இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.

இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

இலங்கையில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தல்

டெல்லி சென்றுள்ள தமிழக பாஜ.க தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவு த்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் இன்று (பிப்.,02) சந்திப்பு நடத்தினார்.

அப்போது, அவர் இலங்கையில் 13வது சட்டத்திருத்தத்தை மாற்றமின்றி உடனே அமல்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என வெளியுறவு த்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கையின் சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ், வருவாய் ஆகிய அதிகாரங்களை தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர் எனவே இலங்கையில் 13ஆம் திருத்தச்சட்டத்தை விரைவாக அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குதல், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேசப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

சந்திப்பின் போது, தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலையுடன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (ஜன 20) இடம்பெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்தி தேர்தலை நடாத்துவது முக்கியமானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் துணை நிற்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இணைந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டை பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை ஜெய்சங்கர் கையளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்தியா (இலங்கையின்) நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என்று வலியுறுத்திய ஜெய்சங்கர், இந்த தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்றார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி துரிதப்படுத்துவதற்காக முதலீடுகளை அதிகரிப்பதற்கான எங்களின் அர்ப்பணிப்பை வெளியிட்டேன் என ஜெய்சங்கர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழக்கிழமை (19) மாலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித்தலைவர்களான பி. திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன். எம்.பிக்களான எம். உதயகுமார், வேலுக்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நன்றிகளை தெரிவித்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்ததாவது;

இந்திய வெளிவிவகார அமைச்சரை நாம் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்தினோம். இதன்போது மலையகத்துக்கு இந்திய வம்சாவளித்தமிழர்கள் வந்து 200ஆவது ஆண்டு நிறைவு பெறுவது தொடர்பில் எடுத்துரைத்தோம்.

இந்த நிறைவை முன்னிட்டு மலையகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரிய பயிற்சி கலாசாலை, தாதியர் பயிற்சி கல்லூரி என்பவற்றை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசாங்கம் நிறுவவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம்.

அத்துடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், என்பவற்றை பயில்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் அதற்காக இந்தியாவிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் வரவழைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் மலையக கட்சிகளுடன் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் எடுத்துக்கூறினோம்.

ஜனாதிபதியை சந்திக்கும் போது இந்த விடயத்தை வலியுறுத்துமாறும் நாம் எடுத்துக்கூறியுள்ளோம். 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு மலையகத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் தொடர்பில் தமிழக அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளமை தொடர்பிலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனத் தெரிவித்தார்.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது´ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார்

அதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க‌. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (07) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 5.11.2022 அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக் ஜலசந்தியில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடி பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது