திட்டமிட்டபடி ஏப்ரல் 29 இல் காரைக்கால் படகுச்சேவை ஆரம்பிக்கும்

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் காரைக்கால் துறைமுகம் இடையே படகு சேவை திட்டமிட்டபடி ஏப்ரல் 29ஆம் திகதி தொடங்கும்.

திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதாக கப்பல் சேவையை நடத்தவுள்ள Indsri Ferry Service Pvt Ltd நிறுவன தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள் மற்றும் பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில், படகு சேவைக்கான உள்கட்டமைப்பைக் கட்டமைக்க இந்திய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் தாமதமானது. காங்கேசன்துறை துறைமுகத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்ப கட்ட சேவையில் ஈடுபடும் படகுகளை விட பெரிய படகுகளுக்கு இடமளிப்பதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கு மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கும் சேவையில் ஈடுபடும். ஒரு பயணத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகு சேவை இயங்காது.

காங்கேசன்துறை- காரைக்கால் படகுப் பயணம் அண்ணளவாக 4 மணித்தியாலமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் – தொல்.திருமாவளவன்

கச்சத்தீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவியமைக்கு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர்.

தற்போது வரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது.

கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் எண்மர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் 5 பெண்களும் 2 சிறார்களுமே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள் 8 பேரும் மன்னாரில் இருந்து நேற்றிரவு படகு மூலம் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழக கடலோர காவற்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு தனுஷ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணைகளையடுத்து மண்டபம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இதுவரைக்காலமும் பறிமுதல் செய்யப்பட்ட 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதுபோன்று இடம்பெறும் சம்பவங்கள் ஏழை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது என்றும் அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகின்றபோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் வந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்து, கடல்வளங்களை நாசப்படுத்திய 16 பேரே கைதாகினர்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினங்களை சேர்ந்த மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் நான் உறவுப்பாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை

மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர்கள், இ.தொ.காவின் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட கட்சி பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருக்கிறது.

அந்த வகையில் இலங்கைக்கு வந்திருந்த பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினோம்.

இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் நாடாக உதவிய இந்தியாவுக்கு காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தோம்.

அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

இதன்போது மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுப்பாலமாக செயற்படப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார் என கூறினார்.

தமிழக மீனவர் குழு இலங்கை வருகை தரவுள்ளனர்

தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.

பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே இந்த குழுவினர் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகளின் உரிமையாளர்களும், இராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுமே யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

Posted in Uncategorized

தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் – தமிழக சட்ட சபையில் தீர்மானம்

தமிழ் நாடு சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இன்று சட்டசபையில் உரையாற்றும் போதே முதல்வர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது.

அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள்.

அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.

கப்பல் சேவை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் – யாழ் வணிகர் கழக தலைவர்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமாக வர்த்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுவிக்கிறார்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்