இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது – ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொருளாதார நிலைத்தன்மையை அடைவதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் பயணம் செய்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஒரு வார காலமாக முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

நிதியத்தின் இலங்கைக்கான முதலாம் கட்ட கடனுவியை தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து அவர்கள் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பரந்த மக்கள் தொகையை சென்றடையும் வகையில் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மேம்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சொத்து வரியின் மூலம், நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையை வேகமாக பூர்த்தி செய்ய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.