சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – யுனிசெவ்

அதிகரிக்கும் உணவுப்பாதுகாப்பின்மை வறுமை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் புலம்பெயர்வு போன்றவற்றால் இலங்கையில் அனேக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் விடுகின்றனர் என யுனிசெவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

2022 இல் சிறுவர் பாதுகாப்பு விவகாரங்கள் அதிகரித்துள்ளன குறிப்பாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளில் அவை அதிகரித்துள்ளன என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கின்றனர், அதிகரிக்கும் உணவுப்பாதுகாப்பின்மை வறுமை உள்நாட்டு வெளிநாட்டு தொழில் புலம்பெயர்வு போன்றவற்றால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கின்றனர் என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

இலங்கை 2023 ம் ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் மோசமான பொருளாதார நெருக்கடியின் பிடியில் உள்ளது 2.9 மில்லியன் சிறுவர்கள் உட்பட 6.2 மில்லியன் இலங்கையர்களிற்கு 2023 இல் மனிதாபிமான உதவி அவசரமாக தேவைப்படுகின்றது எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கும் வருமான பாதுகாப்பின்மை அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக குடும்;பங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையி;ல் உள்ளன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

2002 முழுவதும் தொடர்ச்சியான அடிக்கடி ஏற்பட்ட இயற்கை அழிவுகள் விவசாய துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விளைச்சலை அழித்தன எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை உணவு உற்பத்தியில் 40 வீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் 2022 ஒக்டோபர் முதல்2023 பெப்ரவரி வரை உணவுபாதுகாப்பின்மை மேலும் மோசமடையும் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

5.3 மில்லியன் மக்கள் ஏற்கனவே உணவுகளை தவிர்க்கின்றனர் இது எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் பொருளாதார நெருக்கடியால் ரயர்கள், வாகன உதிரிப்பாகங்கள் இன்றி பாதிப்பு

மாலியில் நிலைகொண்டு ஐ.நா அமைதிப்படையில் கடைமையாற்றும் இலங்கை இராணுவத்தினர் கவச வாகனங்கள், இராணுவ வாகனங்களுக்கான ரயர்கள் மற்றும் விமானங்கள், உலங்குவானூர்தி , ஏனைய வாகனங்களுக்கான உதிர்ப்பாகங்கள் இன்றி தமது கடைமைகளை முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 240 இலங்கை இராணுவத்தினர் மாலியில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் உதவிகளை கொண்டு செல்லும் வாகன தொடரணிகளுக்கு 1200 km வரையான தூரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ரஷ்ய மற்றும் சீனதயாரிப்பு கவச வாகனங்களை பாதுகாப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன உதிரிப்பாகங்கள், ரயர்கள் இன்றி இக் கவச வாகங்களில் பல சேவையிலீடுபடுத்தப்படாமல் தரித்து வைக்கப்பட்டுள்ளன. மோசமான காலநிலை மற்றும் வீதிகள் காரணமாக விமானப்படையினரின் விமானங்கள், ஆயுத தளபாடங்களும் பராமரிப்பு பணிக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளன.

இதுவரையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பல்வேறு குழுக்களால் நடாத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், வெளிநாடுகளில் அமைதி காக்கும் படையினருக்கு சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் சீனாவில் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ஹெலிகாப்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் அருண ரணசிங்க, மேற்படி ஹெலிகாப்டர்களின் மறுசீரமைப்பு மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்கான நிதி 2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் ஐ.நா அமைதி காக்கும் இலங்கைப் இராணுவத்தினர் இலங்கைக்கு 24 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித் தந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என USAID நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தவேளை சமந்தா பவர் இதனை தெரிவித்துள்ளார் என USAID பேச்சாளர் ஜெசிகா ஜெனிங்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மீட்சி வளர்ச்சிக்கு யுஎஸ்எயிட் எவ்வாறு உதவலாம் என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் இலங்கையின் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களின் அவசரதேவைகள் உட்பட இலங்கை எதிர்கொண்டுள்ள குழப்பமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்கான யுஎஸ்எயிட்டின் அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களையும் இணைந்து முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.

 

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினர் இன்று(23) காலை 8.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனை சந்தித்து தமது திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

உலக உணவுத்திட்டத்தின் சகோதர நிறுவனமான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) சுகாதாரம் மற்றும் நலன் பேணல் சேவைகளுக்கான மேலதிக பண உதவியாக ஐயாயிரம் ரூபாவினை வழங்கும் திட்டத்தினை முல்லைத்தீவில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் சுகாதார வைத்திய சேவைகள் அதற்கான போக்குவரத்து மற்றும் போசாக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும்.

இதேவேளை உலக உணவுத் திட்டம்(WFP) உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கி வருகிறது.

தாய்வழி சுகாதாரம் மற்றும் விரிவான பாலியல் கல்வி மற்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நிலைமையின் விளைவாகWFP, UNFPA உடன் இணைந்து மிகவும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு உதவுவதுடன், குறிப்பாக பெண்களின் அத்தியாவசிய தேவைகளை பண மானியம் மூலம் பூர்த்தி செய்ய உத்தேசித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு சமீபத்திய ஆய்வுகளின்படி, பொருளாதார நெருக்கடியால் பெண்கள் விகிதாசாரத்தில் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படைப் பொருட்களுக்கான விலைகள் உயர்ந்துள்ளதால், WFP மற்றும் UNFPA பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.

குறித்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அதிகாரிகளான நிசாடி மற்றும் சிகார் ஆகியோருடன் உலக உணவுத் திட்டத்தின் மாவ‌ட்ட பொறுப்பதிகாரி ஜெயபவாணி, மாவட்ட உலக உணவுத்திட்ட உத்தியோகத்தர்கள், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா பிரதிநிதிகள்

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  ஐ.நாவுக்கான சிறப்பு அதிகாரிகள் நேற்று (19) குழு வட மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது எதிர்கால வடக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடக்கு அபிவிருத்திக்கு தமது தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என ஐ.நா நிறுவனப் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரிவித்தனர்

குறித்த சந்திப்பில் ஐ.நாவின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பீட்டர் நிக்கோலஸ் டியு, மற்றும் இலங்கைக்கான ஐ.நா  பதிவிட பிரதிநிதி ஹான சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐ.நா. அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியின் தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தனர்.

கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா. நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.

 

 

 

இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐ.நா. உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன.

இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் என கொழும்பில் உள்ள ஐ.நா. காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது

யாழ். மாநகர மேயர் ஐ.நா. குழு இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாநகர சபையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்கள ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த சந்திப்பின் போது, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின் நிறைவில், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு, நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர், பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அரசியல் தீர்வு விடயத்தில் ஐ.நா பங்களிப்பு அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி பங்கேற்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தனர்.

கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் ஐ.நா குழுவினருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் 9,300 மெட்ரிக் தொன் யூரியா விநியோகம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அமெரிக்க-யுஎஸ்எய்ட் (USAID), நிதியுதவியுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் சிறுபோக நெல் விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களில் தகுதியான விவசாயிகளின் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநியோக பட்டியல்கள் 18, நவம்பர் 2022 வரை காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77 ஆவது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பித்தார்.

2022 செப்டெம்பர் 12 முதல் ஒக்டோபர் 7 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களில் இலங்கை தொடர்பான தீர்மானமும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த தீர்மானம் 20 க்கு 7 என்ற வாக்கு விகிதத்தில் நிறை வேற்றப்பட்டது.

இதேவேளை இலங்கை மீதான தீர்மானத்தை நடை முறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கவேண்டியேற்படும்.

இந்தநிலையில் அண்மைய ஆண்டுகளில், மனித உரிமைகள் பேரவை, தமது அதிகரித்து வரும் பணிகளின் காரணமாக நிதிச்சவால்களை எதிர்கொள்கிறது என்று மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் தெரிவித்துள்ளார். எனவே இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை, நிதியளிக்கவேண்டும் என்று ஃபெடரிகோ வில்லேகாஸ் கோரிக்கை விடுத்தார்.