இந்தியா இல்லையேல் இலங்கை மோசமான விளைவுகளைச் சந்திருக்கும் – மிலிந்த மொராகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட கடந்த 22 மாதங்களில் மூன்நு தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை- அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றது எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்தின் உதவிகள் பாராட்டத்தக்கவை – நீதி அமைச்சர்

இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன். அத்துடன் இரண்டு நாடுகளும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இந்தியாவின் 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட நிகழ்வு  நேற்று முன்தினம் மாலை  இந்தியன் ஹவ்ஸில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மற்றும்  இந்தியாவுக்கு இடையிலான அரசியல், மத, கலாசார மற்றும் பொருளாதார உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.  விசேடமாக தர்மசோக சக்கரவர்த்தி பாரத தேசத்தை ஆட்சி செய்த காலத்தில் மஹிந்த தேரர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புத்த மதத்தை எடுத்துவந்தமை  இந்நாட்டு மக்களை புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் திருப்புமுனையாக அமைந்தது.

அத்துடன் இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான அரசியல், மத, கலாசாரம்,தொழிநுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளை மேலும் முன்னேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும். விசேடமாக கடந்த வருடங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின்போது எமது நாட்டு மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிய இந்தியாவின்  ஒத்துழைப்பை மிகவும் பாராட்டுக்கிறேன்.

குறிப்பாக கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இருக்கும்  கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்காக  அனைத்து வகையிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

மேலும் 2017 இல் இலங்கையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நாட்டுக்கு வந்து வழங்கிய ஆதரவை நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நாடுகளுக்கிடையில்  இடம்பெறும் பொருளாதார மற்றும் தொழிற்நுட்ப ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார பிரதிபலன்களை மேலும் அபிவிருத்தி செய்துகொண்டு முதலீடு மற்றும் சுற்றுலா துறையையை முன்நேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது – ஜனாதிபதி

13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள் அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும், இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

“நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.” என்றார்

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்; சர்வ கட்சி கூட்டத்தில் ஆளும் தரப்புகள் கடும் எதிர்ப்பு

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு ஆளும் தரப்பினர் சிலரே நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் நேற்றைய தினம் சர்வகட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சு எழுந்தது. இதன் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும்”, என்று உறுதியளித்தார்.

இதன்போது, ஆளும் தரப்பை சேர்ந்த கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமது ஆதரவு இன்றி 13ஆம் திருத்தத்தை முழுமை யாக செயல்படுத்த முடியாது என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினார்கள். இதற்கு, பதிலளித்த ஜனாதிபதி ஏற்கனவே சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த நிறைவேற்று அதிகாரம் போதுமானது. பாராளுமன்றின் அனுமதி தேவையில்லை என்று கூறினார்.

இந்த சமயத்தில், தமிழ் மக்கள் கூட் டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்கள் மற்றும் அறிவித்தல்கள் தொடர்பில் எடுத்துக் கூறினார். அவ்வாறு வெளியிடப்பட்ட கட்டளைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், அது தொடர்பாக தாம் தயாரித்த ஆவணம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். இதன் பின்னர், இனப்பிரச்னைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த சமயத்தில், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, “கடந்த காலத்தில் இனப்பிரச்னை தீர்வுக்காக எனது தலைமையில் 127 கூட்டங்களை நடத்தி பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.”, என்று சுட்டிக் காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழு அந்த அறிக்கையை பரிசீலிக்கின்றது. அதிலிருக்கும் பரிந் துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத் தப்படும். இது தொடர்பான விடயங்களும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என்றார். மேலும், இன்னும் இரண்டு கூட்டங்களில் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேசமயம், கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தரப்பினர் உறுதியளிக்கப்பட்டபடி காணிகள் விடுவிக்கப்படாதமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளி யிட்டனர்.

இதற்கு உறுதியளித்தபடி இனங் காணப்பட்ட 100 ஏக்கர்கள் காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும். சில தடங்கல்கள் காரணமாக காணிகள் விடுவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் 15 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் மீண்டும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசியத் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புளொட்டின் த. சித்தார்த்தன், ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோரே பங்கேற்றனர். இதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உத்தரவாதம் வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்தது இலங்கை

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடன் உதவியை பெறுவதற்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இலங்கை இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவசியமாக தேவைப்படுகின்ற 2.9 மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியமைக்காகவே இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அளுநர் இந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியுள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா தேவையான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளது இந்த கடிதத்தை அனுப்பியமைக்காக நாங்கள் முதலில் இந்திய அதிகாரிகளிற்கு நன்றியை தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளன என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் எனினும் சீனா வழங்கிய உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் சீனா உட்பட ஏனைய கடன்வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கும் நிலையில் உள்ளனர் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா அளித்துள்ள உத்தரவாதம் சர்வதேச நாணயநிதியத்தினை திருப்திபடுத்த போதுமானதல்ல என காணப்படும் ஊகங்கள் குறித்த கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் -இந்திய உயர்ஸ்தானிகர்

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 ஆண்டிலும், இலங்கை 2048 ஆண்டிலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே இந்திய உயர் ஸ்தானிகர் இதனை தெரிவித்தார்.

நல்லிணக்கத்தின் ரிதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இந்தியாவின் நாகலாந்து பிரதேசத்தில் உருவான உலகப் புகழ்பெற்ற UDX இசைக்சுழுவும் இலங்கை Heavy metal Quintet Band Stigmata இசைக்குழுவும் இணைந்து  இந்த இசை நிகழ்சியை நடத்தின.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவு, சமாதானம் மற்றும்  சபீட்சம்   என்பன தொடர்பிலான இருநாட்டு எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இரு இசைக்குழுக்களும் தெரிவு செய்யப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்,

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும்   பல்வகைமையுடைய ஜனநாயகத்தையும் கொண்டுள்ள நாடாகும்.இந்த நிலைமை இலங்கைக்கும் பொதுவானாதாகும். மேலும் இலங்கை இன்னும் சில நாட்களில் தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மிகவும் நெருங்கிய   நண்பர்கள் என்ற அடிப்படையில் நாம் இந்நிகழ்வை ஒற்றுமையின் உண்மையான ரிதமாக கொண்டாட வேண்டும்.

இது வெவ்வேறு இசைக் குழுக்களின் இசைச் சங்கமம் மட்டுமல்ல இது இலங்கை மற்றும் இந்தியாவின் ஒற்றுமையையும் குறிக்கும்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் நாமும் எமது ஒற்றுமை மற்றும் 75 வருட இராஜதந்திர உறவைக் கொண்டாடுவதுடன் எமது நூற்றாண்டு சுதந்திர விழாவை நோக்கிய எமது பயணத்துக்காக எம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இப்பயணத்தில் பங்கு வகிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை, இந்தியப் பிரஜைகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவால் கொண்டு வரப்படும் தீர்வுகள் நிரந்தர தீர்வாக அமையாது

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் “இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு.

தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில்,அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?

எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது,அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி
இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில்,சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான்.ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதா கக்கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளதுதான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே,இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால்,அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்

யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள்

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized