ஒக்டோபர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் ! – ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிச்சயமாக நடக்கும். அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அவர் எப்படி வெல்வார் என்பதை வென்ற பிறகு நான் காண்பிக்கிறோம். ஐ.எம்.எப். தற்போது எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் திருப்தியடைந்துள்ளது.

பலரும், ஐ.எம்.எப். எமக்கு உதவிகளை செய்யாது என நாடாளுமன்றத்தில் கூறினார்கள். நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாக, நான் வாக்களித்த எனது நண்பரும் ஐ.எம்.எப். எமது நாட்டுக்கு உதவிகளை செய்யாது எனக் கூறினார்.

இப்போது ஐ.எம்.எப். எமக்கான கடனுதவிகளை வழங்க முன்வந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவரினால்தான் இது சாத்தியமானது என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்தே இவர்கள் அரசியல் ரீதியாக எந்தளவு தெளிவுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவர்களிடம் ஆட்சி சென்றால், யாழில் எத்தனை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது என்று கேட்ட நிலைமை தான் நாட்டுக்கும் ஏற்படும்.

இதுதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் நடாத்தப்பட வேண்டும்; எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரமில்லை – பேராயர் மல்கம் ரஞ்சித்

“சர்வசன வாக்கெடுப்பை நடத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தாமே ஆட்சிசெய்ய முடியுமா என்று பார்க்க பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அதன் பிரகாரம் ஐந்து வருட ஆட்சி நிறைவின் பின்னர் கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு ஆயர் மெக்ஸ்வெல் சில்வாவால் எழுதப்பட்ட ‘இலங்கையில் கிறிஸ்தவ தர்மத்தைக் கற்பிப்பதற்கான சவால்கள்’ என்ற தலைப்பிலான நூலின் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் ரெஜிமண்ட் சமூகத்தில் இல்லை. பட்டம் அனுப்பும் விதம் தெரியுமா? இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களின் வெறுப்புக்குள்ளான ஆட்சியாளர்களே மீண்டும் இந்த நாட்டை ஆட்சி செய்ய சர்வசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக பட்டம் விடுகிறார்கள்.

அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஐந்து வருட காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐந்து வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பிரஜைகள் என்ற அடிப்படையில் அது எமது உரிமையாகும்.

அரசாங்கத்தால் எமது உரிமைகளைப் பறிக்க முடியாது.

குழந்தையிடமிருந்து அதன் கெளரவத்தை எவ்வாறு பறிக்க முடியாதோ, அதேபோன்று சுதந்திரத்துக்கான எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தால் பறிக்க முடியாது. இதுவரையில் கண்டது சகலதும் போதும். சுதந்திரமான தேர்லொன்றினூடான எமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அது எமது உரிமையாகும். அது எமக்கு அவசியமானதாகும் என்றார்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் எதிர்க்கட்சித்தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு, தேசிய அமைப்புகளின் ஒற்றுமை, தேசப்பற்றுள்ள தேசியப் படை, இரண்டாம் தலைமுறை, யாழ். சிவில் சமூக மையம், அகில இலங்கை அமைப்பு, பிரஜை அதிகாரத்திற்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் அமைப்பு, பூகோள இலங்கை சங்கம், நீதி மற்றும் இறைமைக்கான மக்கள் குரல், தேசப்பற்றுள்ள அறிஞர் சங்கம் என்பன கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி இல்லாததால் அலுவலகப் பிரதிநிதி ஒருவரிடம் போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

