மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம்.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.
கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது வீடுகளை நிர்மாணிப்பதில் பழனி திகாம்பரம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
இன்று இந்தியாவின் உதவி மூலம் உணவு, எரிபொருள் மருந்து உரம், ஆகியவற்றுடன் அரசி மாத்திரமல்லாமல். கோதுமை மாவும் இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளைகள், இளம் சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என திருவள்ளுவர் கூறியுள்ளார்.
அதேபோன்று நீங்கள் கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பான இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகின்றேன். இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் மிகவும் பலமான உறவு காணப்படுகின்றது.
நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வருகைதர வேண்டும். அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோருகின்றேன் என்றார்.