சீனாவின் 2 வருட கால கடன் தவணை அவகாசம் இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்

இலங்கையின் கடன்கள் தொடர்பில் சீனா இணங்கியுள்ள 2 வருட தவணை காலம் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனைகளுடன் வேறுபடுவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

10 வருட தவணை காலம் மற்றும் 15 வருட மறுசீரமைப்பு காலத்துடன் இலங்கையின், சர்வதேச நாணய நிதியக் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஆதரவளிக்க, இந்தியா முடிவு செய்துள்ளது.

எனினும் சீனாவின் அரச வங்கிகள் 2 வருட அவகாசத்தை மட்டுமே வழங்க தயாராக உள்ளன. இது இலங்கைக்கு மேலும் பொருளாதார வலியை ஏற்படுத்தலாம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் பாகிஸ்தானும் கடந்த தசாப்தத்தில் சீனாவின் பெல்ட் ரோடு முன்முயற்சியின் முக்கிய நாடுகளாக இருந்தன. அத்துடன் தமது நாடுகளில் வெள்ளை யானை திட்டங்களை உருவாக்க பீய்ஜிங்கில் இருந்து அதிக வட்டி கடன்களைப் பெற்றுக்கொண்டன.

எனினும் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மிகவும் தேவையான உதவிகளுடன் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் சீனா உற்சாகத்தை காட்டாமைக் காரணமாக, இலங்கையும், பாகிஸ்தானும் இன்று திவாலாகிவிட்டன.

இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார நெருக்கடி நேபாளம், பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.

இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைக்க சீனா இணக்கம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ள சீனா, இரண்டு வருடகாலத்திற்கு கடனை மீளப்பெறுவதை ஒத்திவைப்பதற்கு இணங்கியுள்ளது.

சீனாவின் எக்சிம் வங்கி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய இவை இலங்கையின் கடன்களை இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ள எக்சிம் வங்கி, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் நீண்டகால அர்ப்பணிப்புகள் குறித்து இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் எனவும் சீனாவின் எக்சிம் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஐ.எம்.எப் கடனுதவி பெற முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார்: அமெரிக்க தூதர் ஜுலி சங்

இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அனைத்துக் கடன்வழங்குனர்களும் இதற்கு இணங்கும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மேற்கொள்கின்ற கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்கத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும், ‘பாரிஸ் கிளப்’ நாடுகளுடன் ஒருங்கிணைந்து உரியவாறானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தததுமான கடன் சலுகைகளை வழங்குவதாகவும் இந்தியா அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்துக் கடன்வழங்குனர்களும் நியாயமானதும், பக்கச்சார்பற்றதுமான இணக்கப்பாட்டுக்குவரும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க அமெரிக்கா தயாராக இருக்கின்றது’ என்று அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி செயற்திட்டத்தை அண்மித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கடன்வழங்குனர்களும் இணங்கினால் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் – அமெரிக்கத்தூதுவர்அதேவேளை இந்த உதவியின் ஊடாக மாத்திரம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்கள் மற்றும் நம்பிக்கையை வலுவூட்டல் என்பவற்றுக்கான ‘செயற்திறன் ஊக்கியாக’ இந்த உதவி அமையும் என்று தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப். வழங்கும் வழங்கும் கடனுதவி இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது – அலி சப்றி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம்.

எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.

ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி.

மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக இந்தியா ஐ.எம்.எப் இற்கு தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது.

இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து சாதகமான சமிக்ஞை – ஷெஹான்

சீன எக்ஸிம் வங்கியுடன் (சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் ‘சாதகமானவையாக’ அமைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க கடந்த வியாழக்கிழமை நிகழ்நிலை முறைமை ஊடாக சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சீன எக்ஸிம் வங்கியின் தலைவரால் வெளிக்காட்டப்பட்ட பிரதிபலிப்பு சாதகமானதாக அமைந்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

‘அதேவேளை நாம் இந்தியாவுடனும் மிகநெருக்கமாகப் பணியாற்றிவருகின்றோம். எனவே தற்போது அவர்களிடமிருந்து ‘உத்தரவாதத்தை’ (கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான) பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியமுள்ளது.

அந்த உத்தரவாதத்தை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். இந்நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதனையும் கூறவில்லை’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நீடித்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முதற்கட்ட உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவ்வுதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைக் கடந்த ஆண்டு இறுதியில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் எதிர்வுகூறியிருந்தது.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் அவசியமான விடயமாகவுள்ள கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாடு இன்னமும் எட்டப்படாத நிலையில், இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு பங்களாதேஷ் 6 மாத கால அவகாசம்

இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை  வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி இரண்டாவது காலாண்டிலேயே கிடைக்கலாம் – அறிக்கை

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் ஒப்புதல் 2023 இன் இரண்டாம் காலாண்டு பகுதியிலேயே சாத்தியமாகும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி தொடர்பான உத்தரவாதங்களை பெறுவதில் ஏற்பட்ட தாமதமே இவ்வாறான எதிர்வுகூறலிற்கு வருவதற்கு காரணம் என தெரிவித்துள்ள ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் இதனால் வர்த்தக கடன் வழங்குநர்களுடான பேச்சுவார்த்தைகள் தாமதமாகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே கிடைக்கலாம் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடன்மறுசீரமைப்பு குறித்த உடன்படிக்கைகள் 2023 இறுதியிலேயே என எதிர்பார்க்கின்றோம் எனவும் என ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்திக்கலாம் எனவும் ஸ்டான்டர்ட் சார்டெட் குளோபல் ரிசேர்ச் எதிர்வுகூறியுள்ளது.

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.