தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது – பொன் சிவகுமாரன் நினைவேந்தலில் நிரோஷ்

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உரும்பிராயில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் முன்னர் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் அஞ்சலி செலுத்திய பின் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவகுமாரன் அவர்களது தியாகம் எமது விடுதலைப்போராட்டப் பாதையில் முக்கியமானது. தமிழ் மாணவர்களுக்கு அரசினால் இழைக்கப்பட்ட தரப்படுத்தல் அநீதி மற்றும் ஏயை ஒடுக்குமுறைகள் மற்றும் தேசத்துரோகங்களுக்கு எதிராக மாணவர் சக்தியாக துணிந்து போராடியவர்.

பொன் சிவகுமாரனின் தியாகம் என்பது தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதியுடனான போராட்டமாகும். அவருக்கான அஞ்சலி என்பது உறுதியான தமிழ்த் தேசிய பயணப்பாதையுடனேயே அமைய வேண்டும். சிவகுமாரனின் விடுதலைப் பயணத்தில் அவர் காட்டிக்கொடுப்புக்களுக்கும் தேசத்துரோகங்களுக்கும் எதிராகப் போராடியுள்ளார். மேலும் காலத்திற்குக் காலம் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்பது எமது போராட்டத்தில் திடகாத்திரமான பங்களிப்பினை நல்கியுள்ளது.

சிவகுமாரன் அவர்கள் என்ன என்ன இலட்சியத்தினை கொண்டு தன் இன்னுயிரை ஆகுதியாக்கினாரோ அவரது இலட்சியத்திற்காகவும் அபிலாசைகளுக்காகவும் நாம் திடமாகப் பயணிக்கவேண்டியவர்களாகவுள்ளோம். எம் போன்றோருக்கு அவரது தியாகமும் இலட்சியமும் எப்போதும் சுவடாக அமைகின்றது.

தடைகள் இருந்த சமயத்திலும் பல்வேறு இடர்பாடுகளைத் தாண்டியும் நாம் இங்கே அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். அண்ணன் சிவகுமாரன் அவர்களுடைய சிலைகள் கூட பல்வேறு தடவைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட உடைக்கப்பட்ட 1975 ஆம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட சிலை மண்ணுக்குள் புதையுண்டு காணப்பட்ட நிலையில் அதனை நான் தவிசாளராக பெறுப்பேற்ற உடன் மீள குறித்த வளாகத்திற்குள் பிரதிஸ்டை செய்திருந்தேன்.

அவ்வாறு பிரதிஸ்டை செய்யப்பட்ட இடத்திலேயே தற்போது அஞ்சலி செய்துள்ளேன். வரலாற்றை நாம் ஆவணப்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

