கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு-ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இயக்கத்தின் பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை(30) அன்று குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ். காரியப்பர் வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று 1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பிரதி வாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திப் பின்னணி

வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது- பிணையில் செல்ல அனுமதி

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திம்புலாகல சிங்கள மக்களை வெளியேற்றின் தமிழ் – சிங்கள இனக்கலவரம் உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை

மட்டக்களப்பு – திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள்  சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

வீரமுனை படுகொலையின் 33 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் ஆலய பூசையுடன்  நேற்று(12) அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

வீரமுனை மற்றும் அதனை சூழவுள்ள வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களில் சுமார் 400இற்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் தாக்கப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலங்காலமாக கடந்துபோக முடியாத வடுக்களான காணப்படும் பல படுகொலைகளோடு வீரமுனை படுகொலையும் 33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பதிவாகி நிற்கின்றது.

கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலை

கல்முனை மாநகர சபையின் விசேட கூட்டம் ஒன்று பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபை சபாமண்டபத்தில் இடம் பெறவிருக்கும் இந்த விஷேட கூட்டத்தில், கல்முனை மாநகரில் இயங்கும் பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சருமான மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரைச் சூட்ட வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை விசேடமாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அண்மையில் நடைபெற்ற மாநகர சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்த பெயரிடல் விவகாரத்தை தமது உரையின் போது பிரஸ்தாபித்தார்.

எனினும் தமிழரசுக்கட்சி உறுப்பினரும் ரெலோ அமைப்பின் பிரதித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் உட்பட தமிழர் தரப்பு உறுப்பினர்கள் தற்போதய சூழ்நிலையில் இந்த விவகாரத்தைக்கைவிடுவதுடன், ஆறஅமர இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாமென ஆட்சேபித்ததையடுத்து, இந்த விடயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது அமர்வு முடிவுறுத்தப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கல்முனைவாழ் தமிழ் மக்களின் உயிர் மூச்சான முயற்சிகளுக்கு, பிரதேச முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் முட்டுக்கட்டையாக செயற்பட்டு வரும் விடயத்தால் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல் நீடித்துவரும் நிலையில், குறித்த பொது நூலக பெயரிடல் விவகாரம் மேலும் குழப்ப நிலையையும், தமிழ், முஸ்லிம் இன முறுகலையும் ஏற்படுத்திவிட வாய்ப்பாக அமைந்து விடலாமென அப்போது கூட்டத்தில் தமிழ் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

எனினும், விடாக்கண்டன் பாணியில் கல்முனை பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரை சூட்டியே ஆக வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் வரிந்து கட்டி நிற்பதாகவும், மர்ஹூம் மன்சூரின் புதல்வர் ரஹ்மத் மன்சூர் மாநகர சபையின் பிரதி மேயராக இருந்து வருவதும் விடாப்பிடி நிலைக்குக் காரணமெனவும் கூறப்படுகின்றது.

இதனிமித்தமே மாநகர சபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்குள் பொது நூலகத்திற்கு மர்ஹூம் மன்சூரின் பெயரைச் சூட்டும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட வேண்டுமெனும் நோக்கில் நடைபெறவிருக்கும் சபையின் விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் கல்முனை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதி நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கல்முனை மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் (ராஜன்) தவிர ஏனைய சகல கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் 10 தமிழ் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாநகர சபையின் விசேட கூட்டத்தை இரத்துச் செய்யுமாறுகோரி கடிதம் ஒன்றை மாநகர மோயரிடம் நேரில் சமர்ப்பித்துள்ளதாகவும், இக்கடிதத்தின் பிரதிகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

வழமைக்கு மாறாக இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் தமிழர் தரப்பினர் நீதிகோரி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கல்முனை மாநகரிலுள்ள முப்பதுக்கும் மேற்ப்பட்ட இந்து கிறிஸ்துவ ஆலங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்பாக இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது அமைதிக்குப் பங்கமாகவும், கல்முனை மாநகரில் தமிழ், முஸ்லிம் இனமுறுகலுக்கு வழிவகுப்பதாகவும் அமையவுள்ள குறித்த பெயர் மாற்றத் தீர்மானத்தை அமுல் நடத்தாது தடுக்குமாறும், மூவின மக்கள் வாழும் கல்முனையிலமைந்துள்ள பொது நூலகம் அதேபொதுவான பெயரிலேயே இயங்க ஆவன செய்யுமாறும் குறித்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கல்முனை மாநகரை களேபர பூமியாக மாற்றாது சுமூகமான தீர்வு எட்டப்படவேண்டுமென்பதே இன்றைய நிலையில் பலரதும் அவாவாகும்.

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை; மாநகர சபை தீர்மானம்

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (18) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உப தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர் கூறியதாவது;

கல்முனைப் பிரதேசத்தில் மரணிக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களின் பூத்தவுடல்களை இங்குள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்து விட்டு, உரியவர்களின் நினைவாகவும் அடையாளப்படுத்துவதற்குமென அவர்களது குடும்பத்தினரால் கல்லறைகள் கட்டுப்படுகின்றன. இது எமது பாரம்பரிய மரபாக இருந்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக இதனைச் செய்வதற்கு அனுமதித்தால் இன்னும் சிறிது காலத்தில் இம்மயானத்தில் பூத்தவுடல்களை அடக்கம் செய்வதற்கு இடமில்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும்.

அதேவேளை, இப்பிரதேசத்தில் இன்னொரு புதிய மயானத்தை உருவாக்குவதற்கும் இடமில்லை என்கிற விடயத்தையும் சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

இதனைக் கருத்தில் கொண்டே இம்மயானத்தில் அடக்கம் செய்யப்படுகின்ற பூத்தவுடல்களுக்கு கல்லறைகள் கட்டுவதைத் தவிர்த்து, அவற்றை அடையாளப்படுத்துவதற்கான பெயர் விபரங்களை ஒரு பலகையிலோ அல்லது கல்லிலோ எழுதி, நடுவதன் மூலம் எதிர்காலங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

மாநகர சபையின் பொது வசதிகள் குழுவின் தவிசாளர் என்ற ரீதியில் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, இப்பிரேரணையை இச்சபையில் சமர்ப்பித்திருக்கிறேன். இதனை ஹென்றி மகேந்திரன் கொண்டு வந்திருக்கிறேன் என்பதற்காக, அரசியல் காரணங்களுக்காக எவரும் எதிர்த்து விடாதீர்கள். இது நமது சமூகம் சார்ந்த, எதிர்கால சந்ததியினரின் நலன் சார்ந்த விடயம் என்பதை கவனத்தில் கொண்டு இப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்குங்கள் என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

 

இதைத்தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.சந்திரசேகரம் இராஜன், எஸ்.குபேரன் ஆகியோரின் கருத்துகள் மற்றும் மாநகர முதல்வரின் ஆலோசனைகளையடுத்து குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சமஷ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும் : அம்பாறையில் சத்தியாக்கிரக போராட்டம்

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில் இன்று பொது மக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஏற்பாட்டில் வடகிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று படுமாறு வலியுறுத்தி கடந்த 5 திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரையிலான தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மக்கள் ஒன்று திரண்டு குறித்த சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் போது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ் அரசியல்கட்சிகள் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்படவேண்டும்.

இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும். வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமையவேண்டும். தற்போது வடகிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மத கலாச்சார இடங்கள் தொல் பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தல் வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என வாசகங்கள் கொண்ட சுலோகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு பொதுமக்கள் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.