இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
அத்துடன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பத்திரிகை கழகம் கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (5) ஏற்பாடு செய்த “இந்திய கதை : சீர்திருத்தம் | செயல்திறன் | மாற்றம்” என்ற தலைப்பிலான கேள்வி பதில் நிகழ்சியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
இந்தியாவைப் பொறுத்தவரையில் நகரம் மற்றும் கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகளை நாம் வேகத்துடனும் சக்தியுடனும் முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு எமது பிரதமர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குகின்றார்.
போக்குவரத்து, தொழில், 5 ஜி தொழில்நுட்பம், டிஜிட்டல் போன்றவற்றில் இந்தியா பல திட்டங்களை நகர மட்டத்திலும் கிராம மட்டத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கு தலைமைத்துவம் முக்கிய பங்கை வகித்தது.
நீண்டகால நோக்கை முன்னிலைப்படுத்தி குறைகளை அடையாளம் கண்டு திட்டங்களை முன்னெடுத்தோம்.
குறிப்பாக டிஜிட்டல் அடையாள அட்டை, டிஜிட்டல் நிதியியல், பணப்பரிமாற்று டிஜிட்டல் அடையாள அட்டை ஆகிய திட்டங்களை கூறமுடியும்.
இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவும் குறிப்பாக உட்கட்டமைப்புகளை முன்னெடுக்கவும் மிக முக்கிய பங்கு வகித்தது கல்வி வளர்ச்சியே.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியமானது. இதனால் இலங்கைக்கே பல்வேறு நன்மைகள் உள்ளன. எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருவதாக அமையும்.
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை விட இலங்கையின் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகமாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் போக்குவரத்து, உள்நாட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் அதிவேக வீதி, ஏனைய உட்கட்டமைப்பு, மேம்பாலங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், வலுச் சக்தி ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படுகின்றது.
தம்புள்ளை சீதாரக்கையில் இந்திய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட பதப்படுத்தல் நிலையம் குறித்த செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு இந்தியா உதவிகளை தொடர்ந்து வழங்கும்.
விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மீன்பிடி போன்றவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்துகொண்டிருக்கும். உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்ற போதிலும் அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும்.
இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையென்பது பல தசாப்தங்களாக காணப்படும் பிரச்சினையாகும். இது இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெறும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் வாழ்வாதார பிரச்சினைகளை குறைக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்தில் பாரிய மாற்றங்களை செய்வது கடினமானது. என்றாலும் காங்கேசன்துறை முதல் மாத்தறை வரையிலான ரயில் போக்குவரத்துக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்டது.
மத்தல திட்டத்தில் தாமதமேற்பட்டுள்ளதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில செயற்திட்டங்களை நாம் அமுல்படுத்துவதற்கு காலம் தேவைப்படுகின்றது. இவ்வாறு இந்திய முன்வைத்த சில திட்டங்களை இலங்கை மறுத்திருந்தது. குறிப்பாக சூரிய சக்தி மின்திட்டம், நிலக்கரி மின்திட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம். நாம் தற்போது பல செயற்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடிகின்றது.
இந்தியாவில் பொதுத்துறைகளை தனியார் மயப்படுத்தியுள்ளோம். இவ்வாறான நடிவடிக்கையே பொருளாதாரத்தில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தலைமைத்துவம் என்பது இவ்வாறான மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது. “வேகமும் சக்தியும்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
சில திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தும் போது பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதை தீர்ப்பது குறித்து எமது நாட்டின் பிரதமர் துறைசார்ந்தவர்களுடன் சேர்ந்து பேசுகின்றார்.
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இம் மாத இறுதிக்குள் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும். அத்துடன் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை கழகம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “இந்திய கதை : சீர்திருத்தம் | செயல்திறன் | மாற்றம்” என்ற தலைப்பிலான கேள்வி பதில் நிகழ்சியை இலங்கை பத்திரிகை கழகத்தின் தலைவர் குமார் நடேசன் நெறிப்படுத்தினார்.