இலங்கையில் எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இந்தியா விருப்பம்

நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி, மறுபயன்பாடு, மறுசுழற்சி, மறுவடிவமைப்பு, மறுஉருவாக்கம் போன்ற நிலைத்தன்மையை நோக்கிய முக்கியமான படிகள் இந்தியாவின் கலாசார நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அபரிமிதமான புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய பாக்லே, நிலையான சக்தி மூலங்களிலிருந்து அதிக சக்தியை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய துறையாக கல்வி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ், இலங்கை தொழில்நுட்ப வளாகத்தில் முதுகலைப் படிப்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், இலங்கை மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை முதல் முனைவர் பட்ட படிப்பு வரை நூற்றுக்கணக்கான முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இலங்கையில் கல்வியைத் தொடரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் தனித்தனியாக வழங்கப்படுவதாக கோபால் பாக்லே மேலும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்து்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் – தமிழக சட்ட சபையில் தீர்மானம்

தமிழ் நாடு சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இன்று சட்டசபையில் உரையாற்றும் போதே முதல்வர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது.

அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள்.

அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஹிந்தி மொழி சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ் இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை – இந்திய மத்தியஸ்தம் கோரி இந்திய துணை தூதுவரிடம் மகஜர்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற்குழியில் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது- தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர். மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா விகாரையில் சனிக்கிழமை (7) இரவு மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரருடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்படுகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பல்வேறு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புக்களின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல், நாட்டின் நடைமுறையில் உள்ள உண்மைத்தன்மைகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு நட்பு நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாட்டு மக்கள் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பௌத்த மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளின் நல்லுறவு பலம் பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா குறுகிய காலத்துக்குள் 4 பில்லியன் டொலரை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது.

விசேடமாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவுக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் உரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக 1 பில்லியன் டொலர் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும். இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றார்

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ஜனாதிபதி

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர, ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் அமர்வுகள் நிதி, சுற்றுச்சூழல், வெளியுறவு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தக நிலைகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு நடைபெறவுள்ளது.

நான்கு அமர்வுகள் ஜனவரி 12ஆம் திகதியும், ஆறு அமர்வுகள் ஜனவரி 13ஆம் திகதியும் நடைபெறும். மொத்தத்தில் இந்த மாநாட்டுக்காக 120 நாடுகளுக்கு டில்லி, அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹவ – ஓமந்தை ரயில் பாதைபுனரமைப்பு பணிகள் இந்திய உயர்ஸ்தானிகரால் ஆரம்பித்து வைப்பு

வடக்கு புகையிரத பாதையின் மஹவ – ஓமந்தை வரையான பாதையை புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மதவாச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக , அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரூ. 33 பில்லியன் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான சர்வதேச ஐஆர்சீஓஎன் இந்த ரயில்வே புனரமைப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்தியாவினால் பேருந்துகள் அன்பளிப்பு

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்  பந்துல குணவர்தனவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக இந்திய உதவின்கீழ் 500 பஸ்கள் இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.