இலங்கை வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழ வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

“இலங்கை அதன் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழுவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடியான தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கை வணிக சபையின் 31ஆவது பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இங்கு கருத்துரைக்கையில்,

“நிலை பேண்தகு அபிவிருத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துக்கொள்ள இலங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம் பல்வேறு மறுசீரமைப்புகளை இலங்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முழுமையாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றுவதையும் நான் அறிவேன்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் இலக்கானது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், அதற்கான தடைகளை நீக்குவதாகும் என்பதையும் அறிவேன்.

பழைய கலாசாரங்களின் பிரகாரம் நாம் ஆரம்பித்த அதே இடத்திற்கு மீண்டும் செல்வது அல்ல இலக்காக இருக்க வேண்டியது.

இலங்கை இன்னமும் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. அதுதான் நாம் வெற்றிக்கொள்ள வேண்டிய இலக்கு.

அமைவிடத்தின் ஊடாக இலங்கை தெற்காசியாவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியும். வரலாற்றில் எதிர்கொண்ட சவால்களில் பாடங்களின் ஊடாக சகலரதும் பங்குபற்றலில் ஊடாக இந்த நெருக்கடியில் இருந்து மீள இதனை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்“ – எனவும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.