ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிஸார் தடை ஏற்படுத்தினர்.

அதனையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அடக்குமுறையைப் பயன்படுத்த பொலிஸார் தடை ஏற்படுத்தியதுடன் சிலரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (11) மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.

யாழில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை.மாணவர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தின விழா மீண்டும் இன்றைய தினம் யாழில் இடம்பெறவுள்ளதால், அதனை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் சமூக அமைப்பினரும் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டக் களத்தில் பெருமளவு கலகம் அடக்கும் கால்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந்தொகையான பண செலவிலும் இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் செய்யவேண்டிய தேவை ஏன் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்கு பணம் இல்லை என கூறி சுதந்திர தினத்துக்கு பணத்தை செலவளிப்பது ஏன் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உப தலைவர் இ.தர்சனும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்றைய போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முறையற்ற வரி விதிப்பிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வரி விதிப்பினூடாக அரசாங்கம் பொதுமக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு இணையாக அரச, தனியார் துறை வைத்தியர்கள் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு பிரிவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் வாகன போக்குவரத்திற்கு  தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனிடையே, புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள், கொழும்பு கோட்டை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பு கோட்டையின் பல்வேறு வீதிகளில் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாக அமைதியான போராட்டங்கள் மற்றும் பேரணியினை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயற்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பௌத்தாலோக மாவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தை உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவானிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அநீதியான வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பினால் நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கொழும்பு – ஹைட்பார்க்கில் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.

Posted in Uncategorized

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு விசனம் – மாற்றுக் கொள்கை நிலையம்

சுதந்திர தினத்தன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் மிகுந்த விசனமடைவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அரச சொத்துக்கள் வீண்விரயம் செய்யப்படுவது குறித்து கரிசனையை வெளிப்படுத்தி அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுகட்டாயமாக கலைக்கப்பட்டதையும் கைதுசெய்யப்பட்டதையும் ஊடக செய்திகளின் வாயிலாக ஆதாரபூர்வமாக அறியமுடிந்தது.

அமைதிவழிப் போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் மிகையானளவிலான படையினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன் அச்சத்தை தோற்றுவிக்கக்கூடியவாறாக மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் என்பன குறித்து கரிசனை கொள்கின்றோம்.

ஒன்றுகூடுதல், கருத்து வெளிப்பாடு ஆகியவற்றின் கூட்டாக இருக்கக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஆரோக்கியமான இயங்கு நிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்புக்கு இன்றியமையாததாகும்.

எனவே, இவ்வுரிமையை புறக்கணிப்பதென்பது இலங்கையின் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் : மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

அத்துடன், இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பேரெழுச்சிப் பிரகடனம்

யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

  1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
  3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

  1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
  3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
  5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

திம்பு கோட்பாடுகள்

  1. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மரபுவழித் தாயகம்l

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது பேரணி; உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வட, கிழக்கு தமிழ் மக்கள்

கடந்த 04.02.2023 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு ஆரம்பித்தவர்கள் திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்; இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கிலிருந்து கிழக்குக்கு பேரணி மூன்றாவது நாள் திருமலை நோக்கி ஆரம்பம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

Posted in Uncategorized

பொலிஸாரின் தடையை மீறி யாழ்.பல்கலையில் பேரணி ஆரம்பம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பேரணி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் ஊடாக எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,

ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.

தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள், தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்,தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.

அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். எமது உரிமைகளை நாம் விடடுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும். ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.