வலி கிழக்கு பிரதேச சபையினால் 3 சிமாட் முன்பள்ளிகள் ஆரம்பிப்பு – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் நேரடியாக முகாமைசெய்யப்படும் மூன்று முன்பள்ளிகளும் சுமாட் முன்பள்ளிகளாக எதிர்வரும் வாரம் முதல் இயங்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முன்பள்ளிகளை வலுப்படுத்தும் எமது சபையின் செயற்றிட்டத்திற்கு அமைய சபை நிதிமூலம் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் மூன்று சுமாட் போட்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவை பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் ஆவரங்கால் அரிச்சுவடி முன்பள்ளி , இருபாலை சிகரம் முன்பள்ளி, அச்சுவேலி கஜமுகன் முன்பள்ளிகளுக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தாயகத்தில் முன்பள்ளிக் கல்வியை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாக உணர்கின்றோம். ஏற்கனவே எமது சபை இருபாலை சிகரம் முன்பள்ளியினை 10 மில்லியன்கள் வரையில் செலவுடன் புதிதாக அமைத்து திறந்து வைத்துள்ளது. மேலும் அரிச்சுவடி முன்பள்ளி அமைப்பிற்காக 6 மில்லியன்களுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. கஜமுகன் முன்பள்ளியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப் பள்ளிகள் மாகாண மட்டத்தில் பேட்டி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிறப்புத்தேர்ச்சி மிக்க ஆசிரியர் குழாத்தின் ஊடாக இயக்கப்படுகின்றது. இம் முன்பள்ளிகளில் மில்லியன்களில் செலவிடப்பட்டு நவீன விளையாட்டு உபகரண தொகுதிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலாக குறித்த முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவுத்திட்டம், கல்விச் சுற்றுலா என்பவற்றினையும் சபை மேற்கொள்கின்றது. வருமான ரீதியாக பாதிக்கப்ட்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளும் வசதி வாய்ப்புள்ள குடும்ப பிள்ளைகள் பெறும் வாய்ப்புக்களை பாரபட்சமின்றி பெறவேண்டும் என்ற நோக்கில் நாம் மேற்படி முன்பள்ளிகளில் கல்விக்கான முதலீடுகளை நிதிப்பற்றாக்குறை சவாலினையும் எதிர்கொண்டு பயன்படுத்துகின்றோம். இந் நிலைமையினை பிரதேச மக்கள் உச்ச அளவில் பயன்படுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலி கிழக்கிற்கு விசேட அனுமதியில் 4 புதிய உழவு இயந்திரங்கள் – தவிசாளர் நிரோஷ்

விசேட அனுமதியின் கீழ் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை சபை நிதியில் கொள்வனவு செய்யப்படவுள்ள நான்கு உழவு இயங்திரங்களும் பெட்டிகளும் விரைவில் மக்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர், எமது சபை தொடர்ச்சியாக கழிவு அற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற செயற்பாடுகளுக்கு வாகனப் பற்றாக்குறையினை எதிர்கொண்டு வந்தது. யாழ். மாவட்டத்தில் 74 ஆயிரம் மக்களையும் 104 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவினையும் உடைய மிகப்பெரிய சபையில் ஒப்பீட்டளவில் வாகனப்பற்றாக்குறை கருமங்களை மேற்கொள்வதில் கடும் சவாலாகக் காணப்பட்டது. ஏனைய பிரதேச சபைகளில் இருந்து இரவல் பெற்றும் வாடகைக்கு அமர்த்தியுமே வாகன பற்றாக்குறையினை சபை இதுவரை நிவர்த்தித்து வந்திருக்கின்றது. இந் நிலையில் புதிய உழவு இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு அவைத்தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தபோதும் சூழ்நிலை காரணமாக உடனடியாக கொள்வனவு செய்ய முடியவில்லை.

ஆரச கொள்கையில் வாகன கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ள போதும் திறைசேரியின் அனுமதி உழவு இயந்திரக் கொள்வனவுக்கான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை கேள்விக்கோரலையும் மேற்கொண்டு அக் கேள்விக்கோரலில் பெறுகைச்சட்ட நடைமுறையின் பிரகாரம் உழவு இயந்திரங்களை சபைக்கு விற்பனை செய்வதற்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தற்போது தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.

தேர்தலுக்கு மதிப்பளித்து முக்கிய அபிவிருத்திகளை மக்கள் மயப்படுத்துவதை பின்தள்ளியுள்ளோம் – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து தற்போது திறப்பு விழாக்களை நடத்த முடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள் மயப்படுத்தப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தூரில் 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமாணம் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்கு மேலதிகமாக அங்கு 20 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு மரக்கறிச்சந்தை மற்றும் இறைச்சிக்கடைத் தொகுதிக்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெறுகின்றன.

