நாய் மீதான துஷ்பிரயோகம் – விசாரணையை கோரும் பீட்டா (PETA) அமைப்பு

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டாPeople for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம், அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டு;ம் என பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச்  தெரிவித்துள்ளார்.

விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில்  ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த விடயங்களை செய்தியாளர் மாநாட்டில் அம்பலப்படுத்திய ஹிருணிகா பிரேமசந்திர ஆதர்ச கரந்தனா என்ற பெண்ணிண் செல்லப்பிராணிக்கே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அந்த பெண் முகநூல் ஊடாக சந்தித்த பின்னர் மாரசிங்கவின் காதலியாக மாறி அவருடன் இரண்டு வருடம் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக தெரிவித்தார்.

நாயின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த பின்னர் இரகசியமாக இந்த விடயத்தை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கண்டறிய புதிய உபகரணம் இறக்குமதி

போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸாருக்கு முதல் கட்டமாக 125 ஜீப் வண்டிகள் இந்தியாவால் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாருக்கு 500 ஜீப் வண்டிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இவற்றில் முதற்கட்டமாக 125 ஜீப் வண்டிகள் நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் 125 ஜீப் வண்டிகளையும் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.

அதற்கான வைபவம் பத்தரமுல்லையிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உத்தியோகபூர்வமாக மேற்படி ஜீப் வண்டிகளுக்கான ஆவணங்களைக் அமைச்சரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, பொலிஸ் மாஅதிபர் சீ.டீ. விக்கிரமரட்ண உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் மற்றும் அது தொடர்பான விசேட வைபவங்கள் இடம்பெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில், தேவாலயங்களுக்கு பொறுப்பான பாதிரிமார்கள் மற்றும் போதகர்களை சந்தித்து, கலந்துரையாடி, அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகையின்போது தேவாலயங்களுக்குள் நுழையும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அந்நியர்களை அடையாளம் காண்பதற்கு  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் மீது தாக்குதல் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த வேளை இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து , அங்கு கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்ட வேளை வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த பொலிஸார் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் இளைஞனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , முதற்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் இன்று செவ்வாய்க்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் , சட்ட வைத்திய அதிகாரியிடம் இருந்து சட்ட மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்தார்.

பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ, மற்றும் பல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் – பொலீஸார் அராஜகம்

திகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக காவல்துறையினரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நேற்று ( 12-11- 22) இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் இலங்கை பொலிஸார் எவ்வளவு தூரம் தரம்தாழ்ந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

முதலாவது சம்பவம் கையில் பதாகைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களை பொலிஸார் துன்புறுத்தியது.

இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்பொஸிஸார் ஒருவரின் கழுத்தின் மீது கையை வைத்து அழுத்துவது.

மூன்றாவதாக சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் என்னை அழைத்து தனது உதவியாளரை அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்தார்.அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

பொலிஸாரை கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் தோல்வி, மெத்தனப்போக்கினால் காவல்துறையின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை – சர்வதேச மன்னிப்புச்சபை

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் உள்ளிட்ட தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையேயன்றி, அதுவோர் சலுகையல்ல. எனவே அந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டுமக்கள்மீது அரசாங்க்ததினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத்தடைச்சட்டத்தை முழுமையான இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதற்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், அதனைக் கண்டித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிவழங்க பொலிஸார் மறுத்துள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் போன்ற தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதற்கான காரணமாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ள விடயங்கள், அமைதிப்போராட்டங்கள்மீது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவசியமான சர்வதேச சட்ட நியமங்களைப் பூர்த்திசெய்யவில்லை. குறிப்பாக இப்போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஏனெனில் பெரும்பாலான கூட்டங்கள் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது ஏனையோரின் உரிமைகளிலோ குறித்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதே அதன் இயல்பாகும். அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையாகும்.

மாறாக அதுவோர் சலுகை அல்ல. எனவே இந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு என்று மன்னிப்புச்சபை அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பித்தக்கது.