யாழில் நீதி தேவதையிடம் மண்டியிட்டு நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற ஓர் மனித சங்கிலி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது கொக்குவில் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டோர், நீதி தேவதையின் உருவ சிலைக்கு கறுத்த துணி கட்டி, நீதி தேவதையின் கையில் உள்ள தராசு ஒரு பக்கமாக தாழ்ந்து இருக்க கூடியவாறு, நீதி தேவதையின் உருவ சிலையை காட்சி படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

பின்னர் சட்டத்தரணிகள், அரசியல்வாதிகள் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் நீதி தேவதையின் உருவ சிலைக்கு முன் மண்டியிட்டு, நீதி கோரினர்.

நீதித்துறையின் சுதந்திரத்தை காக்க தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் – நிரோஷ்

தமிழ் மக்கள் தமக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் எவற்றுக்கும் நீதியை வழங்கத்தக்க சுயாதீன பொறிமுறைகள் உள்நாட்டில் இல்லை என்ற யதார்த்தத்தினை வெளியுலகிற்கு உணர்த்துவதற்கும் நீதித்துறையின் சுதந்திரத்தினைக் காப்பதற்கும் நாம் ஒன்றுதிரண்டு போராட வேண்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

புதன்கிழமை (04) இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக கோப்பாயில் இடம்பெற்ற துண்டுப்பிரசார நிகழ்வில் பங்கேற்று கருத்துரைக்கும்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், நீதித்துறைச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. அச்சுதந்திரம் அண்மைய நாட்களில் வலுவாக மீறப்பட்டு வந்துளளது. குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று இடத்தினை பௌத்த சிங்கள மயமாக்குவதற்கு அரச திணைக்கமான தொல்லில் திணைக்களம் மற்றும் இராணுவம் பொலிஸ் போன்றவற்றின் அரச ஒத்துழைப்புடன் இனவாத நிகழ்ச்சித்திட்டம் நடைபெறுகின்றது. இதன்போது மக்களின் நீதியை உறுதிப்படுத்திய நீதிபதியை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.

நீதிமன்ற தீர்ப்;புக்களே உதாசீனம் செய்யப்பட்டதுடன் அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கௌரவ நீதிபதி ரி.கணேசராஜா அவர்கள் அடிப்படையில் இனம் மதம் மொழி கடந்து நீதியை நிலைநட்டுவதற்காக உழைத்தபோது அவர் நாட்டில் வாழமுடியாமல் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் சட்டவாக்கத்திற்குப் பொறுப்பான பாரளுமன்றில் உறுப்பினர்களுக்குக் காணப்படும் சிறப்புரிமையினை பயனபடுத்தி சரத் வீரசேகர போன்றோர் தமிழ் நீதிபதி என அவரையும் நிதித்துறையினையும் அச்சுறுத்தினர். மீயுயர் சபையில் நீதிபதிகளை பகிரங்கமாக இனவாதிகள் எச்சரித்தனர். உண்மையில் பாராளுமன்ற சிறப்புரிமை ஊழல்களை அல்லது மக்கள் சார்பாக கருத்துச் சுதந்திரத்தினை வலுப்படுத்தும் நோக்கம் உடையது. அதனை வெறுமனே நீதித்துறையினை அச்சுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வியப்புடையதாகும்.

இந்நிலையில் நாளை நடைபெவுள்ள போராட்டத்தில் கைகோர்ப்பது காலத்தின் தேவை என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழில் நாளை மனிதச்சங்கிலி போராட்டம்: துண்டுப்பிரசுர விநியோகம் தீவிரம்!

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டதை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் நாளை (4) பிரமாண்ட மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை மருதனார்மடம் சந்தியில் இருந்து யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் இன்று யாழ் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சே.கலையமுதன் உள்ளடங்கலானவர்கள் இன்று சுன்னாகம், மருதனார்மடம் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தி.நிரோஸ் உள்ளடங்கிய குழுவினர் கோப்பாய் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர்.

யாழ்ப்பாண நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக முடங்கின

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்கிறது.

நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்கமைய நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
“ அத்துடன் நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் 2 நாட்கள் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி யாழ் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் (3,4) சட்டத்தரணிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம், மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்வர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (29) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், கலையமுதன், ரெலோ சார்பில் தி.நிரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் 7ஆம் திகதி முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு தூதராலயங்களுக்கும் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர்  குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது

குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுப்ட்டனர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அருகில் கம்மன்பில தலைமையில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது.

கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை நோக்கி, இன்று மதியம் 2.30 மணியளவில் உதய கம்மன்பில தலைமையில் வந்த சுமார் 150 பேர் வரையிலான அடிப்படைவாதிகளை பொலிசார் வழிமறித்தனர்.

அவர்களை கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசாரும், அதிரடிப்படையினரும் அனுமதிக்கவில்லை.

பொலிசாரின் நீர்த்தாரை பிரயோக வாகனமும் அங்கு தரித்து நின்றது.

கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசார் அனுமதிக்காத நிலையில், அதற்கு பக்கத்து வீட்டின் முன்பாக நின்று கம்மன்பில கூட்டம் சத்தமிட்டபடி நின்றது. சிறிது நேரம் கூச்சலிட்டபடி நின்ற கும்பலை பொலிசார் அப்புறப்படுத்தினர்.

Posted in Uncategorized