வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று (30) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்ட பின் ஆரம்பமாகிய பேரணி மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்த வாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ´வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மிகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்குநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தை தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு´ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியாக சென்ற மக்கள் வைத்தியசாலை சுற்றுவட்ட பகுதியில் அமைந்திருந்த தொல்பொருள் திணைக்கள அலுவலக வளாகத்திற்குள் சென்று வாயிலை மறித்து தொல்பொருள் திணைக்களமே வெளியேறு என கோசமிட்டனர். சுமார் 15 நிமிடங்கள் வரை குறித்த வாயிலை முற்றுகையிட்ட மக்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறி மாவட்ட செயலகம் சென்றிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடமும், அதிபருக்கான மகஜர் அதிபரின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது

இதனையடுத்து இது குறித்து அதிபருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிபரின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், செ.கயேந்திரன், தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அரச அடக்குமுறைக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், எதிர்க் கட்சி அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மருதானை எல்பிஸ்ட்ன் அரங்குக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பயணித்தது.

ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஒன்று திரள்வோம், உரிமைக்காக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டப்பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது, கொழும்பு வர்த்தக மையப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது பொலிஸாரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரிடம் முறுகலில் ஈடுபட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அடக்குமறையை நிறுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் தடைவிதிப்பு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.