மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட கடற்படையினர் தடை

யாழ்ப்பாணம் – மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின் பின்புறமாக உள்ள கடற்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட வேண்டாம் என கடந்த 2013ஆம் ஆண்டு கடற்தொழிலாளர்களுக்கு கடற்படையினர் தடை விதித்த நிலையில் , அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , அப்பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட கடற்படையினர் அனுமதித்தனர்.

இந்நிலையில் தற்போது அப்பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி , விகாரையின் பின் பகுதிகளில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளார்.

அத்துடன் அப்பகுதிக்கு அருகில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடற்படையினர் அவர்களை அவ்விடத்தில் இருந்து துரத்தி வருகின்றனர் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் இலங்கை வெளிக்கடை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள 151 விசைப்படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை 10 மணியில் இருந்து தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மீனவர்களின் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சிமடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தமையால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த்தால் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றையதினம் காலை 11 மணியளவில் மீனவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 7 பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது போராட்டகார்ர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்துமீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டகாரர்களை இடைமறித்த பொலிஸாருடனும் வாக்குவிதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய மத்திய அரசால் ஏன் தடுக்க முடியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருப்பதைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனுவில் ‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஜனவரி 22-ம் தேதி கைது செய்துள்ளனர். எனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா “கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தீர்வு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்” என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் “கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் “இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் “மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதை தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கிறது?” என கேள்வி எழுப்பினர். பின்னர்இ இந்த வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்இ விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ் இந்திய மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டது பற்றி வேதனையை பகிர்ந்துள்ள அவர் இது பற்றி கூறியிருப்பதாவது;

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது.

அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் தமிழக அரசு இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என அவர் தெரிவித்துள்ளார்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகு சீஷெல்ஸ் கடற்படையால் மீட்பு

இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த இந்த மீன்பிடிப் படகு கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த படகிலிருந்த 6 மீனவர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சந்திக்க உள்ள நிலையில் குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்

அத்துடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழ தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசாங்கமும், திமுகவும் உறுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியான தீர்வை எட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

சீன கடலட்டை பண்ணைகள்: மோடியிடம் உதவிகோரும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்று (13) காலை கலந்துரையாடினர்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.

டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இதுவரைக்காலமும் பறிமுதல் செய்யப்பட்ட 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதுபோன்று இடம்பெறும் சம்பவங்கள் ஏழை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கிறது என்றும் அவர்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்திய மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்துகின்றபோதும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.