பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடமையில் இருந்த பொலிஸாரைத் தாக்கி, அவர்களைக் கடமையைச் செய்யவிடாது நடந்துகொண்டார் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கும் வரையில் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வாசித்துக் காட்டியிருந்தனர். அதன் பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பொலிஸாரினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எவருக்கும் 50 வீத வாக்குப்பலம் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே, தேர்தலுக்காக அன்றி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நுவரெலியாவில் நேற்று (02) நடைபெற்ற 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் நம்பிக்கை அற்றுப்போயுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன, தேசிய சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரை அலி சப்ரி ரஹீமை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு வேறு வழியில்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
தங்கம் மற்றும் ஏனைய பொருட்களுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதற்காக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.
74 மில்லியன் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 4.2 மில்லியன் மதிப்புள்ள 91 ஸ்மார்ட் போன்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை தெளிவுபடுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனை கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அரசியல் கட்சிகளுக்கு நாட்டிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என சாகல ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.
மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.
இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.