அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் – சிவில் அமைப்புகளும், தனிநபர்களும் கூட்டறிக்கை

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள், நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் தீவிரமாக்கும் என்று 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும், 89 தனிநபர்களும் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தி சமூகம் மற்றும் சமயத்துக்கான நிலையம், இலங்கை ஆசிரியர் சங்கம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், மனித உரிமைகள் அலுவலகம், சட்ட மற்றும் சமூக நிதியம், மக்களுக்கான சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட 40 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் 89 தனிநபர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமையும் மீறப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட்டு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் மீது வன்முறைக் குழுக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறிப்பாக, அரசாங்கத்தின் ‘சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள்’ இடம்பெறும் நாளில் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்துவது குறித்து நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய, எவ்வித குழப்பங்களோ அல்லது பொது மக்களுக்கான இடையூறுகளோ இன்றி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் ஊடாக அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்கள் கொண்டிருக்கும் உரிமை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதுமாத்திரமன்றி, இத்தாக்குதல்களின்போது கைதுசெய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களின் மருத்துவ மற்றும் சட்ட உதவியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

நாடொன்றின் சுதந்திரம் என்பது அந்நாட்டு மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு கொண்டிருக்கும் உரிமையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், தற்போதைய அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிறது.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக தற்போது நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை, வேலையிழப்பு, வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் தமது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீண்ட கால யுத்தம் மற்றும் இனவாத அரசியலால் ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களும், பெருந்தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களும், மேலும் பலருக்கு கிடைத்ததாக கூறப்படும் ‘சுதந்திரத்தின்’ பின்னரும் தமக்குரிய அடிப்படை உரிமைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் துன்பப்பட்டு வருகின்றனர்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் முகங்கொடுத்துவரும் இப்பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தாமல், அவை தொடர்பில் குரல் கொடுக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்க முயல்வது கவலைக்குரிய விடயமாகும்.

முன்னைய அரசாங்கங்கள் கடைபிடித்த தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான கொள்கைகளும் அடக்குமுறை நடவடிக்கைகளுமே நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் என்பதை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

எனவே, அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறைகள் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் தீவிரமாக்கும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தல் என்பன இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாகும்.

ஆனால், இந்த அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த உரிமையை மீறுகின்றது. ஆகவே, நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக தீர்க்கமாக தலையிடுமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

75 ஆண்டுகளாக இடம்பெறும் ஊழல் மோசடிகளே இலங்கையின் யாசகம் பெறும் நிலைக்கு காரணம் – பேராயர்

சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.

இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.

பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.

தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?

21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.

ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.

இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?

இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.

எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.

தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடிப் பேச்சு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இதன்படி 10 வருடங்களுக்கு கடன் தடைக் காலத்தையும், 15 வருட மறுசீரமைப்பையும் வழங்க இந்தியா உடன்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜப்பான் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு பாரிஸ் கிளப் மூலம் ஆதரவை தெரிவித்தது.

எனினும் சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி, இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும், இதன் அடிப்படையில் இரண்டு வருட கடன் தடையை வழங்க முடியும் என்றும் இலங்கையின் நிதியமைச்சுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

எனினும், இலங்கை தொடர்பான திட்டத்தைத் தொடர்வதற்கு சீனாவின் முன்மொழிவு போதுமானதாக இல்லை என்று சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஒரே மாதிரியான திட்டம் இருக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் தலையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவை நீடிக்கும் அறிக்கையை பாரிஸ் கிளப் இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் கிளப், இலங்கைக்கு 10 வருட கடன் தடைக்காலத்தையும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்துள்ளது.

இது நாட்டின் நிதி சிக்கல்களை ஒழுங்கமைக்க போதுமான நேரத்தை வழங்கும்.

ஆதாரத்தின்படி, சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற பரிஸ் கிளப்பிற்கு வெளியே உள்ள பல நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளை நிறைவுசெய்யும் என நம்புவதாக வெளிநாட்டு ஊடக மொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இந்தியா இல்லையேல் இலங்கை மோசமான விளைவுகளைச் சந்திருக்கும் – மிலிந்த மொராகொட

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பிற்கான இந்தியாவின் உதவி மற்றும் சர்வதேச நாணயநிதியத்திற்கு இந்தியா வழங்கியுள்ள நிதி உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் உதவிகள் ஆதரவுகள் இரு நாடுகளிற்கும் இடையிலான நம்பிக்கையில் காணப்படும் இடைவெளியை மேலும் குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டினாலும் இந்தியா போன்று இலங்கைக்கு உதவியிருக்க முடியாது என தெரிவித்துள்ள மிலிந்த மொராகொட கடந்த 22 மாதங்களில் மூன்நு தடவையாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை- அவரது சமீபத்தைய விஜயம் இரு நாடுகளினதும் இருதரப்பு உறவுகள் புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் பொருளாதார மீட்சியின் ஆரம்பத்தை குறித்து நிற்கின்றது எனவும் மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.

சுகாதார நெருக்கடியாக மாறும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி – உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின்  மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவான பதில்களை உறுதி செய்ய முயல்வதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் அதிகரித்துவரும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக சுகாதார நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரகிசிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த வரவு செலவுதிட்ட மதிப்பீடு 300 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 2023 இல் இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மூலம் 80 மில்லியன்  டொலர்களே கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இன்னமும் 220 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது இலங்கையின் சகாக்களுடன் இந்த இடைவெளியை அவசரமாக நிரப்பவேண்டிய தேவையுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளதார நெருக்கடிகள் சுகாதார துறைக்கு பல சவால்களை அளித்த என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும்சமூகம் நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு உதவுவதற்கும் நாங்கள் சகாக்களின் உதவியை பெறவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அனைவருக்கும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் 2023 மேலும் வீழ்ச்சியடையும் – உலக வங்கி

இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் அதன் விளைவுகள் வறுமையை அதிகரித்துள்ளதுடன் கடந்த தசாப்த காலத்தில் பெறப்பட்ட பலாபலன்களை இல்லாமல் செய்துள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொடரும் அந்நியசெலாவணி பிரச்சினைகள் உயர் பணவீக்கத்தின் தாக்கம் முக்கிய வர்த்தக  சகாக்களின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக  2023ம் ஆண்டு குறித்து முன்னர் எதிர்வுகூறப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென்னாசிய குறித்து தெரிவித்துள்ள உலக வங்கி உக்ரைன் யுத்தத்தின் தாக்கங்களை இந்த பிராந்தியம் தொடந்தும் அதிகரிக்கின்றது என தெரிவித்துள்ளது.

தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2023 இல் 5.3 வீதமாக காணப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டை மீண்டும் அழிக்க அனுமதிக்க மாட்டோம் – வஜிர அபேவர்தன

சரிந்த நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.

சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் பெரும் தொகையை வார்த்து இந்த தருணத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் மக்கள் வாணலியில் விழுவார்கள் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.

நாட்டின் இளைஞர்கள் கோரிய முறைமை மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சிகள் அதற்கு வெளியில் சென்று பழைய வேலைத்திட்டத்தில் செயற்படுவதாக வஜிர அபிவர்தன தெரிவித்தார்.

பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் வெற்றி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பரில் பணவீக்கம் 61 சதவீதமாகவும், டிசம்பரில் பணவீக்கம் 57.2 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக பணவீக்கத்தை குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முடிந்துள்ளதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்தவுடன் வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும் என நம்புவதாகவும், இந்த ஆண்டு வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடியால் இலங்கை தொழில் முயற்சியாளார்களுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau தெரிவித்தார்.

உணவுத் துறையில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) மூலதனத்திற்கான அணுகலை வழங்குவதற்கு உதவிசெய்யும் ஒரு புத்தாக்க விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதியினை உருவாக்குவதற்காக Keells Supermarkets மற்றும் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) ஆகியவற்றுடன் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பானது (USAID) ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது.

இந்த வசதியானது மூலதனத்திற்கான அணுகலை அதிகரிப்பதன் ஊடாக கொவிட்-19 பெருந்தொற்றின்போது உருவாகி நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமடைந்த விநியோகச் சங்கிலித் தடங்கல்களை குறைக்கிறது.

“விநியோகச் சங்கிலிகளுக்கான நிதியளிப்பு முயற்சியில் USAID மற்றும் HNB ஆகியவற்றுடன் ஒன்றிணைவதானது, தற்போதைய நெருக்கடியின் போது MSMEs மூலதனத்தை அணுகுவதற்கான வாய்ப்பினைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

எமது பங்குதாரர்களுக்கு ஒரு பொதுவான மதிப்பீட்டினை உருவாக்குதல், உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவி செய்தல், மற்றும் உற்பத்திப் பொருட்கள் எமது வாடிக்கையாளர்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய எங்களது இலக்குகளுக்கு இந்த வசதி உதவியாய் அமைகிறது.” என Keells Supermarkets இனது தாய் நிறுவனமான John Keells Holdings இனது தலைவர் சரித்த சுபசிங்க தெரிவித்தார்.

இந்த வசதியானது போட்டித்தன்மைவாய்ந்த நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட நிதியுதவியை MSME களுக்கு வழங்குகிறது.

இந்த வசதியானது அது செயற்பட்ட முதல் வாரங்களில் எட்டு விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் 430,000 அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கியது.

ஆறு மாதங்களில் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனைப் பெற்றுக் கொள்வதற்கு கிட்டத்தட்ட 100 MSMEகளுக்கு உதவிசெய்வதற்கு பங்காண்மை திட்டமிட்டுள்ளது.

“உணவுத் துறையில் MSME களுக்கு இது போன்ற ஒரு புத்தாக்க நிதியியல் தீர்வை வழங்குவதற்காக Keells உடன் ஒன்றிணைவதானது HNBஇற்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும்.

வியாபாரங்கள் தொடர்ந்து சீராக இயங்குவதற்காக MSMEs மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல், சம்பளங்களை வழங்குதல் மற்றும் ஏனைய குறுகிய கால செலவுகளை மேற்கொள்தல் போன்ற அவர்களின் செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது உதவி செய்யும். MSMEகள் தமது வணிக நோக்கங்களை அடைவதற்கு இது மேலும் வலுவூட்டும் என நாம் நம்புகிறோம். இந்த முயற்சியில் HNB உடன் ஒன்றிணைந்ததற்காக USAID மற்றும் Keells ஆகிய இரண்டிற்கும் நாம் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என SME மற்றும் சில்லறை வங்கியியல் பிரிவிற்கான HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன தெரிவித்தார்.

“சமீபத்திய உலகளாவிய விநியோகச் சங்கிலி தடங்கல்கள், அதிகரித்த எரிசக்திச் செலவுகள், நிலையற்ற பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஆகியவற்றின் காரணமாக இலங்கை தொழில்முயற்சிகள் அதிகரித்துச் செல்லும் அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

அவற்றுள் சில அழுத்தங்களை இந்த விநியோகச் சங்கிலி நிதியளிப்பு வசதி தணிப்பதுடன் MSMEs தமது செயற்பாட்டு மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் உதவுகிறது.” என USAID இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான செயற்பணிப் பணிப்பாளர் Gabriel Grau கூறினார்.