ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட,கிழக்கில் தனித்துப் போட்டி – ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும்.

ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதன் மூலம்  பலத்தையும் கண்டுகொள்ள முடியும்.

தேர்தல் முடிந்த பிறகு கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் யோசிப்போம். இதற்கு சஜித் பிரேமதாஸவும் உடன்பாட்டை தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை வெளிக்காட்டுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், செயலாளர் நாயகம் /ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான குழுவொன்று பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள் கூட்டணி- மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாக போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் பங்காளிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் பங்காளிக் கட்சிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எமது இலக்காகும். அதற்கமைய வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். அந்த கூட்டணி எந்த வகையிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலாக அமையாது. காரணம், இவ்விரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்திலேயே தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யாகும்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியனை வழங்கினால் செலவுகளை கட்டுப்படுத்தி, அந்த தொகைக்குள் தம்மால் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பொருளாதார நெருக்கடியை குறிப்பிட்டு தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

தற்போது சமூக வலைத்தள ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தேர்தல் காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை முடக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. அது மக்களின் அடிப்படை உரிமையாகும்.

நாடு வங்குரோத்து அடைந்தமையால் ஜே.வி.பி.க்கும் பங்குண்டு. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களில் ஜே.வி.பி. பங்கேற்றிருக்கிறது.

அந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு ஜே.வி.பி.யே அனுமதி பத்திரத்தை வழங்கியது. எனவே தற்போது தம்மை தூய்மையானவர்களாக காண்பித்துக்கொள்ள முயற்சிக்கும் ஜே.வி.பி.யை பற்றி வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவர்.

நாம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே போட்டியிடுவோம். வடக்கிலும் கூட்டணியாகவே களமிறங்குவோம். இது தொடர்பில் தற்போது எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.

வேட்புமனுக் கோரலின் போது தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதில் தேர்தல்கள் ஆணைக்குழு முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த நேரிடும் என சட்ட நிபுணர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கிடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு கோரலுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை அழைத்து கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், தேர்தல் தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் வெளியிட முடியாது என்றும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி இறுதியாக இந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடியுள்ளது.

அதன் பின்னர் இதுவரையில் அவர்கள் மேற்குறிப்பிட்ட குழுவினரை சந்திக்கவில்லை என்பதும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரியவந்துள்ளது.

இது சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதில் பாரதூரமான தாக்கத்தை செலுத்தும் என்றும் குறித்த சட்ட நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு முறையான சட்ட முறைமைகளை பின்பற்றாவிட்டால், தேர்தலை சட்ட ரீதியாக நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தற்போது வேட்புமனு தாக்கல் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படும் கட்டுப்பணம் தேர்தல் செயலாளர் அலுவலகத்தினால் திறைசேரிக்கு அனுப்பப்படும்.

ஆனால் தேர்தல் ஆணைக்குழு வழமைக்கு மாறாக வேட்புமனு கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள்செலுத்திய கட்டுப்பணத்தை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தமது தனிப்பட்ட கணக்கிலிருந்து செலுத்த வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது, முதல்வர் வி.மணிவண்ணன் பதவியை துறந்தார்.இதையடுத்து, குழப்பமாக சூழல் ஏற்பட்டது.

முன்னதாக உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்தார். யாழ். மாநகர சபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினவவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், மீண்டும் முதல்வர் தெரிவு நடத்தப்படலாமென்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில், மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

களுத்துறையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் தேர்தல் செயலகத்திற்குச் சென்றுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பணிகளையும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் ஜனவரி 23 வரை ஏற்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இன்று(04) வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தலில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம், கட்டுப்பணத் தொகை, வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரல் அறிவித்தலே இவ்வாறு வௌியிடப்பட்டுள்ளது

யாழ் நகர சபையை கலைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்யவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்பதோடு அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு தேர்வு நடைபெறும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்yaaதிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.