சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள உலக வங்கி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில் கிடைக்கும் என்றும் உலக வங்கி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றை உலக வங்கி அவதானித்து வருகின்றது.

இதனை அடுத்து நிர்வாகக் கூட்டத்தில்அனுமதி கிடைத்தவுடன் முதல் தவணை இலங்கைக்கு உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானம்

பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு தீர்மானம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய, குறியீட்டில் முதல் இடம் லெபனான் காணப்படுவதோடு, அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன.

உலக வங்கி 18 மாதங்களுக்கு விவசாயத்துறைக்கான உதவியை நீடித்தது

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் – உலக வங்கி

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவிலேயே உலக வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் இதனைப் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் 2023 மேலும் வீழ்ச்சியடையும் – உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் வறுமையை அதிகரித்துள்ளதுடன் கடந்த தசாப்த காலத்தில் பெறப்பட்ட பலாபலன்களை இல்லாமல் செய்துள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடரும் அந்நியசெலாவணி பிரச்சினைகள் உயர் பணவீக்கத்தின் தாக்கம் முக்கிய வர்த்தக  சகாக்களின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக  2023ம் ஆண்டு குறித்து முன்னர் எதிர்வுகூறப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென்னாசிய குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி உக்ரைன் யுத்தத்தின் தாக்கங்களை இந்த பிராந்தியம் தொடந்தும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.3 வீதமாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா கடன் மறுசீரமைப்பு உத்தரவாத கடிதங்களை இது வரையில் வழங்கவில்லை – அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இருந்து 5 பில்லியன் டொலர் கடன்களை எதிபார்க்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டருக்கு வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசசொத்துக்களை மறுசீரமைப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் 3 பில்லியன் டொலர் வரை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழு தசாப்தங்களில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி எரிபொருள் உணவு தட்டு;ப்பாடுகளிற்கு வழிவகுத்ததன் காரணமாக பரந்துபட்ட அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

40.6 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு மேலதிக நிதி உதவி அவசரமாக தேவைப்படுகின்றது. இலங்கை தனது கடனில் 22 வீதத்தினை சீனாவிற்கு செலுத்தவேண்டியுள்ளது.
செப்டம்பரில் இலங்கை 2.9 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியது. அடுத்த வருடம் இந்த நிதி உதவி கிடைக்கலாம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இருந்து கிடைக்கும் நிதி உதவிக்கு அப்பால் நாங்கள் ஏனையவர்களிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கின்றோம்,பன்னாட்டு தரப்புகளிடமிருந்து நான்கு ஐந்து பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கின்றோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி நாட்டின் சில அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்து ஆர்வமாக உள்ளார்,அதன் மூலம் இரண்டு அல்லது மூன்று பில்லியன் டொலரை திரட்டமுடியும்,என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இதன் மூலம் திறைசேரியையும்,அந்நிய செலாவணி கையிருப்பையும் வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்திற்கான கடனிற்கு அதன் நிறைவேற்று சபை டிசம்பர் மாதத்திற்குள் அங்கீகாரமளிக்கும் என இலங்கை எதிர்பார்த்தது,எனினும் இது ஜனவரியிலேயே சாத்தியமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளிடமிருந்தும் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதிகளவு கடனை வழங்கிய சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து உத்தரவாத கடிதங்களிற்காக இலங்கை காத்திருக்கின்றது என அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளிற்கு ஆதரவளித்துள்ளன இலங்கை அவர்களுடன் தரவுகள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்துகொண்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் 70வீதமாக காணப்பட்ட பணவீக்கம் நவம்பரில் 61 வீதமாக காணப்பட்டது ஆனால் பொருளாதாரம் இந்த வருடம் 8.7 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்திரதன்மை ஏற்படுகின்றது இதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டினை சர்வதேச நாணய நிதியத்தினதும் பன்னாட்டு அமைப்புகளினதும் கடன் உதவிகளுடனும் ஆரம்பிக்கவேண்டும் ஆனால் 2024லேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை – சாந்த தேவராஜன்

தொழில்நுட்ப வல்லுனர்களை செவிமடுப்பதற்கு பதில் இலங்கை அதன் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்கவேண்டும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்களிற்கு செவிமடுக்காத பட்சத்தில் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஆலோசனை குழுக்களை அமைப்பதிலும் செயலணிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பொருளாதார பிரச்சினை இலங்கையில் தொழில்நுட்ப பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது திறமைசாலிகளை தெரிவு செய்து அவர்களை ஒரு அறையில் இருக்கiவைத்தால் அவர்கள் மிகச்சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பார்கள் என்ற சிந்தனை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சாந்ததேவராஜன் இதுவே பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை உண்மையில் செவிமடுக்கும் கொள்கை உருவாக்கல் நடைமுறைகள் அவசியம் மக்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயல்வதன் காரணமாக யதார்த்தத்தையும் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளையும் தொடர்புபடுத்த முடியாத புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது அவசியம் அதேவேளை பொதுமக்களை கலந்தாலோசிப்பதும் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுதிட்டம் மக்களின் மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.17) நிதியமைச்சில் நடைபெற்றது.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அரச நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்தல், இறையாண்மை நிதித்துறையின் தொடர்பு மற்றும் கட்டமைப்பு ரீதியில் இடர் குறைப்பு, வலுசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்தல் மற்றும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரித்தல், அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைத்தல், தனியார் மூலதனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரோட்பேண்ட் சந்தையில் போட்டித் தன்மையை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்பை இலக்காகக் கொள்ளுதல் ஆகிய 8 துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized