எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கைப் பிரதிநிதிகள் இருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது.

இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன உயர் மட்டக் குழு இன்று இலங்கை விஜயம்

சீனாவின் சர்வதேச துறை துணை அமைச்சர் சென் சோவ் தலைமையில் சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (சனிக்கிழமை) இலங்கை வரவுள்ளது.

அவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் அவர்கள் தங்கியிருந்து கலந்துரையாடலை முன்னெடுப்பார்கள் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனா 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா விருப்பம்

நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ், இலங்கை தொழில்நுட்ப வளாகத்தில் முதுகலைப் படிப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை முதல் முனைவர் பட்ட படிப்பு வரை நூற்றுக்கணக்கான முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் கல்வியைத் தொடரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் தனித்தனியாக வழங்கப்படுவதாக கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75ஆவது தேசிய சுதந்திரதின விழா

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின்  புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

அதன்படி, பௌத்த சமய நிகழ்வுகள், பெப்ரவரி 02 ஆம் திகதி மாலை ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறவுள்ளதுடன், அன்றிரவு விக்டோரியா அணைக்கு அருகில் 9:00 மணிக்கு தர்ம பிரசங்கமும் ஆரம்பமாகவுள்ளது. மறுநாள் காலை அன்னதான நிகழ்வும் நடைபெறும்.

பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு மருதானை பாத்திமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத வழிபாடுகளும், அதே நேரத்தில் காலி முகத்திடல் கிறிஸ்தவ தேவாலயத்தில் கிறிஸ்தவ மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.

இந்து சமய நிகழ்வுகள், பெப்ரவரி 03 ஆம் திகதி காலை திருகோணமலை கோணேஷ்வரம் ஆலயத்தில், இடம்பெறவுள்ளன. பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமய வழிபாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பிலும் பௌத்த மற்றும் இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி 4 ஆம் திகதி முற்பகல் 6.30 மணிக்கு கொழும்பு 3 பொல்வத்தை தர்மகீர்த்தியாராம விகாரையில் பௌத்த சமய நிகழ்வும் கொழும்பு 4 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இந்து மத நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் மார்ச் மாதம் ஸ்ரீ தலதா கண்காட்சி, கபில வஸ்து தாது கண்காட்சி,  மே மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன், சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சி ஜூன் மாதம் அனுராதபுர நகரில் நடைபெறவுள்ளதுடன், மேலும் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்படும் தாது கண்காட்சியொன்றை ஜூலை மாதம் தென் மாகாணத்தில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலாசார கலை விழாவான “லங்காரலங்கா” பெப்ரவரி 03 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 750 கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

யாழ் கலாசார நிலையம், பெப்ரவரி 11ஆம் திகதி காலை ஜனாதிபதி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், யாழ் கலாசார நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் கலாசார ஊர்வலம் யாழ்.நகரின் ஊடாக வீதி உலா வந்து யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நிறைவடையும். (பழைய பேருந்து நிலையம்) அங்கு கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், அன்று இரவு அதே இடத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நடன மரபுகளையும் ஒன்றிணைத்து, வீதி உலாவரும் ஊர்வலம் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு கண்டி நகரில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் பூரண பங்கேற்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுதந்திரம் தொடர்பான 30 நிமிட குறும்படமொன்றை தயாரித்து  அனைத்து திரையரங்குகளிலும் கலையரங்குகளிலும் காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இளைஞர் சமுதாயத்தை இலக்கு வைத்து “சுதந்திரம்” என்ற தலைப்பில் குறும்படங்கள், தேசபக்தி பாடல்கள் மற்றும் ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட வடிவமைப்புப் போட்டியொன்றை மே மாதம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சி சிரேஷ்ட ஓவியக் கலைஞர் எச்.எஸ். சரத் தலைமையில் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய அருங்காட்சியக திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் வரலாற்றை பிரதிபலிக்கும் கலைப்பொருட்கள் கண்காட்சி பெப்ரவரி 04ஆம் திகதி முதல் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின விழாவின் போது  பத்திரிகை செய்திகள் மற்றும் பிற கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது.

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட  முத்திரை, சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர்  முஹம்மது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்களை உள்ளடக்கிய அரிய வகை விசேட  நினைவு முத்திரையையும்  வெளியிடப்பட  உள்ளது. மேலும் ரூ.1000/- மதிப்புள்ள  சிறப்பு நினைவு நாணயமும்  வெளியிடப்படும்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட நகர்ப்புற வன எண்ணக்கரு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், ஸ்ரீலங்கா டெலிகொம் அனுசரணையுடன் பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரையிலான சுதந்திர தின  சைக்கிள் சவாரி ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது தவிர, மாகாண மற்றும் மாவட்ட  மட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பொது பூங்காக்கள், தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு   வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்குரிய தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்கள்  திணைக்களத்திற்குரிய  தேசிய பூங்காக்கள்  என்பன  சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன்   குடும்பங்களுக்கு 02 மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்   குறித்த  வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டு 75 ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தப் பயணத்தை 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரையில் மாற்றமில்லாத அரச கொள்கையாக மாற்றுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின்  நோக்கமாகும். எதிர்வரும் 25 வருடங்களுக்கான திட்டமும் இந்த தேசிய சுதந்திர தினத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

இதன்படி, பல புதிய நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் ஒரு வரலாற்று நிறுவனம், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனம், பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பான  நிறுவனம்  என்பன  நிறுவப்படும்.

அரச மற்றும் அரசாங்கக் கொள்கைப் பல்கலைக்கழகம், விவசாய ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம், காலநிலை மாற்றம் தொடர்பான  பல்கலைக்கழகம் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்  என்பனவும் நிறுவவுதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு, பாலின சமத்துவச் சட்டம், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டம், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், காலநிலை மாற்றம்  தொடர்பான  சட்டம், சமூக நீதிக்கான ஆணைக்குழுச்  சட்டம், காடுகளை மீள உருவாக்கல்   மற்றும் விருட்சப் பாதுகாப்புச்  சட்டம்  என்பனவும்  அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம், ஹோர்டன் சமவெளி, நக்கிள்ஸ், ஆதாம் பாலம் போன்ற இயற்கை வளங்களின்  பாதுகாப்பிற்காக புதிய சட்டம்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடல் வள ஆய்வு மற்றும் முகாமைத்துவம்  தொடர்பில்  புதிய சட்டங்கள் மற்றும் முதுராஜவெல பாதுகாப்பு சட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதில் 75 நகர்ப்புற காடுகளின் திட்டம் மற்றும் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில்  1996 வீடுகள் கட்டும் திட்டம்  என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு தேசிய இளைஞர் தளம் உட்பட பல  வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் – தமிழக சட்ட சபையில் தீர்மானம்

தமிழ் நாடு சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இன்று சட்டசபையில் உரையாற்றும் போதே முதல்வர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது.

அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள்.

அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.

இலங்கை அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ள கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் டுபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் டுபாய் சென்றுள்ளார். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தால் இலங்கையர் 09 பேர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) ஜூலை 8ஆம் திகதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களான குணசேகரன், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் திகதி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கமாண்டோ படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

அப்போது, சிறப்பு முகாமிலிருந்து தொலைபேசிகள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அவற்றை கேரளா கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் 8 பேர் நேற்று(திங்கட்கிழமை) காலை மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு சென்றனர்.

இதன்போது அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா (எ) கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ (எ) பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் (எ) வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ஐஏ எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் மா.பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விவரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள் அளித்த ஆவணங்களை ஏற்று, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல ஆட்சியர் அனுமதியளித்தார்.

இதையடுத்து, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.