தமிழ் கட்சிகளை தடை செய்ய கூறும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ரணில் ராஜபக்சவிடம் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“தான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கதான் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஜனாதிபதி கூறியது நகைப்புக்குரியது. தற்போது ரணில் – ராஜபக்ச அரசுதான் ஆட்சியில் உள்ளது. ராஜபக்சக்கள் பட்டாளத்தின் ஆசியில்தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் இருக்கின்றார். எனவே, ராஜபக்சக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு. அவரிடம் தமிழ் மக்கள் – அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.” – என்றார்

நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினையே தவிர சட்டத்தில் அல்ல – அநுர குமார

எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவத்தபோதே அவர் இதனைக் குறிப்பிடடுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதாரக் குற்றவாளிகள் எமது நாட்டில் மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நாட்டில் சட்டம் பலமாகத்தான் உள்ளது. அதானால்தான் தேங்காய் திருடியவரும், இலஞ்சம் வாங்கிய கிராமசேவகரும், பொலிஸாரும்கூட சிறைக்குச் செல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சிக்குவதில்லை. அரசியல் பலத்தால் இதிலிருந்து இவர்கள் இலகுவாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த குழியிலிருந்து வெளியே வர, ஸ்தீரமான மற்றும் நேர்மையான அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார். நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கத்தை கடத்த முயன்றவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவ்வாறு எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில்தான் பிரச்சினைக் காணப்படுகிறதே ஒழிய, சட்டத்தில் அல்ல.

குற்றவாளிகளை பாதுகாக்கும், குற்றவாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும், குற்றவாளிகள் சட்டத்தை இயற்றும் ஒரு நாடாளுமன்ற சம்பிரதாயம் முதலில் மாற்றமடைய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

ரணிலுக்கு வெகுவிரைவில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – அநுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி அதிகரிப்பு பொருளாதார கொள்கையினால் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் பாடம் கற்பித்தார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.

ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இனிதும பகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் இரு பிரதான அரசியல் கட்சிகளிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் தற்போது உண்மையான அரசியல் ரீதியில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நாட்டுக்கும், தமக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள்.

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இரண்டு பிரதான அரசியல் கட்சிகளினால் நாட்டை முன்னேற்ற முடியாது,அரசியல்வாதிகள் மாத்திரம் தான் தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். இவர் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை,கடன் செலுத்தாமல் அந்த நிதியை கொண்டு எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 12ஆம் திகதி செலுத்த வேண்டிய அரசமுறை கடன்களை செலுத்த போவதில்லை என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

8 சதவீதமாக இருந்த பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால் பொருள் மற்றும் சேவைகளின் கட்டணம் சடுதியாக உயர்வடைந்தது.சமூக பாதுகாப்பு அறவீட்டுதொகை என்ற புதிய வரி அதிகரிக்கப்பட்டு மக்களிடமிருந்த நிதி சூறையாடப்பட்டது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளிறுகிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் 400 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

நாட்டின் வங்கி கட்டமைப்பின் பிரதான நிலை தரப்பினர்களில் 50 சதவீதமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். இதுவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரி கொள்கையின் பெறுபேறு.

மறுபுறம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இரண்டரை வருடத்திற்கு பின்னர் தக்க பாடம் கற்பித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்கள் வெகுவிரைவில் பாடம் கற்பிப்பார்கள்.இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், டெலிகொம் நிறுவனம் மற்றும் லிட்ரோ நிறுவனம் உட்பட இலாபம் பெறும் நிறுவனங்களை விற்பனை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல ரணில், ராஜபக்ஷர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது.அரச நிதியை கொள்ளை அடிப்பது ராஜபக்ஷர்களின் கொள்கை, அரச வளங்களை விற்பனை செய்வதும், மோசடியாளர்களுடன் டீல் வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்தால் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களாணைக்கு முரணாக அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். தேர்தலை நடத்தினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுக்கு அரச வரபிரசாதம், பாதுகாப்பு வழங்குவதை தவிர்த்துக் கொண்டு அந்த நிதியை கொண்டு தேர்தலை நடத்தலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். மக்களாணைக்கு முரணாக செயற்பட்டால் அதன் விளைவு எவ்வாறான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார் என்றார்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – அநுரகுமார

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓடி வந்து நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு விரைவாக வந்து பதிலளித்து விட்டு,மீண்டும் விரைவாக சபையை விட்டுச் செல்கிறார்.2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிக்க வேண்டுமாயின்  வேட்பு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இம்மாதத்துக்குள் வெளியிட வேண்டும். தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் இந்த அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனை கோரியுள்ளதை அறிய முடிகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகாரம் உள்ளது,ஆகவே  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது பயனற்றது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கோரலுக்கான வர்த்தமானி அறிவித்தலை   எந்நேரமும் வெளியிட முடியும்.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழு சூழ்ச்சிகரமாக செயற்படுவது தெளிவாக விளங்குகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆனால் ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றமை ஏதோவொரு சூழ்ச்சி இடம்பெறுவதை நன்கு அறிய முடிகிறது.ஆகவே ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விரைவாக வருகை தந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதையும் ஓடி வந்து குறிப்பிட வேண்டும்.

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் சமிஞ்சையை எதிர்பார்த்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.ஆகவே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா எவ்வாறு செயற்பட்டார்,யாருக்காக செயற்பட்டார்,எவரது அரசாங்கத்தில் எந்த பதவி வகித்தார் என்பதை நன்கு அறிவோம்.அவர் சுயாதீன நபர் அல்ல,அரசியல் ரீதியில் இவர் தொடர்புப்பட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமாதிபரின் ஆலோசனையை கோருவது அவசியமற்றது.அத்தடன் சட்டமாதிபரின் ஆலோசனையை நாட்டு மக்களுக்கு குறிப்பிடப் போவதில்லை எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.