தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சந்தைப்படுத்தல் பொருளாதாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வெகு விரைவில் சிறந்த திட்டங்களை வெளியிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள தீர்மானங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருந்தாலும் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போராடுகிறார்கள். தற்போதைய ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை என்பன மீண்டும் பலவீனமடையும், சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வேண்டும். பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும். தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும். வட்டி வீதம்,பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது,நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாகப் பேண முடியாது. மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களினால் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் சந்தை பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருளாதார மீட்சிக்கான 20 திட்டங்களை முன்வைத்துள்ளார். 2022.ஆகஸ்ட் மாதமும்,2023 பெப்ரவரி மாதமும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை முன்வைத்தோம்.ஆனால் அரசியல் நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசாங்கம் எமது யோசனைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை.சந்தை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய சிறந்த திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்படும் – ஹர்ஷ டி சில்வா

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் பாராளுமன்றத்துக்குள் உள்ளதா,வெளியில் உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் பாராளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம் கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.

இந்த சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த சட்டமூலத்தினால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

2020 சீனி மோசடி – ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழு கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

அக்டோபர் 13, 2020 திகதி வர்த்தமானி 2197/12 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சீனி இறக்குமதிக்கான விசேட வியாபாரப் பண்ட வரியில் 99.5% குறைக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது குறித்து இதன்போது குழு தனது அதிருப்தியை சுட்டிக்காட்டியது.

நுகர்வோரின் செலவிலிருந்து குறைக்கப்பட்ட வரி விகிதத்தை நியாயமற்ற வகையில் ஒரு சில பாரிய நிறுவனங்களுக்கு அனுகூலம் பெறுவதற்கு இடமளித்து இந்தவொரு பொறுப்புக்கூறும் முறையொன்றை செயற்படுத்தியில்லை என குழு சுட்டிக்காட்டியது.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எந்தளவு வரி அறவிடுவது என்பது தொடர்பில் விசாரித்த குழு, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியது. சீனி மோசடி சம்பந்தமான வரி அறவிடுவதன் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்வதே இதன் நோக்கமாகும்.

இந்தச் சிக்கலை மேலும் ஆராயும் வகையில், சீனி மீதான விசேட வியாபாரப் பண்ட வரியை ஒரு கிலோவுக்கு 0.25 சதத்திலிருந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக மீண்டும் மாற்றும் முன்மொழிவு தொடர்பான குழுவின் கரிசனையை குழு எடுத்துக்காட்டியது.

சம்பந்தப்பட்ட பாரிய நிறுவனங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க அனுமதிக்கும் அதே வேளையில் சராசரி இலங்கையரிடம் இருந்து 30 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் நிதியமைச்சின் நோக்கம் இதன்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொது மக்கள் மீது கூடுதல் நிதிச்சுமைகளை சுமத்துவதற்கு முன்பு தவறு செய்பவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

விசேட வியாபாரப் பண்ட வரி மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, MRPயை விதிப்பை குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு குழு பணிப்புரை வழங்கியது.

மேலும், மொத்த விநியோகஸ்தர்கள் MRP க்கு மேல் விற்பனை செய்வது மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்மொழியுமாறு குழு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்தது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்தால் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினை இரத்துச் செய்யும்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச்செய்யும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மெட்டா கூகுள் யூடியுப் போன்ற பொருளாதாரத்திற்கு அவசியமான பாரிய தளங்களுடனான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ள நாங்கள் சிறுவர் பாலியல் மற்றும் ஏனைய பாரிய இணைய குற்றங்களை தடுப்பதற்காக பாரிய தளங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்;கை சமூகத்தின் நலனிற்கு இது மிகவும் அவசியமானது அவசர நடவடிக்கைகளிற்கு பதில் பயனளிக்ககூடிய தீர்வுகளை முன்வைப்போம் எனவும் ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் – ஹர்ஷ டி சில்வா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

Posted in Uncategorized

உள்நாட்டுக் கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது – ஹர்ஷ

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலே ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம் – ஹர்ஷ டி சில்வா

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாகக் கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் எனத் தெரிவித்து, அவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போகிறார் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500 இறகும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல் நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுத்தால் ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாவேதில்லை.

2010 இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – என்றார்.

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.