இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டு உயரஸ்தானிகர் சண்டிலி இ.ஸ்சோல்க் இன்று செவ்வாய்க்கிழமை (28) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் கிழக்கின் பிரசித்தி பெற்ற பாடசாலையான ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி தேவைகள் குறித்தும் கல்லூரி அதிபருடனும் நலன் விரும்பிகளுடனும் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் ஏ பி மதன் நெறிப்படுத்தலில் குறித்த தென்னாபிரிக்க மிகஸ்தானிகள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தார்.

புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அண்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தும் பாடசாலையினுடைய தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்தன் பிரதீபன் உள்ளிட்ட பலர் இங்கு சமூகம் அளித்திருந்தனர்.

பாடசாலையின் தேவைகள் குறித்து உயரஸ்தானிகளிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட வீர சாணிகள் எதிர்காலத்தில் இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் தெரிவிப்பு

ஓ.எம்.பி அலுவலகத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை எமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் அமெரிக்க தூதரகத்தில் இருந்து வருகை தந்த 4 அதிகாரிகளை சந்திப்பதற்காக வந்திருந்தோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கவிதா ரதீஸ்வரனும், யாழ்மாவட்டத்தினை சேர்ந்த ஸ்ரீ நிலோயினியும் இந்த சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டனர்.

நான்கு அதிகாரிகளில் ஒருவர் கொழும்பு தலைமையகத்தில் இருந்தும் ஏனைய மூவரும் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் இருந்து வந்தும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைக்கு பொறுப்பானவர்கள். அதில் மனித உரிமை, மத சுதந்திரம் மற்றும் நீதி பொறிமுறைகளை என வேறு வேறு துறைகளிற்கு பொறுப்பானவர்கள்.

அந்த வகையில், எமது துயரங்களை மனம் விட்டு அவர்களிடம் தெரிவித்தும் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறியிருந்தோம்.

அத்துடன் ஓ.எம்.பி அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் அத்துடன் தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் பொறிமுறை குறித்தும் அதிருப்தியை வெளியிட்டோம்.

அவர்கள் நாம் கூறியவற்றை பொறுமையாக கேட்டனர். நம்பிக்கை தரும் விதமாக நாம் உரையாடியதன் காரணமாக எமது பேச்சுவார்த்தையை 1 மணித்தியாலங்களில் முடித்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரி சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்கும் மற்றுமொரு முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதேபோன்ற பொறிமுறையை மாதிரியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்தகைய அமைப்பின் நன்மைகள் தீமைகள் குறித்து இருவரும் அங்கு கலந்துரையாடியுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் 21 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை விசாரிக்க தனித்தனி பெஞ்ச்களில் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 21 – 25 ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதியளித்தது.

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமெனில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன உள்ளகப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அர்த்தமுள்ளதோர் வழிமுறையாக அமையுமென அம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரமளித்துள்ளது.

எனவே அச்செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர், அந்நாட்டின் சர்வதேச விவகாரங்கள், ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோர் மற்றும் நீதி, அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர், தென்னாபிரிக்க அரச வழக்குரைஞர்கள் அலுவலக அதிகாரிகள், தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடனும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை நினைவுகூர்ந்த அவர், இலங்கையுடனான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்தார்.

அதேபோன்று அமைச்சர் அலி சப்ரிக்கும் தென்னாபிரிக்க சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோருக்கும் இடையிலான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் தென்னாபிரிக்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் செயன்முறை பின்பற்றப்படவேண்டும் என்றும், அதன்படி இலங்கை மக்களுக்குப் பொருந்தக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவில் கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறையை ஒத்தவாறாக இலங்கையிலும் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் கரிசனைகளை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், குறித்த சந்திப்பின்போது உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவர் வெளியிட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கியதாக எமது செயற்பாடுகளை அடுத்துவரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாக அமைவதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவம் எமக்கு கைகொடுக்கும் என்றார்.

இதேவேளை, மேலும் சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன் மற்றும் பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். கடந்த வாரம், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது