வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலை விவகாரம் : ரெலோ வினோ எம்.பிக்கு அழைப்பாணை

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முதன் முதலாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்

தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களை பாதிக்கின்றன – டக்ளஸ்

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வனவளப் பாதுகாப்பு ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை எடுக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விடையத்தில் நீதிமன்ற கட்டளைகளை திசை திருப்பும் நோக்கில் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் சிவன் ஆலயம் அமைத்தல் என்ற பித்தலாட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். காரணம் குருந்தூர் மலையில் மிகப் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அவ்வாறான நிலையில் சட்டவிரோத கட்டடங்களை அமைத்த விகாராதிபதிகளுடன் இணைந்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவும் நீதிமன்ற கட்டளைகளை சிங்கள ஆட்சியாளர்களும் அரச இயந்திரமும் அவமதிப்பதற்கு அப்பால் கோயில் நிர்வாகமும் அவமதிப்பதாக அமையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிதான் போலி இந்து அமைப்பின் பினாமிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களமும் சிங்கள பௌத்த பிக்குகளும் மேற் கொள்ளும் திட்டமிட்ட அடாவடிகளையும் நீதிமன்ற கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த முன்னகர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க பெளத்தர்கள் குருந்தூர்மலையில் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்.

2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குருந்தூர் தூபியை இந்து கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) குருந்தூர் மலையில் இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள.ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும்.குருந்தூர் மலையில் பௌத்த- இந்து மோதலை தடுக்கவும்,தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை சிங்களவர்களின் நாடு; தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல – மேர்வின் சில்வா

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள்.இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தார். அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் செவ்வாய்க்கிழமை (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்” என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சு வார்த்தை  என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயக பூமி. இப் பூமியை அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு சிங்கள பௌத்த இனவாதிகளால் வடகிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு; தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள்,விகாரைகள் அமைப்பதும்  தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தினமும் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேவின் சில்வாவின் இப் பகிரங்க பயங்கரவாத வார்த்தை மதவாத வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய நினைப்பது பௌத்தத்திக்கும் நாட்டிற்கும் கேட்டையே விளைவிக்கும்.

அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாடு விழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி அவர்களை வீதிக்கு இறக்கி இழிவான அரசியலை தேர்ந்தெடுக்க முயல்கின்றார். இவரது கடந்த கால வாழ்வில் நாட்டின் சட்டத்தையோ கௌரவத்தையோ மதித்தவர் கிடையாது.

இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களும் இனவாத மதவாதத்தை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். வடகிழக்கிற்கு எதிராக மக்களை தூண்டி விடுவதிலேயே அரசு அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் வாங்குவது நிலையை இது எடுத்துக்காட்டுகின்றது.

இவர்களை மன நோயாளிகள் என்றும் குறிப்பிட வேண்டும். விசர் நாய்களுக்கு தண்ணீரை காண்பது போல இவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளும், மரபுரிமைகளும் தெரிகின்றன. இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் சுதந்திரமாக திரிய கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனலாம்.

தற்போது சூழ் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான  தெற்கின் அரசியல் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை வலுவாக கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசியல் தீர்வு என 13 வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக ஒன்று பாடல் வேண்டும்.

அரசியல் தீர்வு என பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் எலும்பு துண்டாக 13 காட்டிக் கொண்டிருப்பதும் அரசியல் லாபங்கள் சலுகைகளுக்காக அவற்றின் பின்னால் ஓடுவதும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையப் போவதில்லை.

தற்போது மேவின் சில்வா அவர்களின் கூற்றினை தனி மனித கூற்றாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கூற்றாகவோ மற்றும் எடுத்து அசமந்த நிலையில் இருந்து விடாது.

இதுவே நாட்டை எப்போதும் ஆட்சி செய்யும் பேரினவாதிகளின் நிலை என உணர்ந்து அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும்  வெளியிலும் மக்கள் சக்தியை பலப்படுத்தி கூட்டாக எழுந்து நிற்கவும்  தமிழ் அரசியல் தலைமைகள் முன் வரல் வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க வலுவான சக்தியாக தம்மை வடிவமைத்துக் கொள்ளலும் வேண்டும் என்றார்.