இந்தியா இலங்கை இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின்(IORA)அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (11) மாலை இடம்பெற்றது.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் மூன்று புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று சோதனை ஓட்டம்!

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பல் நேற்றையதினம் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் இன்றையதினம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நன்கொடை திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தது இந்தியா

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி பங்குடைமையானது 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்றைய தினம் (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

இலங்கையின் பொருளாதார தோற்றப்பாடுகளில் காணப்படும் துரிதமான மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நன்கொடை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில், இந்திய – இலங்கை உயர் பெறுபேற்று சமூக அபிவிருத்தி திட்டம் (HICDP) என்ற கட்டமைப்பின் கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் 9 திட்டங்களுக்குமான இறுதி ஒதுக்கீடானது 50 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து குறித்த 9 திட்டங்களுக்குமான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடானது 3 பில்லியன் இலங்கை ரூபாவினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய பல்வேறு துறைகள் உட்பட கல்வி மற்றும் சுகாதாரம் முதல் விவசாயம் வரையிலான சகல துறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டங்கள் காணப்படுகின்றன.

HICDP கட்டமைப்பின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 60க்கும் அதிகமான நன்கொடை அடிப்படையிலான திட்டங்கள் இந்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக ஏனைய 20 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. HICDP கட்டமைப்புக்காக இரு நாடுகளும் 2005ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு 5 வருட காலப்பகுதியிலுமாக இதுவரை 3 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த திட்டங்களின் கீழான தனித் திட்டங்களுக்கான உச்சவரம்பும் ஒட்டுமொத்த நிதி மூலதனமும் 2023 ஜனவரியில் இந்திய அரசாங்கத்தால் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி பங்குடைமையானது 5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையில் வழங்கப்பட்டதாகும்.

தேவைகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையிலும் மக்களை மையப்படுத்தியும் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு, வாழ்வாதார உதவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் பரவிக் காணப்படுகின்றன.

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, ரயில் பாதை புனரமைப்பு, ஒன்றிணைந்த நீர் நிலை திட்டங்கள், இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஆகியவை இந்திய அரசாங்கத்தால் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியத்துவமிக்க திட்டங்களில் உள்ளடங்குகின்றன என்றுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாட்டை ரணிலிடம் உறுதியாக எடுத்துரைத்தார் இந்திய பிரதமர் மோடி

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம், இலங்கை அரசியலில் இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்கு சென்றிருக்கிறார்.

ஹைத்ராபாத் இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மோடி வரவேற்றதோடு, இரு நாட்டு தலைவர்களும் இன்று காலை முக்கியக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த சந்திப்பின்போது, தமிழில் வணக்கம் எனவும் சிங்களத்தில் ஆயுபோவன் எனவும் கூறி தனது உரையை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, தமிழ் மக்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்திய – இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களான மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடையொட்டி அவர்களின் மேம்பாட்டு உதவும் வகையிலான திட்டத்தையும் இதன்போது மோடி அறிவித்துள்ளார்.தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்தை இலங்கையில் உறுதி செய்ய வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்ப்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்றும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதற்தடவை. இது எனக்கும், எனது அரசாங்கத்துக்கும் மிகவும் முக்கியமான சந்திப்பு என இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“அதிகாரப்பகிர்வின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்தல் உள்ளிட்ட வடக்குக், கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை இந்த வாரம் நான் முன்வைத்திருக்கிறேன்.

தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்திக்கொண்டு இந்த விடயத்தில் இணைந்து செயற்பட வேண்டுமென அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இது தொடர்பில் பொறுத்தமான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும். இது குறித்து இந்திய பிரதமருக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறேன்.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தித் துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயலாற்றுவதற்காக இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னை – இலங்கை இடையே சொகுசு கப்பல் சேவை ஆரம்பம்

 சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர்.

அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை – இந்தியா கைச்சாத்து

ஒரு வருட காலத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைசாத்திட்டமையே உறுதிப்படுத்தினார்.

இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் மார்ச் 2023 இல் கைச்சாத்திடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 576.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பயன்படுத்தியுள்ளது.

எஞ்சியுள்ள 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலும் ஒரு வருடத்திற்கு இலங்கை பயன்படுத்த அனுமதிப்பது இன்றைய உடன்படிக்கையாகும்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பைப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இலங்கையில் இனப்படுகொலை’ நடந்தது என கனடா பிரதமர் வெளிப்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று (மே 18) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பதாக கூறியது. அதில் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

கனேடியப் பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக வேற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என்று அமைச்சு மேலும் கூறியது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதில் கனடா உறுதியாக உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சுக்கு கனடா தகவல் வழங்கியது. இனப்படுகொலை தகவலை நீக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை கனடா கண்டுகொள்ளவில்லை.