கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றிய யாழ். போதனா வைத்தியர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர்.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்றவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பளப் பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்கத் தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் என்றனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கொழும்பில் இன்று (16) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் (16) காலி வீதி , கொள்ளுபிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி வரையான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதன் போது பொலிஸாரினால் பிரதான வீதி மறிக்கப்பட்டிருந்தமையால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெரைன் டிரைவ் வீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறும் பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்படடோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.

பேரணி காரணமாக பொலிஸார், இராணுவத்தினர் உட்பட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெறவுள்ள நல்லூர் பகுதியை சுற்றிலும் வீதிதடைகள் ஏற்படுத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நடத்த சென்ற உறவுகளை பேருந்தில் தடுத்து நிறுத்திய இராணுவம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டுவாகலில் பேருந்தை நிறுத்தி, பேருந்தின் சாரதி மற்றும் அதில் சென்றவர்களின் விபரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை வலிறுத்தி புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி மாதவமேஜரின் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது.

ஓரணியில் திரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் போராட்டக்களத்திற்கு சென்று வழங்கிய உத்தரவாதத்தையடுத்து, முன்னாள் போராளி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

அவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னாள் போராளியான மாதவமேஜர் கடந்த 9ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு மறுநாள், தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்தது. இந்த நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளான
ரெலோவின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் க.சிவநேசன், ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சியினர் உள்ளிட்டவர்கள் போராட்டக்களத்திற்கு வந்தனர்.

தமிழ் மக்களின் எதிர்பார்வை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், 6 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதாகவும், தொடர்ந்தும் கட்சிகளை இணைத்துக்கொள்வோம், அதனால் மாதவமேஜர் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழ் கட்சிகள் ஓரணியாக செயற்பட்டு, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் உறுதியுடன் செயற்பட வேண்டுமென மாதவமேஜர் விடுத்த கோரிக்கையை ஏற்று, எழுத்துமூலம்
உத்தரவாதமளித்தனர்.

புதிதாக வலுப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டுமென்றும், நம்பிக்கையூட்டும் விதமாக உருவெடுத்துள்ள இந்த கட்டமைப்பில் இணையாமல் விலகிச் செல்பவர்கள் தொடர்பில் மக்கள் முடிவெடுக்க வேண்டுமென்றும் மாதமமேஜர் கோரிக்கை விடுத்தார்.

அவரது தாயாரும், புதுக்குடியிருப்பு- இரணைப்பாலை பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளாரும் இணைந்து நீராகாரம் வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதேவேளை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் போராட்டக்களத்திற்கு வந்திருந்தனர்.

கட்சிகளை ஒன்றிணைய வலியுறுத்தி நடக்கும் போராட்டக்களத்திற்கு வந்த அவர்கள் தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்றதில் நியாயம் உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு போராட்டக்களத்தில் நின்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ரணிலின் ஏஜெண்ட்டுகள் என குரல் எழுப்பினர்.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள கோரி முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சாகும் வரையான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நபர், இதுவரை நீராகாரமும் அருந்தாமல் போராட்டத்தை தொடர்கிறார். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேயர் என்பவரே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது தந்தை நாட்டுப்பற்றாளர் கௌரவமளிக்கப்பட்டவர் என்றும், 3 உடன்பிறப்புக்கள் மாவீரர்களாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தீர்வுக்காக அரசியல் கட்சிகளை ஒன்றிணையக் கோரி நாவற்குழியில் போராட்டம்

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரயில்வே வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர் – பந்துல

புகையிரதத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதற்கான உடனடி பதில்கள் இல்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ரயில் ஓட்டுனர்கள், கன்ட்ரோலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களை நியமிக்காமல், நீண்ட நாட்களாக மெத்தனப் போக்கில் இருந்த ரயில்வே துறை, பணியமர்த்தப்பட்டாலும், பணியமர்த்தப்பட்டதால் மட்டும் ரயிலை இயக்க முடியாது.

அதற்கான பயிற்சி காலத்தை முடிக்க நீண்ட காலம் எடுக்கும். இதன் காரணமாக ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் நடக்காது.

இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதில்கள் இல்லை. நீண்ட காலமாக குவிந்து கிடக்கும் பிரச்சினைகளை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் தீர்க்க முடியாது.

தீர்வு கிடைக்காவிட்டால் வரும் 10ம் திகதி முதல் ரயில் நிறுத்தப்படும். இது நன்றாக இல்லை. இது பாவம். ரயிலில் பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாகும்.

அமைச்சர்களாகிய எங்களுக்கு 10ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள் அதனால் ஆட்சேர்ப்பினை அனுமதியுங்கள்என்று கூறுமளவிற்கு அதிகாரம் எமக்கு இல்லை. ஒரு அமைச்சராக, நான் அரசியலமைப்பின் படி நாட்டின் சட்டங்களை பின்பற்றுகிறேன்.

அமைச்சரவைக்கு அறிவித்துள்ளோம். அது ஒரு குழுவிடம் விடப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். கமிஷன் இல்லை என்று சொன்னால் இல்லை.

ஆணைக்குழுவின் உத்தரவின்படி வர்த்தமானியில் வெளியிட வேண்டும். இன்று 44 நிலைய தளபதிகளையும் பணியமர்த்தினோம். இத்தேர்வுக்கு 29,000 பேர் தோற்றியுள்ளனர். சில ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.

மின் கட்டணம் அதிகரிக்கப்படின் மீண்டும் மக்கள் போராட்டம் தலைதூக்கும் – உதய கம்மன்பில

மின்கட்டண அதிகரிப்பு,மின் விநியோக துண்டிப்பு ஆகிய காரணிகளினால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மீண்டும் போராட்டம் தோற்றம் பெற அதிகம் வாய்ப்புள்ளது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹரக பகுதியில் ஜனவரி முதலாம் திகதி (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை இவ்வார காலத்திற்குள் ஸ்தாபிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் பிற்போட முடியாது, அடுத்த மாதம் நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.தேர்தலை நடத்த வரவு செலவு திட்டத்தில் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் காணப்படுகிறது.சமூக பாதுகாப்பு அறவீட்டுத் தொகை வரி மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பை தவிர்த்து வேறு திட்டம் ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்படும்,மக்கள் பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும் என்றார்.

Posted in Uncategorized