வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர் – வடமாகாண பிரதம செயலர்

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரண தர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25000 வழங்கப்படும். இது குறித்த வடமாகாண பிரதம செயலகத்தின் இணையத்தளத்தினூடாக மேலதிக தரவுகளை பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் (NVQ level – 4) நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் (NVQ level – 7) வரை செல்வதுடன் ஊடாக நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம் .

அவ்வாறு தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கலாம்.

உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கள் .அவர்களுக்கு கல்வி தகைமை இருக்கின்றது. ஆனால் தொழில் தகைமை இருப்பதில்லை.ஆனால் உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு சான்றிதழுடன் தொழில் தகைமையும் உள்ளது என தெரிவித்தார்.

வடக்கு ஆளுநர் – இந்திய துணைத்தூதுவர் இடையே சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநருக்கு இந்திய துணைத் தூதர் இந்திய நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பு செய்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தனியார் ஊழியர்கள் எவரும் நாளை பணிக்கு செல்ல தேவையில்லை – வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம்

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தனியார் ஊழியர்கள் எவரும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) பணிக்கு செல்ல தேவையில்லை என வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளைய பொது முடக்கம் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வி அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் – கலாநிதி சர்வேஸ்வரன்

மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் எண்ணத்திலிருந்து அரசாங்கம் சற்று பின்வாங்கியுள்ள நிலையில் முழுமையாக அத்திட்டத்தினை கைவிடும் வரை நீதிமன்ற சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (12.03.2023) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட கல்வி அதிகாரங்களைச் சட்ட விரோதமான முறையில் மத்திய அரசாங்கம் பறித்ததுக்கு எதிராக நான் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடுத்தேன்.

இலங்கை அரசியல் அமைப்பில் வழங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளின் பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் சட்ட விரோதமான முறையில் பறித்துள்ளது. கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகள் சார்ந்து மாகாணத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மாகாண நியதி சட்டங்களையும் மீறும் வகையில் பல விடயங்களை மத்திய அரசாங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

குறிப்பாக மாகாண கல்வி அமைச்சை எடுத்துக் கொண்டால் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய பாடசாலைகள் ஆயுதப் படைகளின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண பாடசாலைகளாக வரையறுக்கப்பட்டது.

வடக்கு கல்வி அமைச்சில் 19 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக இருந்த நிலையில் மாகாண கல்வி அமைச்சின் கீழே இருந்த மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டு 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டது.

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் இலங்கையில் ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்தின் கீழ் வடக்கில் 51 பாடசாலைகளைத் தேசிய பாடசாலையாக்கும் முயற்சிகள் இடம்பெற்றது.

மாகாண பாடசாலைகளைப் பறிக்கும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தின்பால் பயணிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரிய அக்கறை காட்டாத நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தேன்.

கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரச தரப்பு சார்ந்து 16 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டது . வழகானது கடந்த 8 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சகலருக்கும் நீதிமன்றம் ஆணை அனுப்பியது.

இந்த சூழ்நிலையில், அரசாங்கம் தேசிய பாடசாலைகளாக்கும் வேலைத் திட்டத்தினை சற்று பின்வாங்கியதாக தெரியவரும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் அதனை ஒப்புக் கொள்ளும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

ஆகவே, வழக்கின் முடிவுகள் ஏதுவாக இருந்தாலும் மாகாண அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பறித்தல் ,தமக்கு ஏற்ற வகையில் வியாக்கியானம் செய்தல், சில நிர்வாக நடைமுறைகள் ஊடாக பறித்தல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் தகுந்த பதிலை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இந்திய மத்தியஸ்தம் கோரி இந்திய துணை தூதுவரிடம் மகஜர்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற்குழியில் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது- தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர். மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.

அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.

நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

யாழ் நகர சபையை கலைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்யவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்பதோடு அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு தேர்வு நடைபெறும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்yaaதிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.