சாந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

மறைந்த சாந்தனின் (சுதேந்திரராஜா) உடல் இன்று (4) அடக்கம் செய்யப்பட்டது. மாலை 7 மணிக்கு எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், 33 வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 24ஆம் திகதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ஜனவரி 27ஆம் திகதி உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு இலங்கையில் உள்ள அவரது தாயார் பலமுறை கோரிக்கை வைத்தார். சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார்.

சாந்தனின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்கா விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து வரப்பட்டிருந்தது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து வரப்பட்டிருந்தது.

நேற்று தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், உடுப்பிட்டி, இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் இறுதிச்சடங்குகள் நடந்து, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை சனசமூக நிலையத்தில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.

இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ். மாவட்டத்திலுள்ள மூன்று சிறிய தீவுகளில் கலப்பு புதுப்பிக்க்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இன்று அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புதிய கலப்பு எரிசக்தி அமைப்புகளை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் இந்த வேலைத்திடடங்கள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் அவை நிறைவு செய்யப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35 மணிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நல பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று சாந்தனின் உடல் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தை இந்திய-ரஷ்ய தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் நிர்வகிக்க இணக்கம்

மத்தள விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் கூட்டு முயற்சியுடன் ஒழுங்குப்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டிணைந்து மத்தள விமான நிலையத்தின் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் முன்னிலையாகியுள்ளன.

இந்த நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் பலமுறை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த தீர்மானம எடுக்கப்பட்டதுடன்,கலந்துரையாடல் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா- ரஸ்யா கூட்டு ஒழுங்குப்படுத்தல் ஊடாக கிடைக்கப் பெறும் இலாபத்தின் ஒரு பகுதியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 247.7மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

முத்த மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதியை கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு நன்கொடைகள் ஏதும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

எனினும் சீனாவின் எக்ஸிம் வங்கி மாத்திரம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியிருந்தது.

2017 முதல்வரை ஒவ்வொரு வருடமும் இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2017,2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு பில்லியன் நட்டம் ஏற்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

எனினும் இந்த வருடத்தில் அந்த நட்டம் 1.1 பில்லியனாக குறைவடைந்துள்ள துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

மத்தள விமான நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை காட்டிலும் அதனை நிர்வகிப்பதற்கு அதிக நிதி செலவிடப்படுகிறதால் மத்தள விமான நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்துமா சமுத்திரம்

உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து – பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது. மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (28) இடம்பெற்ற இந்துமா சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இந்து – பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக கடந்த பல வருடங்களாக கலந்துரையாடி வருகின்றோம். இவ்வகையான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது தொடர்பில் பாத்பைண்டர் மன்றத்திற்கு நன்றி கூறுகின்றேன். அவற்றை கருத்தில் கொள்ளும் பொது இன்று நான் முக்கியமான தருணத்தில் உள்ளளோம் என்பதை உணர முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்றை நினைவுக்கூர்ந்து இன்று நாம் எங்கு உள்ளோம் என்பதை கூறினார்.

உலக பொருளாதாரத்தின் மையப்பகுதியில் மீண்டும் இந்து – பசிபிக் பிராந்தியம் நிலைக்கொள்கின்றது. மூடப்பட்ட ஒரு புவியியலை இன்று உலகில் காண இயலாது. திறந்ததும் வெளிப்படையானதுமான உலக பூவி சார்ந்த போக்கே எம்முன் உள்ளது. ஆனால் இன்றைய சூழல் பல சிக்கல்களுக்கு உள்ளானதாகவே உள்ளன. உலகம் எதிர்கொள்கின்ற பொதுவான பல்துறைசார்ந்த அச்சுறுத்தல்களும் சவால்களும் இந்து மா சமூத்திரத்தை சூழ காணப்படுகின்றன. இவை இந்து மா சமூத்திரத்தின் பாதுகாப்பு எச்சரிக்கைகளாகவே உள்ளன.

செங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஹெளதி குழுக்களின் செயல்பாடுகளினால் உலக கப்பல் போக்குவரத்தின் 90 வீதம் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான செயல்பாடுகளினால் பல தீவு நாடுகளின் கடல் இறையாண்மை அச்சுறுத்தலுக்குள்ளாகின்றது. இதனை தவிர கால நிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்று பல்வேறு சவால்கள் எம்முன் உள்ளன.

அனால் இவற்றை மேலும் ஆபத்தாக்க கூடிய வகையில் இரு விடயங்கள் காணப்படுகின்றன. அதாவது புவிசார் அரசியலின் மேலடுக்கு உண்மையான தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஆதிக்கத்தை செலுத்துகின்றது. நிலையான உலக ஒழுங்கு இன்னும் ஸ்தீரப்பட வில்லை. அமெரிக்காவின் மீள் எழுச்சி மற்றும் சீன நலன்கள் என பேசலாம். ஆனால் ரஷ்ய – உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர் போன்ற உலகின் நெருக்கடிக்கான தலைப்புகளின் பட்டியல் மிக நீண்டதாக உள்ளன.

