இலங்கையால் மீண்டும் கொரேனாவைத் தாங்க முடியாது

தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு வருகைதருவோர் குறித்து, கவனம் செலுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு கொரோனா தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனாவின் புதிய மாறுபாடு எதுவும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வில்லை என்றும் கொரோனா அறிகுறிகள் மாறவில்லை என்றும் ஐடிஎச் வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

எனினும், சாத்தியமான நோய்த் தொற்றைத் தடுக்க உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர் குறிப்பிட்டார்

புற்றுநோய் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10,000 புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து  ஏறபட்டுள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்,இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்,எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற  சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்,கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்தனியாரிடமிருந்து மருந்துகளை பெறுமாறு எங்களால் எங்கள் நோயாளிகளை கேட்கமுடியும்,ஆனால் எங்கள் நோயாளிகளில் 90 வீதமானவர்களால் அது முடியாது மருந்துகளின் விலை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

மருந்துப் பொருட்களுக்கு நாட்டில் பாரிய தட்டுப்பாடு

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிருப்பில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் சந்தை, மருத்துவ கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் கூட 75-மிகி அஸ்பிரின் மாத்திரைக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச அளவில் பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு வைரஸ்கள் தோன்றக் கூடிய ஆபத்துள்ளது என்றும் எனவே கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் 2020 போன்ற சூழ்நிலை ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ரோட்டரியும் யுனிசெப்பும் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கையளிப்பு

ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள நன்கொடை தளம் மூலம் திரட்டிய நிதியை கொண்டு யுனிசெவ் கொள்வனவு செய்த 130 000 டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களே சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

முதலாவது தொகுதி மருந்துகளை இலங்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் மக்களிற்கு சேவையாற்றலாம் என ரோட்டரி இன்டநசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

விசேடமான இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து ரொட்டரி வழிவகைகளை கண்டறியும் உங்கள் நாடு சிரிக்கும் அற்புதமான மக்களை கொண்டுள்ளது. இந்த சிரிப்பை நாங்கள் எதிர்காலத்திற்கு சேமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பிரசவித்துள்ள பெண்கள் வலிநிவாரணம் உட்பட பல்வேறு மருந்துகளிற்கு இந்த மருந்துகள் உதவும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் நீடித்த நிலைமை சமூகசேவை சுகாதாரம் கல்வி போன்றவற்றின் ஊடாக நீடிக்கின்றதுஎன யுனிசெவ்வின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அதன் கொள்முதல் மற்றும் தளவாட நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் பொருட்களை வழங்க அதன் கூட்டாண்மைகளைப் பயன்படுத்துகிறது” என்று யுனிசெப் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறினார்.

“இலங்கையின் பொருளாதார நிலையில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் தேவைகள் கடுமையாகவே உள்ளன மேலும் எங்களது உதவியை நிலைநிறுத்தவும் அதிகரிக்கவும் பல பங்குதாரர்களின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்” என்று அவர் கூறினார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன் இலங்கை ரோட்டரி ஆளுநர் புபுது டி சொய்சா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சி குறித்து தெளிவுபடுத்திய ரோட்டரி இன்டர்நெசனலின் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன்,

“ எங்களின் மருத்துவ விநியோகங்களின் 80 வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக எங்களின் வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளதால் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எங்கள் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது உயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

சத்திர கிசிச்சைகள் பிற்போடப்படுகின்றன. சிறுவர்களும் கர்ப்பிணிகளும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவே யதார்த்தம் நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு உதவுவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும் சர்வதேச தலைவர் இலங்கைக்கு மருந்துப்பொருட்களை கையளிக்க வந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரோட்டரி இன்டர்நெசனலும் யுனிசெப்பும் இணைந்து நாடாளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளிற்கு உயிர்காக்கும் மருந்துகளையும் சுத்தமான குடிநீர் ஏனைய முக்கிய வசதிகளையும் வழங்குவதற்கான நிதியை திரட்டியிருந்தன .

பொதுச்சுகாதார பாதுகாப்பு: ஜனாதிபதி விடுத்த விஷேட உத்தரவு

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதய நோய், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு : தாதியர் சங்கம் எச்சரிக்கை

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றும் இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில்  திங்கட்கிழமை (டிச. 5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் ரவீந்திர கஹந்தவாராச்சி,

தற்போது உயிரிழக்கும் நோயாளர்களின் மரண சான்றிதழில் எந்த இடத்திலும் மருந்து இன்மையே அவர்களது உயிரிழப்பிற்கு காரணமாகும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக குறித்த நோய் நிலைமை காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது.

எமது நாட்டில் அதிகளவில் பதிவாவது இதய நோயாளர்களாவர். இதய நோயாளர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை மருந்துகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது வைத்தியசாலைகளில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இது மாத்திரமின்றி நோயாளர்களுக்கு ‘எக்ஸ் ரே’ எடுப்பதற்கான வசதிகளும் தற்போது இல்லை. இவ்வாறான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வைத்தியசாலை கட்டமைப்பினை நிர்வகித்துச் செல்வது? உயிரற்ற நபர்கள் நாட்டை ஆட்சி செய்வதைப் போன்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பீ.மெதிவத்த, இவ்வாறான அபாய நிலைமை ஏற்படும் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தோம்.

ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான சிறந்த தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதால் உள்ளூர் வைத்திய சாலை முறைமை செயலிழக்கும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு முறையான சுற்றறிக்கைகள், திட்டமிடல், ஒழுங்குமுறை மற்றும் முறையான வழிமுறைகளின்படி பணியாற்ற வாய்ப்பு வழங்கினால், நாட்டில் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் எந்த தடையும் இருக்காது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூகக் காரணிகளால் இந்நாட்டு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

மேலும், நெருக்கடிகளுக்கு பதிலாக அரசாங்கம் தலையிட்டு சாதகமான தீர்வுகளை வழங்கினால், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.

வைத்தியர்களுக்கான 5 வருட சேவை சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வழிகாட்ட வேண்டும்.

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஓய்வுபெறும் 60 வயதை பூர்த்தி செய்த சிரேஷ்ட வைத்தியர்களும் இளம் பயிலுநர் வைத்தியர்களும் தமது விருப்பத்துக்கேற்ப வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்வதால் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், உள்ளூர் வைத்தியசாலை முறைமையை செயலிழக்கச் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஒரு மருத்துவ மாணவனுக்கு மருத்துவ கற்கைக்காக 60 லட்சம் செலவு செய்யும் அரசாங்கம்

நாட்டின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மருத்துவ கற்கை மற்றும் பயிற்சிகளுக்காக ஒரு மாணவனுக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாவுக்கு அதிகமான நிதியை செலவிடுவதாக சபையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவையானது அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை விட அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மருத்துவ துறையை முன்னேற்றுவதற்கு நாட்டில் மேலும் மூன்று மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஊவா வெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதனை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன்,கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பூனாவில் உள்ள இத்தகைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமனானதாக இலங்கையில் அதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்.

அதேவேளை மருத்துவத் துறையில் வைத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது.

நாட்டுக்காக அவர்களது சேவையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தளவு தொகை செலவிடப்படுகிறது.

ஆனாலும் அனைத்து பயிற்சிகளையும் தாய்நாட்டில் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது சேவைகளை வழங்குகின்றனர். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டு வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டின் பெரும் நிதி செலவில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை மேற்கொள்ளும் நிலையில் அந்த சேவைகள் அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நன்கொடையை விட அதிகமாகும் என்றார்.