கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனையும் உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடன் வழங்குநர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினை பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை கருதி மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியிடம் காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்கள் மாத்திரமே பரிசீலிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் பிரதான திறைசேரி பத்திரங்களை வைத்திருப்பவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த திறைசேரி உண்டியல் பங்குகளில் மத்திய வங்கி 62.4 சதவீதத்தை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணய நிதியத்திடம் கடன் வாங்கி இந்தியாவிடம் பெற்ற கடனின் ஒரு பகுதியை செலுத்திய இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட 330 மில்லியன் டொலர்கள், நிதி அமைச்சின் பிரதிச் செயலாளரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி இந்தியாவின் கடனுக்கான செலுத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.எம்.எவ் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை மீதான 2ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐ.எம்.எஃப்.இன் நிபந்தனை மிகவும் கடினமானது குறிப்பாக 2026ஆம் ஆண்டாகும் போது எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15.3 வரை அதிகரிக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டி ஏற்படுகிறது. அதற்காக அரசாங்கம் கட்டண அதிகரிப்புகளுக்கு செல்லவேண்டி ஏற்படும் என அவர் மேலும் கூறினார்.

கடன் வாங்குவது அவமானம் ; தம்பட்டம் அடிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் தம்பட்டம் அடிப்பதை இன்று செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியே விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை நம்பி நாட்டை திவாலாக்கியதன் பின்னர் வரம்பற்ற கடன்களை பெற்றுக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமையை அதிகரித்து, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாளியாக மாறியுள்ளதாகவும், இது மற்றுமொரு கடன் பொறி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூச்சியமாக்கி விட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து நாளை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை எட்டுவதற்கும் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன்வழங்கிய நாடான சீனா தனது எக்சிம் வங்கி இலங்கையுடன் கடன் விவகாரம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதை ஆதரிக்கின்றது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடன்உதவியை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை

இந்தியாவின் ஒரு பில்லியன்டொலர் கடனை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் கடனுதவி மார்ச் 17 ம் திகதி முடிவடைகின்ற நிலையில் இலங்கை அதில் மூன்றில் இரண்டை மாத்திரம் பயன்படுத்தியுள்ளது. மருந்துகளிற்கும் உணவுகளிற்கும் மாத்திரம் இலங்கை அதனை பயன்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான நிதி உதவியை வழங்க சர்வதேச நாணயநிதியம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இந்த வருடத்திற்கான நிதிகளை பெறுவதற்கானமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள்இடம்பெறுகின்றன என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடனில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளநிலையில் இலங்கைஇந்த கடனுதவியை ஆறு முதல் 10 மாதங்களிற்கு நீடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

இலங்கைக்கு கடன் வழங்குவதில் அனைத்து தரப்பிடமும் சாதக நிலைப்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை ஒரு மிக விசேடமான நிலைமையாகும்.

அதேபோன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக சீனப் பிரதமர் லீ க சியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அண்மையில், “ப்ளூம்பேர்க்” செய்திச் சேவை, செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized