குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக நாடாளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

கடன் வாங்கி இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி பெறப்பட்டமை இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் ஒரு படியாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், 4 வருடங்களில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி பெறுவதாகவும், இதன் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் எனவும் தெரிவித்தார்.

“கூடுதலாக, நாடு மற்ற தரப்புக்களிடமிருந்து விரைவான கடன் ஆதரவில் சுமார் 7 பில்லியன் டொலர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறது. சிலர் நாணய நிதியத்தின் கடன் வசதியை மற்றொரு கடனாகக் கருதுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர் நாட்டின் மொத்தக் கடனையும் பெற்ற தொகையைக் கொண்டு அடைக்க முடியாது என்று கூறுகின்றனர்.

இந்த அறிக்கைகள் அறியாமையை அல்லது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை காட்டுகின்றன என்றார்.

பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் சரி செய்யப்படுகிறது. பணவீக்க விகிதத்தை 6-4 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட, கடன் வாங்கி வருமானம் ஈட்ட வேண்டும்“ என்றார்.

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது – ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை வாங்கிய அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும். இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த பாதையை பின்பற்றினால் 2048 இல் இலங்கையை உலகில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.

நான் பிரதமரானதும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. பட்ஜெட் விவாதத்தின் போது அவர்கள் ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியபோது ஆதரிக்கவில்லை.அந்த சமயங்களில் பல்வேறு காரணங்களை கூறி ஆதரிக்க மறுத்தனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, ராஜபக்சவை மீட்பதே எனது நோக்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் கடினமான காலத்தில் இருந்து இலங்கை அன்னை மீட்கப்பட்டதை சர்வதேச சமூகம் கூட தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் விதிகளை வகுத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுகிறோம்.

இப்போதும் கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் கையிருப்பை பூச்சியமாக்கி விட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடாத்தும் யோசனை தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

நாடாளுமன்றில் ஐ.எம்.எப் உடன்படிக்கை முன்வைக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி இரவு இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியதுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி ஆகியோர் இணைந்து அன்றைய தினம், இரவே இது குறித்து ஊடக சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிபதிகளை தெரிவுக்குழுவுக்கு அழைத்தமை குறித்து இங்கிலாந்து, வேல்ஸ் சட்டத்தரணிகள் அவதானம்

உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வது மீண்டும் ஆராயப்படுமென எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை

இலங்கை பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு முன்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை அழைத்து விசாரணை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் மீண்டும் ஆராயப்படுமென தாம் எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் தொடர்புடைய நீதிபதிகளை பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்க தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை இன்று அறிக்கை வௌியிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவை என்பது 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முறை சட்டத்தரணிகளைக் கொண்ட, பொது உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்கத்திற்கான முன்னணி சர்வதேச சட்டத்தரணிகளின் அமைப்புகளில் ஒன்றாகும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுகிறதா என்பது கண்டறியப்படும் வரை, இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் BAR கவுன்சில் நினைவுகூர்ந்துள்ளது.

“நீதித்துறை செயற்பாட்டில் தகாத அல்லது தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது” என்பதும் “நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து கடைப்பிடிப்பது அரச மற்றும் பிற நிறுவனங்களின் கடமை” என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை கோட்பாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சுதந்திரமான நீதித்துறை என்பது சட்டவாட்சியின் இன்றியமையாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதியென “இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் பேரவையின் தலைவர் Nick Vineall KC-இன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் ஆயிரம் பேருக்கு புலமைப்பரிசில் பாகிஸ்தான் வழங்குவதன் நோக்கம் என்ன? செல்வம் எம்.பி சபையில் கேள்வி

 

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில்களை வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 2023 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு அல்ல என ஜனாதிபதியும் அரசாங்கமும் குறிப்பிடுகின்ற நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயித்துள்ளது. தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இழுபறியால் நாட்டு மக்களும் வேட்பாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடக்குமா, அல்லது பிற்போடப்படுமா என்பதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனை விடுத்து இரு தரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருந்தால் தேர்தல் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை சிதைவடையும்.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். சர்வதேசமும் இதனையே வலியுறுத்துகிறது. 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகள் நிறுவப்படும் என அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதி வழங்குகிறது. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வது முழுமையான தீர்வாக அமையாது. அதிகார பகிர்வு என்பது அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஓர் ஆரம்பப் புள்ளியாக கருதப்படும். மத்திய அரசாங்கத்திடம் உள்ள பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நிறுவன மட்ட அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட வேண்டும்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் வழங்கல் திட்டங்களை முன்னெடுக்கின்றன. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் புலமைப்பரிசில் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கத்துடன் ஒன்றிணையாமல் முன்னெடுத்துள்ளதன் நோக்கம் என்ன? நாட்டில் மூவின மக்கள் வாழ் கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேசத்தில் மாத்திரம் புலமைப்பரிசில் வழங்குவது தவறான நிலையை தோற்றுவிக்கும். ஆகவே இந்த விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் – என்றும் கூறினார்.

மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படின் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் – ரெலோ வினோ எம்.பி

பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது . அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இலங்கையில் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனாவிலிருந்து பிரிந்தவர்கள் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது அவர்களின் சுயநல அரசியலுக்காகவே எனவும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம்அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்தி பதவி ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பது பச்சோந்தி தனமான செயல் என்று தெரிவித்தார்.