நில பரப்புககளை எல்லையாக கொண்ட நேபாளம் எதிர்க்கொண்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொள்ளுங்கள். எனவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்நோக்கு திட்டங்களை உள்ளடக்கிய அமைப்புகளை நம்பியிருப்பது எந்தளவு சாத்தியம் என்பதையே உணர்த்துகின்றன என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக இந்தியப் பிரதமர் மோடியிடம் தனிநாடு கோரிய மதுரை ஆதீனம்

இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென இந்திய பிரதமரிடம், மதுரை ஆதீனம் நேரில் கோரிக்கை விடுத்தர். நேற்று (27) தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மோடி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக சென்ற போது, அவரிடம் மதுரை ஆதீனம் நேரில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பின்னர் மதுரைக்கு ஹெலிகொப்டர் மூலம் மாலை வந்தார்.

மதுரை வீரபாஞ்சான் பகுதியில் அமைந்துள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெற்ற சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டார்.

பின்பு அங்கிருந்து கிளம்பி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் வருகை தந்தார்.

கோயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சியம்மன் சந்நிதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர், சுந்தரேஸ்வரர் சந்நிதியில் தரிசனம் செய்தார். பொற்றாமரை குளத்தை பார்வையிட்டு வணங்கினார்.

சுவாமி தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வாகனத்தில் புறப்பட்டவர் கிழக்கு கோபுர வாசல் அருகே நின்றுகொண்டிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்து கும்பிட்டபடி சென்றார்.

இதனைத்தொடர்ந்து சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார் பிரதமர். 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில் இரண்டாவது முறையாக தரிசனம் செய்துள்ளார்.

இரவு பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார். ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன்’ என பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரதமர் மோடி வந்துகொண்டிருந்தபோது அவரை வரவேற்க மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். மடத்தின் முன்பாக பொதுமக்களுடன் மதுரை ஆதீனம் நின்றுகொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் முன்னே செல்லும் போது அவரால் பாதுகாப்பு கெடுபிடிகளால் முன் செல்ல முடியவில்லை. எனினும் பிரதமர் மோடி அவரை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி மதுரை ஆதீனத்தை அழைத்தார். பிரதமர் அழைத்ததை கவனிக்காத பாதுகாப்பு அதிகாரிகள் அவரை முன் நகரவிடாமல் தொடர்ந்து தடுத்தனர். பின்னர் பிரதமர் மோடி அழைத்ததை சொன்ன பிறகு தான் அனுமதிதனர். காருக்கு அருகில் சென்று பிரதமர் மோடிக்கு, மதுரை ஆதீனம் பொன்னாடை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து மோடி புறப்பட்டுச் சென்றார்.

இதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு” என்றார்.

இலங்கை திரும்ப இருந்த நிலையில் சாந்தன் மாரடைப்பால் காலமானார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (28) காலை காலமானார்.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.

இன்று இரவு இலங்கைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில், “சாந்தன் திருச்சி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் சென்னை – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்குள் அவரது உயிர் பிரிந்துள்ளது.

யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்று திங்கட்கிழமை  (26) கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டது.

செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.

சீனாவுடனான உறவு குறித்து இந்தியா கவலைப்படவேண்டியதில்லை – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இலங்கை இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக கருதுவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூர்ய 2048ம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் உள்ள இலங்கை இந்தியாவின் முன்மாதிரியை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்படவிரும்புகின்றது என ஏன்ஐக்கு தெரிவித்துள்ள அவர் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நாங்கள் உதவிகளை எதிர்பார்க்கவில்லை இணைந்த செயற்பாடுகளையே எதிர்பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு சகாவாக பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக பார்க்கின்றோம் அதன் வெற்றிகதையை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு அபிவிருத்தியடைந்த நாடு என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்தியா அதனை எவ்வாறு சாதித்தது என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் தாரகபாலசூர்ய தெரிவித்துள்ளார்.

நாங்கள.2048 ம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாகமாற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அதிகளவான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு உட்படுகின்றதா என்ற கேள்விக்கு நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடதயார் ,ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாங்கள் விசேட உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்

இந்தியாவுடன் எங்களுக்குள்ளது நாகரீக தொடர்பு ஆகவே இந்தியா சீனாவுடனான எங்களின் உறவுகள் குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை எனவும் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் மாத்திரமல்ல நாங்கள் மேற்குலகத்துடனும் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு நாங்கள் ரஸ்யாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் மத்திய கிழக்குடன் நாங்கள் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு சிறிய நாடு எங்களிற்கு பாரிய அரசியல் அபிலாசைகள் இல்லை நாங்கள் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கப்போவதில்லை இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதையும் இலங்கை மக்களினது வாழ்க்கை தரம் உயர்வதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னர் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தாரகபாலசூர்ய நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் அரகலய தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவித்தீர்கள் நீங்கள் மிகப்பெரும் வரிசையில் மக்களை பார்த்திருப்பீர்கள் – நாலுகிலோமீற்றர்தூரத்திற்கு எரிபொருள் மருந்து உணவிற்காக மக்கள் வரிசையில் காத்து நின்றனர் இந்த நிலையை நாங்கள் வேகமாக மாற்றிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எங்கள் நண்பர்களின் உதவியுடன் இதனை மாற்றினோம் குறிப்பாக பிரதமர் மோடியின் அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அந்த நெருக்கடியான தருணத்தில் உதவியமைக்காக இந்திய மக்களிற்கும் பிரதமர் மோடிக்கும் மிகவும் நன்றி உடையவர்களாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.