் விக்கிரமசிங்கவையும் உள்வாங்கும் வகையில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

அதனொரு முக்கிய மைல் கல்லாகவே கடந்த திங்கட்கிழமை (மார்ச் மாதம் 29ஆம் திகதி) ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தண தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு காலை 5.30 மணியளவில்தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில சிரேஸ்ட அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து அறிவித்தார்.

ஏற்கனவே குறித்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பல காரணிகளின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் கட்டாயமாக சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கான அனுமதிக்காகவே வஜிர அபேவர்தன் தொடர்புக்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் அன்றைய தினம் மாலை திட்டமிடப்பட்டப்படி சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள்சிலரும் சிரேஸ்ட அரசியல் தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்கவுடனான அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தனர்.

அராங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளும் போக்குகளும் நாட்டை விரைவில் பாதாளத்தில் தள்ளிவிடும் .

பொது மக்கள் விரக்தி நிலை மற்றும் நாட்டின் பல்துறைசார் பின்னடைவுகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரிந்து செயற்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. மாறாக மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவதனால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சார்பில் கலந்துக் கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விடயத்தை நான் குறிப்பிட்டேன். ஆனால் நான் அன்று கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. நம்பவும் இல்லை. நெல் குருவியின் கதையே நினைவுக்கு வருகின்றது.

நெல்லை உண்ண சென்ற குருவிகள் வேடன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டன. வலையிலிருந்து தப்பிக்க தனித்தனியாக போராடிய குருவிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பின்னர் அனைத்து குருவிகளும் ஒன்றிணைந்து முயற்சித்தன. இதன் போது குருவிகளால் வலையை தூக்கிக்கொண்டே தப்பித்து பரந்து செல்ல முடிந்தது.

அதுபோல தான் நாம் இன்று வேடனின் வலையில் சிறைப்பட்டுள்ளோம். தப்பிப்பதாயின் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும்.

எனவே அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளேன்.

இரு தரப்பும் ஒன்றிணைந்து இளையவர்களை முன்னணியாக கொண்டு வலிமையாக செயற்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும் என இதன் போது ரணில் விக்கிரமசிங்க சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த மற்றைய தரப்பினர்களிடம் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானதொரு அணியை உருவாக்க வேண்டுமாயின் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவின் வழிக்காட்டல் அவசியம் என்பதை வலியுறுத்திய அந்த தரப்பினர் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கான அனுமதியுடன் அங்கிருந்து சென்றனர்.

ஜெனிவாத் தீர்மானத்தின் முதல் விளைவு? – காய்நகர்த்தலை கச்சிதமாக ஆரம்பித்துள்ள அரசாங்கம் – நிலாந்தன்

கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதையே காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவதுபோல அது ஒரு மகத்தான வெற்றியா?

குறிப்பாக புதிய தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறை குறித்து மிகையான நம்பிக்கைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. அது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை போன்றது அல்ல. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறை ஐ.நா. பொதுச்சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும், அதுகூட ஒரு கட்டத்துக்கு மேல் தேங்கி நின்றுவிட்டதாக இப்பொழுது சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேசமயம், புதிய ஐ.நா. தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் பொறிமுறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கீழானதாகவே இயங்கும். அப்படியென்றால் மனித உரிமைகள் பேரவைக்குள்ள அத்தனை வரையறைகளையும் அது கொண்டிருக்கும்.

இதன்படி, ஒரு நாட்டுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி இந்த விசாரணைப் பொறிமுறை செயற்பட முடியாது. எனவே, இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டுக்குள் இறங்கி ஆதாரங்களைத் திரட்ட அப்பொறிமுறையால் முடியாது. நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் அதைச் செய்யமுடியும்.

இப்பொறிமுறை மூலம் திரட்டப்படும் சான்றுகளும் சாட்சிகளும் இலங்கைத் தீவின் அரச படைகளுக்கு எதிராக ஒரு நீதி விசாரணையின்போது பயன்படுத்தத் தக்கவை ஆகும். இலங்கை அரச படைகளுக்கு எதிரானது என்பது அதன் இறுதி விளைவை கருதிக்கூறின் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிரானதுதான்.

அப்படிப் பார்த்தால் தன்னை விசாரிப்பதற்காக ஆதாரங்களைத் திரட்டும் ஒரு பொறிமுறையை எந்த அரசாங்கமாவது தனது நாட்டின் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமா? இதுதான் கேள்வி.

