சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைளில் 35 வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35 வீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 வீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில் 35 வீதமான நிபந்தனைகள் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 71 வீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

இருப்பினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிலையில், குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காகவே இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

IMF இன் மேலும் எட்டு நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய இலங்கை அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.

‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும்.

மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான அனைத்து 52 முக்கிய அரச நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான திட்டத்தைத் தயாரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

பந்தயம் மற்றும் கேமிங் வரிகளின் திருத்தம், இலங்கை மத்திய வங்கி சட்டம் மற்றும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டங்களை இயற்றுவதற்கு உறுதியளித்திருந்த போதும் இந்த வரைவுகள் இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமை காரணமாக மேலும் தாமதமாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு – சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தனது சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜோர்ஜீவா உறுதியளித்துள்ளார்.

‘தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் வலுவான முன்னெடுப்புக்கள் வரவேற்கத்தக்கன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில்  புதன்கிழமை (21) பரிஸ் சென்றடைந்தார்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச நிதி நிறுவனங்களை கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த மாநாட்டின் பக்க அம்சமாக ,  பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு இராஜதந்திர தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

ஐ.எம்.எவ் இன் 62 நிபந்தனைகளில் இதுவரையில் இருபத்தைந்து மட்டுமே பூர்த்தி

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது.

மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இலங்கையுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் பலனளித்ததாகவும், இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்புச் செயற்பாட்டிற்கான தொடர்ச்சியான ஆதரவிற்காக அமெரிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவிற்கும் இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டு தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார்.

இதன்போது இதுவரையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாட உள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் அவர் ஜனாதிபதி, மத்திய வங்கி அதிகாரிகள், சபாநாயகர் உள்ளிட்ட மேலும் சில தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

அத்துடன் ஒக்டோபரில், இலங்கை தொடர்பான முதலாவது மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களையும் , சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் வழங்குவார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடாநாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன இலங்கையில் கடந்த வருடத்தில் என்ன இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த வருடம் பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம் எனவும் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம்,அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம்,தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம் சவுதிஅரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.