அமெரிக்க தூதுவர்‌ இலங்கையின்‌ உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் முப்படை தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து வெளிப்படையான விசாரணையை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார், ஆர்ப்பாட்டங்களிற்கான மக்களின் உரிமையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என தனது கடிதத்தில் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

டயர்களை எரிப்பது வீதிகளை புகையிரத பாதைகளை மறிப்பது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அழி;ப்பது பொலிஸார் மீது கற்களை வீசி எறிவது போன்றவற்றை ஆர்ப்பாட்டங்களாக அமைதியான நடவடிக்கைகளாக கருதமுடியுமா என சரத்வீரசேகர தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தூதுவருக்கு இதனை கிரகிப்பதற்கான ஆற்றல் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை குறித்து  அறிக்கை வெளியிடுவதற்கு தனிநபருக்கு உள்ள உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சரத்வீரசேகர பொலிஸார் ஆயுதமேந்தாத  ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டனர் என தெரிவித்ததன் மூலம் தற்போது எங்கள் நாட்டில் வசிக்கும் தூதுவர் இலங்கை குறித்து உலகிற்கு பாதகமான செய்தியை அனுப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க இராணுவம் எவ்வாறு நடந்துகொண்டது அவர்களை கட்டுப்படுத்தியது என்பதையும் சரத்வீரசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அறிக்கைகள் மூலம் ஜூலிசங்  அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்தார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ” நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்.” – என்றார்.

இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வியாழக்கிழமை (டிச. 15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் , எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்,
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை தனது சவால்களை எதிர்கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு, அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு , சீர்திருத்த செயல்முறையை மேலும் மேம்படுத்துவதற்கும் நல்லாட்சியை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கும் நிபுணத்துவத்தை வழங்குவது அவசியமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்படை கப்பல் கையளிப்பு நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பங்கேற்பு

அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் ‘விஜயபாகு´ என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அதிகார சபைக்கு கையளிக்கும் நிகழ்வு, இன்று (22) மாலை கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தில் இடம்பெற்றது.

கடல் பிராந்தியத்தில் காணப்படும் பொதுவான கடல்சார் சவால்களை முறியடிக்கும் வகையில் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் இந்தக் கப்பல் அமெரிக்க கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

விசேட கடற்படை வாகனத் தொடரணியில் விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடற்படையினரின் விசேட மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் அவர்களும் பங்கேற்றார்.

கப்பலை, அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பத்திரத்தை கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவிடம் ஜனாதிபதி கையளித்தார்.

பின்னர் “விஜயபாகு” என பெயரிடப்பட்ட கப்பலின் பெயர்ப்பலகை மற்றும் உத்தியோகபூர்வ சின்னத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். ஜனாதிபதியும், அமெரிக்க தூதுவரும் கப்பலை பார்வையிட்டதுடன், கப்பலின் நினைவுப் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் இட்டனர்.

இதன்பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படைத் தளபதி விசேட நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். ´Hamilton Class High Endurance Cutter´ வகை கப்பல்களுக்கு சொந்தமான இரண்டாவது கப்பல் என்ற வகையில், இலங்கை கடற்படைக்கு கிடைத்த இந்த கப்பல் 115 மீட்டர் நீளம் கொண்டது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கடல் மைல்கள் ஆகும். இந்தக் கப்பல் ஒரே நேரத்தில் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மொத்தம் 187 கப்பல்களுடன் செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய கடற்படை தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வசதிகளையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பல் அமெரிக்காவின் கடலோர காவல்படையின் கீழ் இருந்தபோது, அந்​​நாட்டின் கடற்பகுதியில் நடந்துவந்த சட்டவிரோத மீன்பிடித்தல், சட்டவிரோத கடற்பயணம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக சிறப்பு பங்களிப்பை வழங்கியது.

P 627 ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பலைப் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டதில் இருந்து அதன் கட்டளை அதிகாரி கெப்டன் லங்கா திஸாநாயக்கவின் மேற்பார்வையில் கப்பலின் முதல் பணியாளர்கள் 130 பேர் கொண்ட குழுவினருக்கு சுமார் 10 மாதங்கள் கப்பல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கை கடற்படையின் தேவைக்கேற்ப கப்பலின் செயல்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டது.

அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

அமெரிக்க உயரதிகாரி இலங்கை விஜயம் : சிவில் சமூகத்தினர், அதிகாரிகளுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதி உதவிச்செயலர் அஃப்ரீன் அக்தர், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள அஃப்ரீன் அக்தர், இங்கு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தெற்காசிய அரசுகளுக்கான அமெரிக்க நிதியத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இதன்போது குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்குவது பற்றிக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் கடந்த வார இறுதியில் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இடம்பெறும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதியின் விஜயம் இதுவாகும்.