செப்டம்பர் 17 – ஒக்டோபர் 16 இடையே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்னாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சிக்கலை ஏற்படுத்தியவர் சுமந்திரனே – நீதியமைச்சர் குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்த விவகாரத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எம்.ஏ.சுமந்திரன் கடும் அழுத்தம் பிரயோகித்தார்.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் உரையாற்றுகிறாரா அல்லது பிரதேச சபையில் உரையாற்றுகிறாரா ? என்பதை அறியவில்லை.உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.அவரது உரையில் விரக்தி மாத்திரமே எதிரொலித்தன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் இவர் சபையில் உரையாற்றுகையில் ‘உயர்நீதிமன்றம் வீட்டுக்கு செல்ல வேண்டும் ‘ என்று இவர் குறிப்பிட்டார்.இவர்களுக்கு சார்பான தீர்ப்பு கிடைக்கும் போது சபைக்கு வந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு செல்ல கூடாது என்று குறிப்பிடுகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ‘உயர்நீதிமன்றத்தின் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு உண்டு.அன்று குறிப்பிட்ட விடயத்துக்கும்,இன்று குறிப்பிடும் விடயத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உண்டு.நான் அன்று குறிப்பிட்ட கருத்தில் எவ்வித மாறுப்பாடும் கிடையாது என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய நீதியமைச்சர், மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.சிறந்த சட்ட வரைபை நாங்கள் தயார் செய்து முன்வைத்தோம்.உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தார்.இதனால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.இதற்கு எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும்.ஆகவே நீங்கள் தான் ( சுமந்திரனை நோக்கி) நீங்கள் தான் அப்போதைய பிரதமருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தீர்கள்.

இதன்போது மீண்டும் குறுக்கிட்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் .நான் எதிர்க்கட்சி உறுப்பினர் நீங்கள் தான் அமைச்சரவை உறுப்பினர் ஆகவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும் ‘ என்றார்.

நான் அமைச்சரவையில் இருந்தேன். சிறந்த சட்ட மூலத்தையே பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்தோம்.சட்டமூலம் குழுநிலை வேளையில் திருத்தம் செய்யப்பட்ட போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்கள் கவனத்திற் கொள்ளவில்லை.இவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.சிக்கலை நீங்களே (சுமந்திரனை நோக்கி) ஏற்படுத்தினீர்கள் என்றார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு – உதயங்க வீரதுங்க

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பஷில் ராஜபக்ஷவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்ஷவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்ஷவின் பிரதான பணியாக இருந்தது.

இவ்வாறான நிலையில், பஷில் ராஜபக்ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும். இருப்பினும், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பஷில் ராஜபக்ஷவே முன்னெடுப்பார்.

மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.

ஏவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ மீண்டும் பொதுஜனபெரமுனவினைப் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றார்.

தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னரேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரவு – பொதுஜன பெரமுன

பிரதமர் தலைமையிலான அரசியல் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்வரை நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

தற்போதைய தேர்தல் முறையின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்க கட்சியாலும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாட்டின் தலைவரான பிரதமர் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அவ்வாறான அரசாங்கம் தனக்குஆதரவளிக்கும் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆட்சிசெய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜனபெரமுன எப்போதும் கொண்டுள்ளதுஎன தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைகாரணமாக மாகாணசபைகள் முறைகள் போன்றவற்றினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையின் கீழ் அவைகள் ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புதிய கூட்டணியில் இணைவதற்கு 28 கட்சிகள், 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் – நிமல் லான்சா

புதிய கூட்டணியில் இணைவதற்காக 28க்கும் மேற்பட்ட கட்சிகளும், 60க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் என, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் சனிக்கிழமை (27) ஜா-எல நகரில் நடைபெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெருமளவிலான எம்.பி.க்களையும், கட்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் மிகப் பெரிய கூட்டணி உருவாக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக கட்சி சின்னமோ, கட்சியோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதற்காக ஏராளமானோர் திரண்டுள்ளனர். தலைவரோ, தலைமைக் குழுவோ இல்லாமல் எமது அழைப்பை ஏற்று வந்துள்ள மக்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதற்காக இந்த கூட்டணி ஒன்று கூடவில்லை. பொருளாதாரத் திட்டத்தை வலுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கவே கூடியுள்ளது. இதுவரை வந்த அரசியல் பயணம் கடந்த இரண்டு வருடங்களில் பின்னோக்கி சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே 30 வருட அரசியல் பின்னோக்கிச் சென்றுள்ளது. கற்ற சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, முதல் பணியாக வரியைக் குறைக்க ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனையை வழங்கியவர் நாலக கொடஹேவா. இப்போது அவர் சஜித்துக்கு அறிவுரை வழங்குகிறார்.

மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்காகவே இந்த பணியை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல, வருமானம் மற்றும் செலவு என்றால் என்ன? வருமானத்தைப் பெருக்கி, செலவுகளைக் குறைக்கும் முறையைக் கூற வேண்டும். இதைப் பற்றி அரசியல்வாதிகள் மேடைகளில்பேசுவதில்லை. மக்களுக்கு உண்மையையும், யதார்த்தத்தையும் புரிய வைக்க இப்புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டணிக்கு ஒரு தலைவர், கட்சி, சின்னம் இல்லாவிட்டாலும் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களும், அதிக எண்ணிக்கையிலான கட்சிகளும் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும்.

