எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும், நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டது.
சமூக கட்டமைப்பில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு இன, மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு ஊடாக நிலையான தீர்வு காண வேண்டும். அதற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின் வழக்குகள் தொடர்பில் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்துமாறும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச. 05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு,நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்களுக்கு அதிக காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறை கைதிகள் பலர் சாதனைகளை புரிந்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இலக்காக கொண்டு இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆரூரரன் அண்மையில் அரச இலக்கிய விருதில் தமிழ் சிறுகதைக்கான விருதை பெற்றுள்ளார். இவரை போன்று பலர் இவ்வாறு சிறையில் உள்ளார்கள்.
60 அல்லது 70 ஆண்டுகளாக சிறையில் 6 பேர் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தேவதாசன் என்ற சிறை கைதி கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பலர் நோய் வாய்ப்பட்ட நிலையில் சிறை கைதிகளாக உள்ளார்கள் இவ்வாறானவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
எமது நாட்டின் கல்வி முறைமையை சிறைச்சாலைகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பாடசாலைக்கு செல்லாத 2494 கைதிகளும்,ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை தோற்றிய 12 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும், புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 17 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 6,790 கைதிகளும் உள்ளார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் 198 பட்டதாரிகள் சிறைகைதிகளாக உள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் தொடர்பில் நீதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும்.அத்துடன் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட்டு, உண்மை நிலை நாட்டப்பட வேண்டும்.
அரசியல் பிரதிவாதிகளை இலக்காக கொண்டும். எதிர்கால அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை 21 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,
ஆனால் எப்பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல ஆண்டுகால பழமை கொண்ட ஜப்பான் நாட்டின் அரசியலமைப்பு இதுவரை ஒருமுறை தான் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 235 வருடகால அரசியல் பின்னணியை கொண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பு இதுவரை 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது,ஆனால் 74 ஆண்டுகால அரசியல் பின்னணியை கொண்ட இலங்கையின் அரசியலமைப்பு இதுவரை 21 முறை சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்யவில்லை. நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பினை திருத்தம் செய்துள்ளன. நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டன ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை.
சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இனம், மத பேதமற்ற வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.