எனவே, மேற்படி பொறிமுறை இலங்கைக்குள் இறங்கி வேலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியென்றால், அது நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும்.

அப்படித்தான் இதற்கு முன்னரும் சில ஆவணங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து தொகுக்கப்பட்டன. அவ்வாறு நாட்டுக்கு வெளியே இருந்து தகவல்களைத் தொகுக்கும் பொழுது அதுவிடயத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம்தான் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதற்குமுன்பு தொகுக்கப்பட்ட ஆவணங்களுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழர்களே அதிகம் உழைத்தனர். எனவே, புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒத்துழைப்பின்றி அந்தப் பொறிமுறையை முன்னெடுக்க முடியாது. இதை சரியாக ஊகித்த காரணத்தால்தான் இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் பட்டியலிட்டும் தடை செய்திருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் பல ஏற்கனவே தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து 2015இல் தடை நீக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

இதில், தற்பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 27 பேரின் பெயர்களும் உண்டு. தடைசெய்யப்பட்ட உலகத்தமிழர் பேரவையின் தலைவரான கத்தோலிக்க மதகுரு இப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். அரசியல் மற்றும் திருச்சபை நடவடிக்கைகளிலிருந்து பெருமளவுக்கு ஓய்வு பெற்றுவிட்ட அவரை யாழ்ப்பாணத்தின் சாலைகளில் சைக்கிளில் திரியக் காணலாம்.

கடந்த மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடைகள் அகற்றப்பட்டன. இவ்வாறு தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை 30/1 ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவானவை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. இதன்மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிரித்தாள முடியும். அதோடு, அவர்களைத் தாயகத்துக்கு வர அனுமதித்து இங்குள்ள கள யதார்த்தத்தோடு தொடர்புற வைப்பதன்மூலம் நாட்டுக்கு வெளியே பிரிவேக்கத்தோடு அவர்கள் முன்னெடுக்கும் அரசியலின் தீவிரத்தை தணிக்கலாம் என்றும் மேற்கு நாடுகளும் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமும் சிந்தித்தன.

அதைத்தான் கஜேந்திரகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் சில அமைப்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்பவை என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த அமைப்புகளில் சில இம்முறையும் ஜெனிவா தீர்மானத்தை உருவாக்க கருக்குழு நாடுகளோடு சேர்ந்து உழைத்திருக்கின்றன என்பதைத்தான் அவை நடத்திய பத்திரிகையாளர் மாநாடுகள் வெளிப்படுத்துகின்றன. ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேற்படி அமைப்புகள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் தீர்மானத்தை ஒரு வெற்றியாகக் காட்டுவதும் அதிலுள்ள சில விடயங்களை முக்கிய முன்னேற்றங்களாகக் காட்டுவதையும் காணமுடிகிறது.

13ஆவது திருத்தம், வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல், தமிழ் என்ற வார்த்தை தீர்மானத்தில் இணைக்கப்பட்டமை, சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை போன்றவையே அவர்கள் சுட்டிக்காட்டும் முன்னேற்றங்கள் ஆகும்.

இவ்வாறு புதிய ஜெனீவா தீர்மானம் தொடர்பாக பிரித்தானியாவையும் கனடாவையும் மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. புதிய ஜெனீவா தீர்மானத்தை உருவாக்கியதில் மேற்படி அமைப்புகளுக்கும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு பங்களிப்பு உண்டு. இலங்கை அரசாங்கம் அவ்வாறு கருதுவதால்தான் ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வை மேற்படி அமைப்புகளுக்கு எதிராக எடுத்திருக்கிறதா?

ஆனால், இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் தமிழ் நோக்கு நிலையிலிருந்து பலவீனமான ஒரு தீர்மானத்தை அல்லது தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு பெருவெற்றி என்று கருதமுடியாத ஒரு தீர்மானத்தைக் கடுமையான தீர்மானமாக எடுத்துக்கொண்டு அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளதா? என்பதுதான்.

அரசாங்கத்தின் தடை தம்மை பெரியளவில் பாதிக்காது என அவ்வமைப்புக்கள் கூறுகின்றன. உண்மைதான். இத்தடை அவர்களை நேரடியாகப் பாதிக்காது. ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடையூட்டத்தைப் பாதிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழ் தரப்பிலிருந்து தாயகத்திற்கு வரக்கூடிய உதவிகளையும் இரண்டு தரப்புக்கும் இடையிலான தொடர்புகளையும் அரசாங்கம் தனக்கு வசதியான விதத்தில் சட்டவிரோதமாகக் காட்டி தாயகத்தில் இருக்கும் செயற்பாட்டாளர்களைத் தூக்கி உள்ளேபோட இது உதவக்கூடும்.

எனவே, இதன் உடனடிப் பாதிப்பு தாயகத்தில் வாழும் செயற்பாட்டாளர்களுக்குத்தான். இப்படிப்பார்த்தால் அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வின்மூலம் தாயகத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் இடையிலான இடையூடாட்டத்தைக் குறைக்க எத்தணிக்கிறது என்று தெரிகிறது.

இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பைக் கையாண்டு தனக்கு வசதியான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஐ.நா. தீர்மானத்துக்கு எதிரான இலங்கையில் முதல் நகர்வு எனப்படுவது புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்கு மட்டும் எதிரானது அல்ல. தர்க்கபூர்வ விளைவுகளைக் கருதிக்கூறின் தீர்மானத்தைக் கொண்டு வந்த கருக்குழு நாடுகளுக்கும் எதிரானதுதான்.

எனவே, இதுவிடயத்தில் மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு, தீர்மானத்தின் விளைவு அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ இல்லையோ உடனடிக்கு தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை அரசாங்கம் ஐ.நா.வுக்கும் கருக்குழு நாடுகளுக்கும் உணர்த்தியிருக்கிறது.

அதேசமயம், இதுவிடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகளுக்கும் ஒரு பொறுப்பு உண்டு, இதை நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். டயஸ்போறாவுக்கும் தாயகத்துக்கும் இடையே ஏற்றுக்கொள்ளத்தக்க சேர்ந்தியங்கும் தளங்களையும் வழிமுறைகளையும் டயஸ்போறா உருவாக்க வேண்டும்.

ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயகச் சூழலைக்கொண்ட நாடுகளில் வசிக்கும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தூக்கும் கொடிகளும், சின்னங்களும் தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்களோடு அவர்கள் உறவுகளை வைத்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது.

இது விடயத்தில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் சமூக இடையூடாட்டத் தளங்களை உருவாக்க வேண்டும். இது மிக அவசியம். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்துக்கும் இடையிலான உறவுகளைக் கட்டுப்படுத்தினால் நீண்ட எதிர்காலத்தில் தமிழ் தேசிய அரசியலின் இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று அராங்கம் நம்புகிறது.

நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் – சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள்

உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை தமது யோசனைகளை முன்வைத்ததன் பின்னர் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் ஊடகங்களுக்கு கூறியதாவது :

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர்

புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசு நாடாக வலுப்படுத்தப்படவேண்டும். அதிகார பகிர்வு எவ்விதத்திலும் இடம்பெற கூடாது.

மத்திய அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபை நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் போது இனம், மத மற்றும் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல், பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய தேர்தல்கள் நாட்டின் பிரதான தேர்தல்களாக காணப்பட வேண்டும். பல்வேறு வழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாகாணசபை தேர்தல்குறித்து புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

5 வருட கால பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு நாடு சொந்தமல்ல. ஜனாதிபதி தற்காலிக பொறுப்புதாரி மாத்திரமே தேசிய வளங்களை ஜனாதிபதி, அமைச்சரவை உறுப்பினர் ஆகிய குறுகிய தரப்பினரது தீர்மானத்தை கொண்டு மாத்திரம் கையாள கூடாது.

தேசிய வளங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களின் அபிப்ராயத்தை கோருவது கட்டாயமானதாகும். இதற்கான வழிமுறைகள் புதிய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீ ரோஹண பீடம் – மோரே கஸ்ஸப்ப தேரர்

நாட்டின் பெயர் சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக காணப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் இரண்டாம் மொழியாக செயற்பட வேண்டும். புத்த மதத்தை பாதுகாக்கவும், வளர்ச்சி பெற செய்யவும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

எல்லே குணவங்ச தேரர்

அரச அதிகாரத்துடன் சுற்றுசூழல் அழிக்கப்படுவதை காண கூடியதாக உள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய அரசியலமைப்பில் விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மக்களின் உரிமைகளை பாதூக்கவும், நாட்டின் இறையான்மையினையினை பாதுகாக்கவும் விசேட பொறிமுறை வகுக்க வேண்டும்.

Posted in Uncategorized