மாகாணசபைத் தேர்தலை உடன் நடாத்தி ஜனநாயக மரபைக் காக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

அதாவது 2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அநேகமாக அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்பாக ஜனாபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

வருகிற 2024ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திலும் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பலகோடி நிதியை வேட்புமனு தாக்கலுக்காக கட்டியுள்ளனர்.

ஆனால், தேர்தலுக்கு நிதி இல்லை என்று அரசாங்கம் சாக்குபோக்கு சொல்லி குறித்த தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான சட்டதிருத்தம் கொண்டுவரப்படும் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆகவே, மாகாண தேர்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க மாகாணசபைத் தேர்தல்களை நடத்தும்படி தமிழர் தரப்பு கோரிய பொழுதும் அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மாறாக, வடக்கு-கிழக்கில் தான் விரும்பிய ஆளுநர்களை நியமித்து, தான்தோன்றித்தனமான முறையில் பௌத்த பிக்குகளும் இராணுவமும் பொலிஸாரும் கூட்டாக காணிகளைக் சுவிகரித்து, அத்தகைய இடங்களில் புதிது புதிதாக புத்த கோயில்களைக் கட்டுவதும் எங்கோ தூரப்பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களைக் கொண்டுவந்து இங்கு குடியேற்றுவதுமாக அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சி முறைக்குள் அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாணசபை முறைமை ஒன்று உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாவிட்டாலும் கூட, அதுவே இந்த அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது. அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்காக அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

மாகாணசபை அதிகாரத்தில் இல்லாத காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாகவும் ஏனைய வழிமுறைகளிலும் மாகாணத்திற்கு உரித்தான பல அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பறித்துக்கொண்டது. இன்றும் அது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதனூடாக மாகாணசபை ஒரு அர்த்தமற்ற நிர்வாக அலகாக மாற்றப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் அச்சத்தில் வாழ்கின்ற சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்தி தமிழ் மக்கள் தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக வாழ வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதுடன், பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

ஆகவே, ஏனைய தேர்தல்களுக்கு முன்பாக குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களையாவது உடனடியாக நடத்த முன்வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தைக் கோருகின்றோம்.” என்றும் குறித்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண, உள்ளூராட்சி தேர்தல்களை நடாத்துவது மிக அவசியம் – மகிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள  முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம்,பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை அவை இந்த காலத்தின் தேவை எனினும் இவற்றிற்கு முன்னர் எங்களிற்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க காட்டர் சென்டர்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (18) கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது நடைபெறவிருக்கும் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதே போன்று வாக்காளர்களை அறிவூட்டக்கூடிய நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில் கபே அமைப்பு சார்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மன்னாஸ் மக்கீன் மற்றும் சட்டத்துறை பணிப்பாளர் ஹரேந்ர பானகல மற்றும் காட்டர் சென்றர் பிரதிநிதிகளான சஹிரா சகீட், தாரா செரீப்,மார்க் ஸ்டீவன்,தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான சீஎம்இ, பெப்ரல்ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெசனல், ஐரெக்ஸ் ஆகியவற்றை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கப் போகும் விமுக்தி குமாரதுங்க?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.

கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விமுக்தி குமாரதுங்கவை வெளிநாடு ஒன்றில் சந்தித்து இது தொடர்பாக அறிவித்துள்ளார்
எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசிர்வாதமும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் விமுக்தி குமாரதுங்க இந்த விடயம் தொடர்பில் தனது இறுதி முடிவை அறிவிக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த காலங்களில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் பிரிட்டனில் கால்நடை மருத்துவராக சேவையாற்றி வரும் விமுக்தி குமாரதுங்கவுக்கும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது எனக் கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் விமுக்தியை அரசியலில் களம் இறக்கும் நோக்கமில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வேட்பு மனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கில்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றமே ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் ஆரம்பிக்க வேண்டும்.நிதி நெருக்கடி காரணமாக இம்முறை வாக்காளர் பதவி உள்ளிட்ட சகல பணிகளும் தாமதமடைந்தன. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் நிதி விடுவிப்பு முடக்கப்பட்டதால் தேர்தல் வாக்கெடுப்பு எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தெரிவுக்குழுவின் உறுப்பினர் ரோஹன பண்டார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்ற நிச்சயமற்ற தன்மை காணப்படும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்த அரச சேவையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3000 அரச சேவையாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு அரச நிர்வாகம் அமைச்சின் ஊடாக தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யும் அரச சேவையாளர் ஒருவர் தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எம்மால் செயற்பட முடியாது.

அத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. இவ்விடயம் குறித்து சகல கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையிலான அரச நிர்வாகம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத் குமார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும் என்று குறிப்பிட முடியாத நிலை காணப்படுவதால் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பு மனுக்கலை இரத்து செய்வதற்கு முன்னர் தேர்தல் பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ள நிதியை பெற்றுத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்.

தேர்தல் நடத்தப்படாமையால் இலங்கையின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் கட்டுப்பாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆளுநர்கள், செயலாளர்கள், ஆணையாளர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் மாத்திரமாவது மாகாண சபைத் தேர்தல் நடாத்த வேண்டும்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது வட கிழக்கில் மாத்திரமாவது மாகாணசபை தேர்தலை நடத்த வலியுறுத்தி கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தலையும் முடக்கி விடுவார் என்றும் தான் ஒரு போதும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை !

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது.

வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்த நிலையில் இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனக வக்கும்புர கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஒன்று இவ்வருடம் இடம்பெறும் – மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினமான செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையை அரசாங்கம் மதிக்கவில்லை ; பவ்ரல் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் இலட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் என கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தை தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருவது இன்று தெளிவாக தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாத்து கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது எனறார்.

Posted in Uncategorized