ஜனாதிபதி 14 மாதங்களில் 14 தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றதாக அநுர குமார குறிப்பிடுகின்றார். நாட்டை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு சர்வதேச நாடுகளுக்குச் செல்ல வேண்டியவர் செல்ல வேண்டும். அநுர குமாரவினால் ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று சர்வதேச நாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியம் வந்ததும் பயந்து ஒழிந்து கொண்டார்.

உலகிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் செல்லும் தலைவர் தேவை. அவ்வாறின்றி ஏழ்மை மனப்பான்மை கொண்ட, கிணற்றுத் தவளை மனநிலையுடன் செயற்படும் ஊமை கதாபாத்திரங்கள் தேவையில்லை. அநுர குமார அவர்கள் கூட்டத்தை நடத்திய மைதானமே இது. அன்றைய தினத்லும் பார்க்க இன்று அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர். 22 மாவட்டங்கள் மற்றும் 160 தொகுதிகளில் எமத திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

இலங்கை முழுவதிலும் உள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். இது ஒரு ஒத்திகை மாத்திரமே. அனைத்துக் கட்சிகளுடனும், அனைத்து எம்.பி.க்களுடனும் பேசி, துணைத் திட்டத்தை தயாரித்துள்ளோம். எனவே, அச்சமின்றி ஒன்றுபடுங்கள், பொய்யர்களும், தற்பெருமையாளரர்களாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

இந்த புதிய கூட்டணிக்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கொண்ட ஒவ்வொரு ஆசனத்திலும் மக்களை அணி திரளச் செய்து, ஜனநாயக ரீதியான ஒரு அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்க முடியும்.

கோட்டாபாய ராஜபக்சவை அழைத்து வருமாறு சமூக வலைத்தளங்களில் பெரும் அலை எழுப்பப்படுகிறது. நாம் அப்பணிக்கு செல்லவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாய் வீச்சாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.

Posted in Uncategorized

இனவாத, மதவாத, குடும்பவாத அரசியலில் இருந்து விடுபட வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது மஹிந்த தேசப்பிரிய இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

மேலும், எதிர்கால இளைஞர்களின் அரசியலில் அவர்களது பங்களிப்பு மற்றும் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

Posted in Uncategorized

தேர்தலில் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் – பேராயர்

ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிறிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறை பிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்குரிய ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே மேற்கத்தேய முறைகளின் கீழ் செல்லாமல் மக்களின் பசியைப் போக்கக்கூடிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

முகத்துவாரம் புனித ஜோன் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற விசேட ஆராதனையின் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைக்குள் காணப்படும் பிரச்சினைகளிலிருந்து எம்மால் ஒதுங்கியிருக்க முடியாது. மத தலைமைத்துவம் என்பது வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று போதனை செய்துகொண்டிருப்பது மாத்திரமல்ல. மக்களுக்கு துயரம் ஏற்பட்டால், அவர்களுக்காக வீதிக்கு இறங்கி குரல் கொடுப்பதே உண்மையான தலைமைத்துவமாகும்.

இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும் என அனைவராலும் கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சி நிரலிலிருந்து வெளியேறி பிரிதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் சிறைபிடிக்கப்படுவதை தேர்தலின் மூலம் நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது தேவையாகும். சில நியாயங்களுக்கு அடிமையாகி, வெளிநாடுகளில் நிராகரிக்கப்பட்டுள்ள நியாயங்களின் பின்னால் செல்வது பிரயோசனமற்றது.

அவற்றின் பின்னால் சென்று நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. இலங்கையில் காணப்படும் சுயநலவாத போக்கு முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. மேற்கத்தேய கலாசாரம் எமது நாட்டுக்கு பொருந்தாது. நாட்டிலுள்ள மக்களின் பசியைப் போக்கும் அரசியலே இலங்கைக்கு பொருத்தமானது. அவ்வாறு செயற்படுவதே தலைமைத்துவத்தின் பொறுப்பாகும் என்றார்.