வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு விடுதலையானவர்கள், சுலக்சன், தர்சன், திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயம் முன்னிலையாகியிருந்தார்.
மேலும் இன்றைய தினம் விடுதலையான சுலக்சன் என்ற அரசியல் கைதியையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் மீண்டும் அவ்விடத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பிற்பாடு மக்கள் இம் மலைக்குச் சென்று சிவமூர்த்திகளை வழிபட தொடங்கியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்த போதும் அத்தடைகளை தாண்டி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் 2018 ல் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் வனவளத் திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர்.
இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்காள்ள அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு மக்கள் சென்ற போது சிவலிங்கம் மற்றும் ஏனைய விக்கிரகங்கள் தூக்கியெறியப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்தின் பெயரும் வட்டமான பர்வத விகாரை என பௌத்த விகாரையின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு புகையிரத பாதையின் மஹவ – ஓமந்தை வரையான பாதையை புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மதவாச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக , அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரூ. 33 பில்லியன் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான சர்வதேச ஐஆர்சீஓஎன் இந்த ரயில்வே புனரமைப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றது.
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.
இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா வவுனியா மாவட்டங்களில் ஆட்சியாளர்கள் பொது விளையாட்டு மைதானம் ஒன்று அமையப்பெறுவதை தடுத்து வருகின்றார்கள். எமது மண்ணின் விளையாட்டு வீரர்களுக்கு பாரபட்சம் காட்டுகின்றார்கள். சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.
தேசிய போட்டிகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள். விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள்.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி,விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மன்னார் மாவட்டத்திற்கு என பொது மைதானத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தில் தலையீட்டுடன் ஆரம்பத்தில் நிர்மாணிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டது,தற்போது உரிய காரணிகள் இல்லாமல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உதைப்பந்தாட்டத்திற்கு பிரசித்துப் பெற்றுள்ளது.விளையாட்டு வீரர்களுக்கு உரிய மைதானம் இல்லாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே குறித்த மைதானம் விரைவாக முழுமைப்படுத்தப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
அபிவிருத்தி தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் அழகாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாவட்ட அபிவிருத்திகளின் போது பாரப்பட்சம் காட்டப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் பொது மைதானம் இல்லை.அப்பிரதேச இளைஞர்களுக்கு என்று வசதிகளுடனான மைதானம் ஒன்று இல்லை. ஆகவே மாவட்ட அடிப்படையில் திட்டமிட்ட வகையில் புறக்கணிப்புக்கள் இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மைதானத்தை அமைப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,வெறும் இழுத்தடிப்புக்கள் மாத்திரம் இடம்பெறுகிறது. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறது.வடமாகாணத்திற்கு என சகல வசதிகளுடன் மைதானம் என்பதொன்று இல்லை.
சர்வதேச மட்டத்திலான போட்டிகளின் போது தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் பங்குப்பற்றும் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார்கள்.
தேசிய போட்டிபகள் பெரும்பான்மை சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதாக காணப்படுகிறது, இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.
இளைஞர்கள் போதையின் பாதையில் செல்கிறார்கள்.விளையாட்டுத்துறையை மேம்படுத்தினால் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுத்துறையில் அதிக நாட்டம் செலுத்துவார்கள். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்து செல்கிறது,போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் சீரழிந்து செல்கிறார்கள்.இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.
ஆகவே போதைப்பொருள் பாவனை தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தில் பொலிஸார் மந்தகரமாக செயற்படுகிறார்கள்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 – 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர்.
அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்