ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்தது தேர்தல் ஒப்பந்தம் அல்ல – மனோ கணேசன்

“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்து இட்டுள்ளார். இது எமது தமுகூவின் தூரநோக்கு சிந்தனையின் வெற்றி.

எஸ்ஜேபி அரசு உருவாகுமானால், அப்போது, எமது மக்கள் தொடர்பாக முன்னெடுக்ககூடிய நலவுரிமை திட்டங்கள் என்ன, என்பதுபற்றிய எழுத்து மூலமான உள்ளக சமூகநீதி உடன்பாடு இதுவாகும். இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல. தேர்தல் ஒப்பந்தம், தேர்தல் வரும்போது வரும்.

தேசிய அளவில் நடந்துள்ள இந்நிகழ்வு பற்றி கேள்வி எழுப்பும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஐதேக கூட்டணி, அனுரகுமாரவின் என்பிபி கூட்டணி, தரப்புகளுக்கு எமது இந்த சமூகநீதி உடன்பாடு விபரங்களை அனுப்பி வைக்க நாம் தயார். அவர்களது பதில் நிலைப்பாடுகள் என்ன என அவர்கள் எமக்கு அறிவித்தால் அவை பற்றியும் கலந்தாலோசிக்க நாம் தயார். ரணிலும், அனுரவும் தயாரா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

இந்நாட்டில் வாழும் 15 இலட்சம், மலையக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்துக்குள், சரிபாதி ஜனத்தொகை இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கிறார்கள். இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மக்கள், சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்நாட்டிலேயே பின்தங்கியவர்கள்.

இதற்கு காரணம், மலைநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே என்ற கவர்ச்சிக்கரமான பிரசாரம் முன்னேடுக்கப்படுகிறது. இது வரலாற்றை திட்டமிட்டு மூடி மறைக்கும் சூழ்ச்சி. இந்த கண்ணாம்பூச்சி கவர்ச்சி கதையில் நாம் மயங்கி விடக்கூடாது. மலைநாட்டு அரசியல்வாதிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் உள்ளன. ஆனால், எமது மக்களின் குறை வளர்ச்சிக்கு முதல் மூன்று காரணங்கள், பேரினவாதம், இந்திய அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவை ஆகும்.

சுதந்திரம் பெற்றவுடன் எமது குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்து எமக்கு இன்று காணி, கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் முழுமையாக இல்லாமல், எம்மை பெருந்தோட்ட அமைப்புக்குள்ளே இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பது, பேரினவாதம் ஆகும். எம்மை கேட்காமலே, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்தி, எம்மை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தியது, இந்திய அரசு ஆகும். எம்மை இங்கே அழைத்து வந்து, எமது உழைப்பில் நன்கு சம்பாதித்து விட்டு, எம்மை அம்போ என விட்டு ஓடியது, இங்கிலாந்து அரசு ஆகும். இந்த வரலாற்றால், ஏற்பட்டுள்ள, தாழ்நிலைமைகளில் இருந்து வெளியே வருவது சுலபமான காரியம் அல்ல.

இந்த மூன்றுக்கும் பிறகுதான், மலைநாட்டு அரசியல் கட்சிகளின் பொறுப்பு வருகிறது. அதிலும், தமிழ் முற்போக்கு கூட்டணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, ஒரே ஒருமுறை மட்டும் ஆட்சியில் இருந்த முற்போக்கு அரசியல் இயக்கம் ஆகும். தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது பிரச்சினைகளை காத்திரமாக எடுத்து பேசி, முன் வைத்து, தீர்வு தேடும் இயக்கம், எமது கட்சியாகும். அதன் ஒரு அங்கம்தான், “நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என எஸ்ஜேபி தலைவர் சஜித் பிரேமதாசவை, மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறவைத்து, நாம் செய்துகொண்டுள்ள சமூகநீதி உடன்பாடாகும்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

13ஐ அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்துமாறு கனேடிய தெற்காசிய விவகார பணிப்பாளரிடம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

“13 ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. இது எமக்குத் தெரியும். ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இன்று இருக்கும் 13 ஆவது திருத்த அதிகாரப் பகிர்வு சட்டதையும், 16 ஆவது திருத்த மொழியுரிமை சட்டதையும் அமுல் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காட்டட்டும். அதை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இன்று நாம் இலங்கை அரசுடன் பேசி சலித்துப் போய் விட்டோம். அதேபோல் சர்வதேச சமூகத்திடமும் மீண்டும் இவற்றையே பேசி சலித்துப் போய் கொண்டிருக்கின்றோம்” – என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. விடுத்துள்ள ருவீட்டர் பதிவில்,

“பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடியத் தரப்புடன் பயன்தரும் விதத்தில் பேசப்பட்டன” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி பிரதிநிதிகள், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர் நாயகத்திடமும், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடமும், இந்த நாட்டை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு கொழும்பு அரசையும் தாம் எதிர்த்துப் போராடுவோம் எனவும் கூறினர்.

தமது அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் பேச்சு நடத்துவதைப் போன்று, சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறுவதிலும் சலிப்படைந்து வருகின்றார்கள் என்று தமிழ்த் தலைவர்கள் இன்று கூறியதைத் தாம் புரிந்துகொள்வதாகவும், அது தமக்கு ஒரு செய்தி என்றும் கனேடியத் தரப்பினர் தம்மைச் சந்தித்த கட்சித் தலைவர்களிடம் தெரிவித்தனர்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்க உள்ளதான செய்தி பொய்யான செய்தி – மனோ கணேசன்

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (19.04.2023) மனோ கணேசன் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது திரித்துக் கூறப்படும் பொய்யான செய்தி. இச்செய்தி, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்ததாகும். அத்துடன், இச்செய்தி ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் வந்தது.

மற்றும், ஐக்கிய மக்கள் கூட்டணி சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை – மனோ கணேசன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான மற்றும் கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆகவே இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், இந்த புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய சட்டமூலம் பலருக்கும் பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், மக்களுக்கு போராட்டம் நடத்த முடியாத சூழலை உருவாக்கும் என்றும் என்றும் எச்சரித்தார்.

சர்வதேச உடன்படிக்கையான 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமென்பது சர்வதேச உடன்படிக் கையாகும்.

இந்த திருத்தச்சட்டம் நாட்டின் அரசியலமைப்பில் இருந்தாலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால், வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல, 9 மாகாணங்களும் பயன் கிட்டும். எனவே, தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ அமுல்படுத்த வேண்டும் – என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

இந்தியா தொடர்ந்து உங்களுக்கு உதவி வழங்கும் – இந்திய தூதுவர்

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் மனோ கணேசன் கூறியவாறு இலங்கையை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய மக்கள் பங்களிப்பு வழங்குகின்றனர். இந்தியாவும் உங்களை மறக்காது. இந்தியா உங்களை எந்த நேரத்திலும் நினைவில் வைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வீடுகளின் நிர்மாணம் ஊடாகவும் புலமைபரிசில்கள் மற்றும் கல்வி ஊடாகவும் இந்தியா தொடர்ந்தும் உங்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. நாங்கள் இங்கு வந்ததில் இருந்து இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் இந்திய மக்கள் அறிவார்கள். நான் இன்று ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்திய மக்கள் இலங்கையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது வீடுகளை நிர்மாணிப்பதில் பழனி திகாம்பரம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

இன்று இந்தியாவின் உதவி மூலம் உணவு, எரிபொருள் மருந்து உரம், ஆகியவற்றுடன் அரசி மாத்திரமல்லாமல். கோதுமை மாவும் இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இளம் பிள்ளைகள், இளம் சிறுவர்கள், மற்றும் தாய்மாருக்கான பால்மாவை வழங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

அதேபோன்று நீங்கள் கேட்காமலேயே நண்பன் செய்வதை போன்று இந்தியாவும் உதவி வழங்கும். உங்களின் நண்பான இந்தியா இருக்கும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகின்றேன். இலங்கை மக்களுக்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கும் இடையில் மிகவும் பலமான உறவு காணப்படுகின்றது.

நீங்கள் கட்டாயம் இந்தியாவிற்கு வருகைதர வேண்டும். அடிக்கடி இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளும் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோருகின்றேன் என்றார்.