அதுபோன்று  நீர்வேலியில் வலிகாமம் கிழக்கிற்கான பொது சிறுவர் பூங்காவிற்குரிய வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நீர்வேலி கந்தசாமி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டுமாணப்பணிகள் 3.4 மில்லியன்களில் பணிகளை தற்போது பூர்த்தி செய்துள்ளோம். அப் பூங்காவிற்குரிய  விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், பிரதேச சபையின் கோப்பாய் உப அலுவலகத்திற்காக 7 மில்லியனில் சபை நிதியில் எம்மால் கொள்வனவு செய்யப்பட்ட காணி கட்டிடத்தில் 7 மில்லியன்களுக்கு மேலதிகமாக செலவிடப்பட்டு மேலதிக அலுவல வசதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

ஏற்கனவே அச்சுவேலி சந்தையில் மரக்கறிச்சந்தை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மில்லியன்கள் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமானமும் வேலைகளும் பூர்த்தி நிலையினை அடைந்துள்ளன.

மேற்படி திட்டங்கள் யாவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச மக்களின் வரிப்பணம், சோலைவரி, தண்டப்பணம், சர்வதேச மானிய உதவிகள் என பல்வேறுபட்ட நிதி மூலங்களில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளாகும்.  இவற்றை நாம் தேர்தல்களின் பின் கடந்த 13 ஆம் திகதி மக்கள் மயப்படுத்த சபையில் தீர்மானித்திருந்தோம்.

அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்றிருந்தோம். எனினும் தேர்தல்கள் கடந்த 9 ஆம் திகதி நடைபெறாது மீளவும் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியமையினால் தேர்தல் ஒழுங்குகளுக்கு அமைய திட்டங்களை மக்கள் மயப்படுத்தவில்லை. எனவே பின்னரான திகதி ஒன்றில் மேற்படி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நிலாவரை பகுதியில் புதிதாக முளைத்த புத்தர்சிலை வலி – கிழக்கு பிரதேச சபையின் எதிர்ப்பால் அகற்றப்பட்டது

யாழ்ப்பாணம் –அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பதை அவதானித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உப தவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலன் தலைமையிலான அணியினர் தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு குறித்த புத்தர் சிலையை குறித்த பகுதியிலிருந்து அகற்றியிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் கிழக்கு பிரதேச நூலக விழா சிறப்புற நடைபெற்றது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியில் நுலகர் திருமதி  கர்சனமாலா உதயகுமாரன் தலைமயில் நேற்று புதன் கிழமை (21) சிறப்புற நடைபெற்றன.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில்  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    நுலகர் சிவபாக்கியநாதன் கேதீஸ்வரன், சபையின் செயலாளர் இராமலிங்கம் பகீரதன், சோமாஸ்கந்தா கல்லூரி அதிபர் சின்னத்தம்பி திரிகரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் புத்தூர் நுலகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் புதுவை நாதம் நூலை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வெளியிட்டு வைக்க நூலின் முதற் பிரதியினை சித்த சுதேச வைத்தியர் இளையவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலுக்கான நயவுரையினை ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி ஆனந்தரட்ணம் ஆற்றியிருந்தார்.

இத் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதீதிகளின் உரைகள், அரிச்சுவடி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் என பலதரப்பட்ட தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் உள்ளுராட்சி நூலக வாரத்தினை முன்னிட்டு பிரதேச சபையின் நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் சிறந்த வீட்டு நூலகத்தினை முகாமை செய்வதற்கான கௌரவம் ப. கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டதுடன்  சிறந்த வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
மேலும், நூலகங்களுக்கு இடையில் தேசிய நூலக மற்றும் சுவடிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுப் போட்டியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் நூலகம் நாடாளாவிய ரீதியில் 3 ஆம் இடத்தைப் பெற்றது.

இவ் விருதினை கடந்த வாரம் ஜயவர்த்தன பல்கலைக்கழக துணைவேந்தாரிடம் நூலகர் திருமதி கர்ஞனமாலா உதயகுமாரன் பெற்றுக்கொண்டார். அவ் விருதினை இந் நிகழ்வில் வைத்து பிரதேச மக்களுக்கு அறிமுகப்படுத்தியதுடன் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிடம் சபையில் காட்சிப்படுத்துவதற்காக நூலகரினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.