2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
![](https://telo.org/wp-content/uploads/2023/11/JULIE_CHUNG_BATTICALO_CHURCH_VISIT_2-1024x682.jpg)
விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது X தளத்தில் குறிப்பிடுகயைில்,
நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள யேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.
![](https://telo.org/wp-content/uploads/2023/11/JULIE_CHUNG_BATTICALO_VISIT_1-1024x715.jpg)
கடந்த 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானாவிலிருந்து இலங்கை வந்த யேசு பையைச் சேர்ந்த யூஜின் ஜோன் ஹெபர்ட், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு வழிநடத்தினார். அப்போதும் அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெபர்ட், கூடைப்பந்து விளையாட்டை சமூகங்களை இணைக்கவும் புரிந்துணர்வை வளர்க்கவும் ஒரு இராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தினார் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேரந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.