வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.
இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,
இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.
இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.
எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.
எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.
குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.