இல்லாத புலிகள் அமைப்புக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சி – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ‘

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டு – இந்திய தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை

சென்னை திருச்சி கோவை சிவகங்கை தென்காசி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் செந்தில் தலைமையில் கோவை வந்த அதிகாரிகள் ஆலந்துறையில் உள்ள நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ரஞ்சித்தின் வீடு மற்றும் காளப்பட்டியில் உள்ள முருகன் வீடு என இரண்டு இடங்களில் சோதனை நடத்தினர்.

4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் இருவரது வங்கி கணக்குகள் மற்றும் இணையதளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இருவரது செல்போனையும் கைப்பற்றிய என்ஐஏ அதிகாரிகள் விசாரணை முடித்து கிளம்பினர்.

இதே போல் திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனையும் நிறைவடைந்தது. சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கி உள்ளனர். திருச்சி சண்முக நகர் 7-வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலையில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். சாட்டை துரை முருகனிடமும் அவரது மனைவியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான வழக்கு குறித்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய நிதி சேர்ப்பதாக கூறி விசாரணை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகனுக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இதைபோல நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்தி என்பவருக்கு இன்று காலை சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வாட்ஸ் அப் மூலம் என்ஐஏ அதிகாரிகள் அழைத்துள்ளனர். இடும்பவனம் கார்த்தி வெளியூரில் இருப்பதால் 5ம் தேதி ஆஜராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

எமில் காந்தன்‌ உள்ளிட்ட இருவரை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கிய‌ பாதுகாப்பு அமைச்சு

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவினர்‌ எனும்  குற்றச்சாட்டில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தனர்‌ எனும்‌ குற்றச்சாட்டில் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ஐ.நா பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை; நிபுணர்கள் கவலை

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நாங்கள் முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் மிகவும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதாக காணப்படவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டம் சர்வதேச தராதரத்தை பூர்த்தி செய்வதாக காணப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது அடிப்படை மனித உரிமைகளிற்கான பாதுகாப்பற்றது மற்றும் சுயாதீன மேற்பார்வையற்றது என பலவருடங்களாக ஐநா நிபுணர்களும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்துள்ளன என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் உத்தேச சட்டமூலம் இந்த குறைபாடுகளிற்கு தீர்வை காணமுயலவில்லை என்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஐ. எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடன் வெளிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய மையங்களில் குண்டுகளை வீசும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நாட்டுக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.

பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர்.

குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி வேண்டி நிற்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கிறது-ஜூலி சுங்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கெளரவிப்பதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் செய்தியில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூர்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல  என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்- ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை நிலைநாட்டவேண்டும் நீதியை நிலைநாட்டவேண்டும் பாதிக்கப்பட்டவர்களிற்கு முழுமையான இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அவர்களின் குடும்பத்தவர்களின் துயரத்தினை எவ்வளவு பெரிய இழப்பீட்டினாலும் ஈடுசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஜெரெமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி இழப்பீட்டிற்கான உரிமைகளை அங்கீகரிப்பதற்காக பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் முன்னோக்கிய ஒரு படியை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாடின்மை மற்றும் கண்காணிப்பின்மை குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள லோரன்ஸ் தாக்குதல் எவ்வேளையும் தாக்குதல் இடம்பெறலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்கியபோதிலும் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு அதிகாரிகளும் தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிய இழப்பீட்டினை பெறுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் நிதிகளை வழங்கும்போது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பிரதிநிதிகளை கலந்தாலோசனை செய்யவேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அதிகாரிகளிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள லோரன்ஸ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளின் முடிவுகளை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம் புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்..

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.