சகல தரப்பினரின் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழுத் தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே, சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தினம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நிதியின்மை காரணமாக திட்டமிட்டபடி, தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தேவைக்காகவே ஆணைக்குழு இவ்வாறு செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் ஆணைக்குழுவை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து வினவியபோதே ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஏனைய நிறுவனங்களும் அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தலுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும், திணைக்களங்களும் ஒத்துழைத்தாலன்றி தனித்து எம்மால் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான சிக்கல் நிதியின்மையாகும்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிதி அமைச்சினால் தேர்தலுக்கான நிதி விடுவிக்கப்படாமலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் தேர்தலை நடத்த முடியும்? அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்டால் வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்று தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை.

வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மூலமொன்றோ அல்லது அமைச்சரவை யோசனையொன்றோ முன்வைக்கப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால், நாட்டில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான நிதியையும் நிதி அமைச்சு அல்லது திறைசேரியிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனியார் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நிதி நெருக்கடி தாக்கம் செலுத்துகின்றது. இவை தொடர்பில் சிந்திக்காமல் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. உரிய காலத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு ஸ்திரமாகவுள்ளது என்றார்.

குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செல்லும் நிலை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அதன்பிரகாரம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்தின் பிரதம செயற்பாட்டாளர் டி.எம். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் குழுக்களை நியமிக்காமல் தேர்தலை முறையாக நடத்துவதற்கு தேவையான சூழலை தயாரிக்க வேண்டும் என ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்களை ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபைகளின் விவகாரங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையில் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிட்டடத்தக்கது.

நிதி அமைச்சருக்கெதிராக நீதிமன்ற செல்லத் தயாராகும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடியுள்ள போதே இவ்வாறு தீமானிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 25 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு தினம் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தாமதிப்பது நல்லதல்ல: மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான எல்லை நிர்ணயம் செய்யும் தேசிய எல்லை மீள் நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம்,” என்றார்.

எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என தலைவர் தெரிவித்தார்.

“குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நல்லது. ஆனால் இப்போது அது கடினமாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் தபால் மூல வாக்களிப்பிற்கு கூட அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை“ என்று அவர் கூறினார்.

ரணிலால் இவ்வருடம் தேர்தலை நடாத்த முடியாது

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அவர் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது என்றார்.

கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலை நடத்தியிருக்க முடியும் என்று கூறிய அவர், அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

2024 நவம்பருக்குப் பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அநுர- சஜித் தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் தலையீட்டில் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என இரு கட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தலை நடத்துவதற்குத் தயாரா? என பவ்ரல் ஜனாதிபதியிடம் கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது – அரச அச்சகம்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச அச்சகத் திணைக்களத் தலைவர் கங்கானி லியனகே இது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மற்றும் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றுக்குத் தேவையான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என திறைசேரிக்கு கடந்த இரு வாரங்களில் இரண்டு தடவைகள் எழுத்து மூலமாக முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட அச்சிடல் பணிகளுக்கான நிதி முழுமையாக கிடைக்கவில்லை.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரி ஒரு உத்தியோகபூர்வமாக அறிவிப்பை விடுக்க வேண்டும் என அரச அச்சகத் திணைக்களத் தலைவர் திறைசேரியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிதி கிடைப்பதில் தாமதம் காணப்படுவதால் தபால் மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோ பூர்வமாக அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையிலேயே குறித்த திகதிக்கிடையில் தம்மாக் வாக்குச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வாக்குசீட்டு அச்சிட பணம் கோரி அரச அச்சகம் மீண்டும் திறைசேரிக்கு கடிதம்

தேர்தலுக்கான அச்சு நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது.

திறைசேரியின் நடவடிக்கை  பிரிவிற்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார்.

அந்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.

அச்சு நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அரச அச்சகர் தெரிவித்தார்.